சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

கார் விற்பனையில் முதலிடம் பிடித்த மாருதி ஸ்விஃப்ட்

DIN | Published: 25th December 2018 01:00 AM


கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கார்கள் விற்பனையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ரகக் கார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த நவம்பர் மாதத்தில், மாருதியின் 22,191 ஸ்விஃப் ரகக் கார்கள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், இந்த ரகக் கார்களின் விற்பனை 13,337-ஆக இருந்தது. அப்போது, விற்பனைப் பட்டியலில் ஸ்விஃப்ட் கார்கள் 6-ஆவது இடத்தை வகித்த நிலையில், நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் அந்த ரகக் கார்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
இரண்டாவது இடத்தைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் மாதம் அந்த இடத்தை வகித்த மாருதி நிறுவனத்தின் டிசையர் ரகக் கார்கள், நவம்பரிலும் அந்த இடத்தைத் தக்க வைத்துள்ளன. 2017-ஆம் ஆண்டில் 22,492-ஆக இருந்த அந்த ரகக் கார்களின் நவம்பர் மாத கார் விற்பனை, நடப்பாண்டில் சற்று குறைந்து 21,037-ஆக இருந்தாலும், டிசையர் கார்கள் தனது இடத்தைத் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நிறுவனத்தின் பிரீமியம் வகைக் கார்களான பலேனோ, கடந்த நவம்பர் மாத விற்பனையில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. அந்த மாதம் அவற்றின் விற்பனை 18,649-யாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்தக் கார்களின் விற்பனை 17,760-ஆக இருந்தது.
நிறுவனத்தின் குறைந்த விலைப் பிரிவைச் சேர்ந்த ஆல்ட்டோ ரகத்தைப் பொருத்தவரை, கடந்த 2018-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 24,166 கார்கள் விற்பனையாகி முதலிடத்தை வகித்தன. ஆனால், இந்த ஆண்டின் இதே மாதத்தில் வெறும் 14,378 கார்கள் மட்டுமே விற்பனையானதால் அந்த ரகம் 4-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள மாருதியின் விடாரா பிரெஸ்ஸா ரகம், நவம்பரில் 14,378 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டின் அதே மாதத்தில் 14,458 கார்கள் விற்பனையாகி 4-ஆவது இடத்தை வகித்த அந்த ரகம், தற்போது கீழிறங்கியுள்ளது.
மாருதி நிறுவனத்தின் வேகன்-ஆர் ரகம், 11,331 கார்கள் விற்பனையாகி 6-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த நவம்பர் மாத கார் விற்பனையில் முதல் 6 இடங்களை வகிக்கின்றன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரிமியம் வகைக் காரான எலைட் ஐ20 ரகக் கார்கள், நவம்பர் விற்பனையில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. அந்த மாதத்தில் அந்த ரகத்தைச் சேர்ந்த 10,555 கார்கள் விற்பனையாகின. கடந்த 2017-ஆம் ஆண்டின் நவம்பரில் எலைட் ஐ20 ரகக் கார்கள் 8-ஆவது இடத்தை வகித்திருந்த நிலையில், தற்போது அவை ஒரு படி முன்னேறியுள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்போர்ட் பயன்பாட்டு வாகன ரகமான கிரெட்டா, கடந்த நவம்பரில் 9,677 கார்கள் விற்பனையாகி 
8-ஆவது இடத்தையும், கிராண்ட் ஐ10 ரகத்தைச் சேர்ந்த 9,252 கார்கள் விற்பனையாகி 9-ஆவது இடத்தையும் வகிக்கின்றன. பத்தாவது இடத்தில் மறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாண்ட்ரோ ரகக் கார்கள் பிடித்துள்ளன என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

More from the section

ஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்
இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்
தன்னிச்சையான கடன் மேலாண்மை அலுவலகத்தை அமைப்பதற்கான நேரமிது : நீதி ஆயோக்
ரூ.2,951 கோடி இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது என்டிபிசி
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை