சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

கார் விற்பனையில் மாருதி ஆல்டோவுக்கு முதலிடம்

DIN | Published: 23rd April 2019 01:10 AM


கடந்த 2018-19 நிதியாண்டில் கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் குறைந்த விலை பிரிவு மாருதி ஆல்டோ முதலிடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளே ஆக்கிரமித்துள்ளன.

இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் கார் விற்பனையில் டாப் 10 பட்டியலில் 7 இடங்களை மாருதி சுஸுகியும், 3 இடங்களை ஹுண்டாய் மோட்டார் நிறுவனமும் தக்க வைத்துக் கொண்டுள்ளன. இதிலிருந்து, உள்நாட்டில் பயணிகள் கார் விற்பனையில் அந்த இரண்டு நிறுவனங்களும் முன்னிலை வகிப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. 

கடந்த 2018-19 நிதியாண்டில் 2,59,401 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய நிதியாண்டில் 2,58,539-ஆக இருந்தது. மாருதி ஆல்டோ கார்கள் அதிகளவில் விற்பனையானதையடுத்து கடந்த நிதியாண்டில் விற்பனையான டாப் 10 கார் பட்டியலில் இது முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் மாருதி செடன் டிசையர் உள்ளது. இக்கார்களின் விற்பனை 2,40,124-லிருந்து 2,53,859-ஆக அதிகரித்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனை 1,75,928 என்ற எண்ணிக்கையிலிருந்து 2,23,924-ஆக அதிகரித்ததையடுத்து பட்டியலில் இது நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  நான்காவது இடத்தை பலேனோ பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் விற்பனை 1,90,480-லிருந்து 2,12,330-ஆக அதிகரித்துள்ளது.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா விற்பனை 1,48,462-லிருந்து 1,57,880-ஆக அதிகரித்ததையடுத்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆறாவது இடத்தை ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் எலைட் ஐ20 தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஏழு மற்றும் எட்டாவது இடங்களையும்   இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான கிராண்ட் ஐ10, கிரெட்டா ஆகிய கார்கள் பிடித்துள்ளன. டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் மாருதி சுஸுகியின் வேகன் ஆர் உள்ளது.   முந்தைய நிதியாண்டைப் போலவே கடந்த 2018-19 நிதியாண்டிலும் பத்தாவது இடத்தில் மாருதி செலிரியோ கார் உள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பண்டிகை காலத்தில் கார் விற்பனை வேகமெடுக்கும்: மாருதி சுஸுகி நம்பிக்கை
பங்குச் சந்தையில் திடீர் எழுச்சி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: மூடிஸ்
பொருளாதாரத்தை சீரமைக்க அசாதாரண நடவடிக்கை தேவைப்படுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர்
சென்னையில் பிரம்மாண்ட அளவிலான டெலிவரி மையம்! - அமேசான் அறிவிப்பு