திங்கள்கிழமை 22 ஜூலை 2019

தங்கம் இறக்குமதி 3 சதவீதம் குறைந்தது

DIN | Published: 20th April 2019 12:47 AM


நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த 2018-19 நிதியாண்டில் 3 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
கடந்த 2017-18 நிதியாண்டில் 3,370 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதியானது. இந்தநிலையில், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் அதன் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து 3,280 கோடி டாலராகியுள்ளது. இதற்கு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தங்கம் இறக்குமதி எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 31.22 சதவீதம் அதிகரித்து 327 கோடி டாலராக காணப்பட்டது.
இந்திய ஆபரண துறையின் தேவை அதிகரிப்பால், உலகளவில் நம்நாடு அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில், சென்ற மார்ச்சில் ஆபரண வர்த்தகர்கள் ஏற்றுமதியை அதிகரித்ததால் தங்கம் இறக்குமதி கணிசமாக உயர்ந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்நியச் செலாவணி செலவு மற்றும் வரத்து ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறை எனப்படுகிறது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக அதிகரித்தது. இது, 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் 2.1 சதவீதமாக காணப்பட்டது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்புக்கு, மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட வர்த்தக பற்றாக்குறையே முக்கிய காரணம்.
அந்நியச் செலாவணி அதிக அளவில் வெளியேறுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. தற்போது, அதன் இறக்குமதி மீது 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
ஆபரண ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில்,  தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதே உள்நாட்டு ஆபரண வர்த்தகர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வேலூர்: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்
தங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு
அந்நியச் செலாவணி கையிருப்பு 111 கோடி டாலர் சரிவு
ஹெச்டிஎஃப்சி வங்கி லாபம் 18% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.10,104 கோடி