புதன்கிழமை 17 ஜூலை 2019

மூழ்கும் அபாயத்தில் இருந்த லஷ்மி விலாஸ் வங்கி, தத்தெடுத்துக் கொண்ட பணக்கார மும்பை பெற்றோர்!

By RKV| DIN | Published: 06th April 2019 05:29 PM

 

தமிழ்நாட்டில் கரூர் பகுதியைச் சார்ந்த 7 பெரிய வர்த்தகர்கள் இணைந்து வி எஸ் என் ராமலிங்க செட்டியார் தலைமையில் 1926 ஆம் ஆண்டு தொடங்கியதே லஷ்மி விலாஸ் வங்கி. துவக்க காலத்தில் இந்த வங்கியின் நோக்கம் அந்தப் பகுதியைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயிகள் ஆகியோரது பணத்தேவையை பூர்த்தி செய்வதாகவே இருந்தது. அவர்களுக்குத் தேவையான நிதியைக் குறைந்த வட்டிக்கு கடனாக அளித்து குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தக் கடனைப் பெற்று அங்கு அவர்களது வர்த்தகத்தில் எவ்வித சுணக்கமும் நேராமல் நிர்வகிப்பதாகவே இருந்து வந்தது. 

சுமுகமாகச் சென்று கொண்டிருந்த லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகள் ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் & சிவிந்தர் சிங்குக்கு அவர்கள் லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த ரெலிகேர் நிறுவனத்தின் பெயரில் வைத்திருந்த வைப்புத் தொகையான ரூ 794 கோடிக்கு ஈடாக மொத்தமாக ரூ 720 கோடி லோன் தொகையை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்த வகையில் பெருஞ்சிக்கலில் மாட்டிக் கொண்டது.

பின்னாட்களில் ரான்பாக்ஸி பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத போது அதனிடமிருந்து லோன் தொகையைத் திரும்பப்பெற லஷ்மி விலாஸ் பேங்க் ரெலிகேரின் வைப்புத் தொகை மூலமாக முயல அதை எதிர்த்து ரெலிகேர், லஷ்மி விலாஸ் வங்கியின் தில்லி கிளை மீது தொடுத்த வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு வாக்கில் லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகள் கரூரைத் தாண்டி வெளிமாவட்டங்களிலும் தனது கிளைகளைப் பரப்பவே கரூரில் இருந்து வங்கியின் தலைமைச் செயலகம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. அன்று முதல் வங்கியின் கெட்ட காலம் துவங்கி விட்டது என்கிறார் அதன் முன்னாள் பொது மேலாளர்களில் ஒருவர். அது குறிப்பிட்ட பிரிவினரின் தேவைக்காக உண்டாக்கப்பட்ட சிறு வங்கி, அகலக்கால் வைக்க ஆசைப்பட்ட போது அதற்கான தேவைகளைத் திட்டமிடத் தவறியதில் தனக்கான அழிவைத் தேடிக் கொண்டது என்கிறார் அவர்.

இத்தகைய பரிவர்த்தனைகள் தற்போது மூழ்கும் அபாயத்தில் உள்ள பிற தனியார் தமிழக வங்கிகளுக்கும் இதே போன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடக்கூடிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கலாம் என்று கருதப்படுகிறது.

லஷ்மிவிலாஸ் வங்கியைத் தத்தெடுத்திருக்கும் மும்பை வர்த்தக நிறுவனம் எது தெரியுமா? அதன் பணக்கார மும்பை பெற்றோர் ‘இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனம்’. தற்போது இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பின் ‘இந்தியாபுல்ஸ் லஷ்மி விலாஸ் வங்கி’ என்ற பெயரில் பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்த வங்கியின் ஒருங்கிணைந்த கடன் தொகை தற்போது 1.23 லட்சம் கோடி ரூபாய்கள்.

கடந்த ஒரு வருட காலமாகவே வாராக்கடன் தொகைகளால் திணறிக் கொண்டிருந்த லஷ்மி விலாஸ் வங்கியின் நெருக்கடி இந்த இணைப்பின் வாயிலாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஒருவருட காலமாகவே லஷ்மி விலாஸ் வங்கியின் மூலதன விகிதம் 7.57% மாகச் சரிந்து 2018 ஆம் ஆண்டின் இறுதி முதல் கடந்த மூன்று மாத காலமாக 9.67% ல் வந்து நின்றது. கடந்த ஐந்து காலாண்டுகளிலும் வங்கியின் லாபவிகிதம் கடும் சரிவிலேயே இருந்து வந்தது. தற்போது இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட வகையில் இந்த வங்கியின் தலைமையகம் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனராக சமீர் கெலாட் இப்புதிய நிறுவனத்துக்கும் நிர்வாக இயக்குனராகத் தொடர்வார் என்று தகவல்.

லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் பார்த்தசாரதி முகர்ஜி இதுகுறித்துப் பேசும் போது, ஒரு அனாதைக் குழந்தையை விற்பனை செய்வதற்காக நாங்கள் எதிர்கொண்ட  அனைத்து நிராகரிப்புகளும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. இந்தப் புதிய இணைப்பின் மூலமாக லஷ்மி விலாஸ் வங்கிக்கு புதிய சிறகுகள் முளைக்கும் என்று நம்புகிறேன், எங்களுக்கொரு பணக்காரப் பெற்றோர் கிடைத்துள்ளனர் என்று இந்த இணைப்பின் மீதான தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : merger லஷ்மி விலாஸ் வங்கி இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் வர்த்தக இணைப்பு வங்கி இணைப்பு lakshmi vilas bank india bulls housing finance india bulls lakshmi vilas bank

More from the section

2018-19 நிதியாண்டில் ரூ.38,000 கோடி மறைமுக வரி மோசடி: மத்திய அரசு தகவல்
ரூ.100 கோடியில் சூரிய ஒளி மின்னாலை அமைக்க பெல் நிறுவனத்துக்கு அனுமதி
ஃபெடரல் வங்கி நிகர லாபம் 46 சதவீதம் அதிகரிப்பு
பயணிகள் வாகன சில்லறை விற்பனை 4.6 சதவீதம் குறைவு: எஃப்ஏடிஏ
2-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு