ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எதிரொலி! பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபமெடுத்ததையடுத்து பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. 
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எதிரொலி! பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி


காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபமெடுத்ததையடுத்து பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்த நிலைக்குச் சென்றது. காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு முதலீட்டாளர்களின் மனநிலையில் அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
மேலும், சர்வதேச நிகழ்வாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு செப்டம்பர் 1 முதல் அமெரிக்கா மேலும் புதிய வரிகளை விதிக்க முடிவெடுத்துள்ளது வர்த்தக போரை தீவிரமாக்கும் என்ற நிலைப்பாட்டால் உலக அளவில் மட்டுமின்றி உள்ளூர் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது.
நிறுவனங்களின் பலவீனமான காலாண்டு நிதி நிலை முடிவுகள், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து உலோகம், வங்கி, மோட்டார் வாகனம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், உள்கட்டமைப்பு, மருந்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் சரிவை சந்தித்தன. எரிசக்தி துறை குறியீட்டெண் 2.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், யெஸ் வங்கி பங்கின் விலை 8.15 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 5.25 சதவீதமும், பவர் கிரிட் 4.42 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.48 சதவீதமும், கோட்டக் வங்கி 3.13 சதவீதமும் குறைந்தன.
அதேசமயம், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ பங்குகளின் விலை முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பால் ஏற்றம் பெற்றன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 418 புள்ளிகள் (1.13%) வீழ்ச்சியடைந்து 36,699 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 134 புள்ளிகள் (1.23%) சரிந்து 10,862 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com