திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.323 கோடி

DIN | Published: 07th August 2019 01:01 AM

என்எல்சி இந்தியா நிறுவனம் 30.6.2019 அன்றுடன் நிறைவடைந்த நிகழ் நிதியாண்டின் (2019-20) முதல் காலாண்டில் ரூ.323.04 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.07 சதவீதம் அதிகமாகும்.  
 இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் அதன் தலைவர்  ராகேஷ்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் நிகழ் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,676.46 கோடியை மொத்த வருவாயாகப் பெற்று, ரூ.323.04 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் நிகர லாபத்தை விட 1.07 சதவீதம் அதிகம்.
பழுப்பு நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 43.77 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் முதல் காலண்டில் வெட்டி எடுத்ததைவிட 20.91 சதவீதம் அதிகமாகும். 
மின் உற்பத்தி மற்றும் விற்பனை: நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மின் நிலையங்கள் 505 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்ததில், 430 கோடியே 59 லட்சத்து 10 ஆயிரம் யூனிட் மின்சாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மின் உற்பத்தியில் 3.59 சதவீதமும், மின்சக்தி விற்பனையில் 4.72 சதவீதமும் அதிகமாகும். 
நேரடி மின் சக்தி விற்பனை உயர்வு: முந்தைய நிதியாண்டின் முதல் காலண்டில் ஒரு யூனிட் ரூ.3.93-ஆக இருந்த சராசரி மின் கட்டணமானது, நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு யூனிட்டுக்கு ரூ.3.70-ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதனால், முந்தைய  நிதியாண்டின் முதல் காலாண்டில் மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்த மின்சக்தியில் 36 கோடியே 60 லட்சத்து 2  ஆயிரம் யூனிட்டை பயன்படுத்தாத நிலையில், நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் அதனளவு 32 கோடியே 51  லட்சம் யூனிட்டாகக் குறைந்துள்ளது.  நிகழ் நிதியாண்டின் முதல் காலண்டில் மின்வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்த  மின்சக்தியில் பயன்படுத்தாத மின்சக்தி 11.18 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மின் நிலையங்களின் உற்பத்தித் திறன்: கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மின் நிலையங்களின் உற்பத்தித் திறன் 67.37 சதவீதத்திலிருந்து, நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 69.52 சதவீதத்தை எட்டியுள்ளது. 
பசுமை மின் சக்தி: புதுப்பிக்கவல்ல மின் சக்தி மூலம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 29 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 11 கோடியே 65 லட்சத்து 3 ஆயிரம் யூனிட்டாக இருந்தது.
காலாண்டு வளர்ச்சி விகிதம்: வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகுப்புக்கு முன் ஈட்டிய வருவாயானது நிகழ் நிதியாண்டின் முதல் காலண்டில் ரூ.754.48 கோடி. இது, முந்தைய நிதியாண்டைவிட 2.95 சதவீதம் கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பொருளாதார மந்தநிலை ஏன்?
ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்
புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி உஜ்ஜீவன் வங்கி செபிக்கு விண்ணப்பம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிகர லாபம் 212 சதவீதம் உயர்வு