திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

வட்டி குறைப்பு எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 277 புள்ளிகள் அதிகரிப்பு

DIN | Published: 07th August 2019 01:00 AM


ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 277 புள்ளிகள் அதிகரித்தது.
நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி புதன்கிழமை அறிவிக்க உள்ளது. இந்த அறிவிப்பில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தை வட்டாரத்தில் பரவலாக காணப்பட்டது. அதன் காரணமாக, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டனர்.
உலக சந்தைகளைப் பொருத்தவரை, சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யுவானின் மதிப்பை மேலும் குறைத்தது சாதகமான அம்சமாகவே பார்க்கப்பட்டது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.
பொறியியல் சாதனங்கள், தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட், நிதி, வங்கி, உலோகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 2.12 சதவீதம் வரை உயர்ந்தன.
அதேசமயம், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 0.68 சதவீதம் வரை குறைந்தன.
யெஸ் வங்கி பங்கின் விலை 5.30 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. அதனைத் தொடர்ந்து, டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், மாருதி சுஸுகி பங்குகளின் விலை 3.97 சதவீதம் வரை உயர்ந்தன.
பவர்கிரிட், டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலை 1.52 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 277 புள்ளிகள் அதிகரித்து 36,976 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 10,948 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பொருளாதார மந்தநிலை ஏன்?
ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிகர லாபம் 212 சதவீதம் உயர்வு
புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி உஜ்ஜீவன் வங்கி செபிக்கு விண்ணப்பம்