வியாழக்கிழமை 18 ஜூலை 2019

பங்குச் சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 495 புள்ளிகள் இழப்பு

DIN | Published: 23rd April 2019 01:09 AM


எரிசக்தி மற்றும் நிதி துறை சார்ந்த பங்குகள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைக் கண்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு  74 டாலரை தாண்டியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு இந்திய பங்குச் சந்தையில் எரிசக்தி துறை பங்குகளின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இந்த விலை உயர்வு சாதகமாக இருக்காது என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது.
இதைத் தவிர, நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகளும் ஏற்ற இறக்கமாகவே உள்ளது. மேலும்,  பெரிய வங்கிகளின் நிதி நிலை முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, எரிசக்தி துறை பங்குகள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதால் அத்துறையின் குறியீட்டெண் 2.72 சதவீதம் வரை குறைந்தது. அதேபோன்று, ஜெட் ஏர்வேஸில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி வங்கிகளை பாதிக்கும் என்ற நிலைப்பாட்டால்  நிதி துறை குறியீட்டெண்ணும் 2 சதவீத சரிவை கண்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 2.76 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. யெஸ் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ்  வங்கி பங்குகளின் விலை 6.62 சதவீதம் வரை சரிந்தன.அதேசமயம், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், என்டிபிசி மற்றும் பவர்கிரிட் பங்குகளின் விலை 0.89 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,645 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 158 புள்ளிகள் சரிந்து 11,594 புள்ளிகளில் நிலைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு
2018-19 நிதியாண்டில் ரூ.38,000 கோடி மறைமுக வரி மோசடி: மத்திய அரசு தகவல்
ரூ.100 கோடியில் சூரிய ஒளி மின்னாலை அமைக்க பெல் நிறுவனத்துக்கு அனுமதி
ஃபெடரல் வங்கி நிகர லாபம் 46 சதவீதம் அதிகரிப்பு
பயணிகள் வாகன சில்லறை விற்பனை 4.6 சதவீதம் குறைவு: எஃப்ஏடிஏ