வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.5.60 லட்சம் கோடியை எட்டும்: இஇபிசி

DIN | Published: 05th December 2018 01:08 AM


இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 8,000 கோடி டாலரை (ரூ.5.60 லட்சம் கோடி) எட்டும் என பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தை அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2017-18 நிதியாண்டில் இந்திய பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி 7,600 கோடி டாலராக இருந்தது. ஒட்டுமொத்த பொருள்கள் ஏற்றுமதியில் இது 25 சதவீதம். 
நம் நாட்டின் ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக திகழும், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தேவையானது சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, பொறியியல் சாதனங்களுக்கான ஆர்டர் விறுவிறுப்படைந்துள்ளது. 
இதன் காரணமாக, நடப்பு 2018-19 நிதியாண்டில் நாட்டின் பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி 7,800-8,000 கோடி டாலராக அதிகரிக்கும்.
பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க இத்துறையில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச விலையில் உருக்கு பொருள்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
மேலும், எம்இஐஎஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை விகிதத்தை தற்போதைய 2-3 சதவீதத்திலிருந்து 5-7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இஇபிசி தெரிவித்துள்ளது.
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 40 சதவீதம் அளவுக்கு உள்ளது.
கடந்த 2011-12 நிதியாண்டு முதல் இந்தியாவின் ஏற்றுமதி 30,000 கோடி டாலர் என்ற அளவிலேயே இருந்து வந்தது. இந்நிலையில், 2017-18-இல் ஏற்றுமதி 10 சதவீதம் வளர்ச்சியடைந்து 30,300 கோடி டாலரை எட்டியது.
பொறியியல் சாதன ஏற்றுமதி அதிகரிப்பு உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், தயாரிப்பு துறையை ஊக்குவிக்கவும், அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டவும் பெரிதும் உதவியாக உள்ளது.

More from the section

பங்குச் சந்தையில் தொடர் சரிவு
தொழில்முனைவுக்கான விதிமுறைகள் தளர்வு புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும்
ஓலாவில் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு
ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முடிவு
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு