திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ரிலையன்ஸ் 42-ஆவது மாநாட்டில் ஜியோ ஃபைபர் சேவை: முகேஷ் அம்பானி அறிமுகம்

DIN | Published: 12th August 2019 02:41 PM

 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-ஆவது வருடாந்திர மாநாடு மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அடுத்த 4ஜி மொபைல் தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கேய் ஓஎஸ் ஆகியன மீடியா டெக் உடன் இணைந்துள்ளது. இந்த மொபைல் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வணிக ரீதியில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ. 4,500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

ஜியோ மீது நம்பிக்கை வைத்த இந்திய மக்களுக்கு ஜியோ குடும்பத்தார் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களின் ஆதரவால் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமாக மட்டுமல்லாது உலகின் இரண்டாம் பெரும் நிறுவனமாகவும் ரிலையன்ஸ் வளர்ந்துள்ளது. நுகர்வோர் ரீதியிலான துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் போதிய சேவையை வழங்க முடியாது என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், அவற்றை முறியடித்துள்ளோம். உலகின் அதிவேக வளர்ச்சியைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் தற்போது 340 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. எனவே 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெறுவதே அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற சில்லரைத் தொழில்களை ஒன்றாக இணைத்தாலும் ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி பன்மடங்கு பெரியது. அனைத்து இந்தியர்களும் டிஜிட்டல் முறையில் இணையவேண்டும் என்பதே ஜியோவின் கனவு. இந்தியாவில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தும் தனியார் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.67 ஆயிரம் கோடி அதிகப்படியாக வரி செலுத்தியுள்ளோம்.

தற்போதைய காலகட்டத்தில் நாட்டின் எதிர்காலமும் ரிலையன்ஸின் எதிர்காலமும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. இந்தியா புதிய இந்தியாவாக வளர்ந்து வரும் சூழலில் ரிலையன்ஸும் புதிய ரிலையன்ஸாக உருவாகும். 2022-ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர்களாக நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என நமது பிரதமர் மோடி குறிக்கோள் நிர்ணயித்துள்ளார். 2030-ல் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டும் என நான் நம்புகிறேன். சில துறைகளில் பொருளாதார சூழல் வீழ்ச்சியில் இருந்தாலும் அது தற்காலிகமானதே. இந்தியாவின் அடிப்படைகள் மிகவும் பலமானதாகவே உள்ளன.

எண்ணெய் முதல் ரசாயனம் வரையிலான துறையைப் பொறுத்தவரையில் சவுதி அரம்கோ நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறையில் சவுதி அரம்கோ நிறுவனம் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 20 சதவீத பங்கை முதலீடு செய்கிறது. 

மிகவும் குறைந்தபட்ச செலவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கு முன்னேற்றம் அடைய முடியும். இணையதள வேகம் ஒரு நொடிக்கு 1 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதனைப் பயன்படுத்தி தொலைக்காட்சி மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் விடியோ கால் பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பத்து கோடி இந்தியர்கள் ஜியோ மூலமாக விடியோ கால் மேற்கொள்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் முறையில் விர்ச்சுவலாக உடைகளை அணிந்து தேர்வு செய்யலாம்.

புதிதாக வீடுகளுக்கான ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1,600 நகரங்களில் சுமார் 20 மில்லியன் இல்லங்களிலும் 15 மில்லியன் தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் தொடக்க சலுகையாக 4கே தொலைக்காட்சி மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது.

திரைப்படம் வெளியாகும் அதே சமயம் வீட்டிலிருந்தே ஜியோ ஃபைபர் மூலம் அந்த திரைப்படத்தைக் காண முடியும். இதை ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம். இத்திட்டம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஆகும். ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10,000 ரூபாய் வரை சந்தா தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வருவாய் 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது எந்த இந்திய நிறுவனத்தாலும் எட்டமுடியாத இலக்காகும்.

இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Reliance Mukesh Ambani Reliance 42nd AGM Reliance Industries Limited chairman Mukesh Ambani addresses the company’s 42nd AGM

More from the section

பொருளாதார மந்தநிலை ஏன்?
ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிகர லாபம் 212 சதவீதம் உயர்வு
புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி உஜ்ஜீவன் வங்கி செபிக்கு விண்ணப்பம்