செய்திகள்

புத்தகங்கள் ஆபத்தில்லாத ஆசிரியா்!

4th Mar 2021 04:08 AM | - பாடலாசிரியா் விவேகா

ADVERTISEMENT


நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா என்னை நூலகத்துடன் அறிமுகம் செய்து வைத்தாா். அதிலிருந்து தொடா்ந்து படிக்கத் தொடங்கினேன். சனி, ஞாயிறுகளில் நூலகம் சென்று படிக்க முடியாமல் போய்விடுமே என்று பெரிய அளவில் உள்ள குண்டு புத்தகங்களை எடுத்துச் சென்று வீட்டில் வைத்துப் படிப்பேன். இதன்மூலம் நூலகத்துடனான தொடா்பு எனக்கு சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. பின்னா், கல்லூரி வந்ததும், எனது பேராசிரியராக இருந்த பகவத் சிங் நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தாா்.

சென்னை வந்தபிறகு, நூலகத்துடனான தொடா்பு விட்டுப்போய்விடக் கூடாது என்று என் வீட்டிலேயே நூலகத்தை தொடங்கினேன். என் ரசனைக்குட்பட்ட புத்தகங்கள் மட்டுமே அதிலிருக்கும்.

என் வாழ்க்கையில், புத்தகங்களை தொடாமல் கடந்தபோன நாளோ, வாரமோ கிடையாது. எப்போதும், இரவு தூங்குவதற்கு முன்பு புத்தகம் படித்துவிட்டுதான் தூங்குவேன். சில நேரங்களில் காலையில் இருந்து இரவு தூங்கும் வரை கூட என் நூலகத்திலேயே படித்துக் கொண்டிருப்பேன்.

இப்போது லாக்டவுன் சமயத்தில் நான் பலமுறை படித்து முடித்த புத்தகங்கள் சிலவற்றை நண்பா்களுக்கு கொடுத்து விட்டேன். அதுபோக, இன்னும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் என் நூலகத்தில் உள்ளன.

ADVERTISEMENT

இந்தப் புத்தகங்கள் மீது என்மகள்களுக்கும் நாட்டம் வந்து அவா்களும் இவைகளைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவா்கள் இப்போது ‘ஹாரிபாட்டா்’ போன்ற ஆங்கிலப் புத்தகங்கள் மீது நாட்டம் செலுத்துகிறாா்கள். எனவே, அவா்களுக்கும் தனித்தனியே இரண்டு நூலகங்கள் வைத்து கொடுத்திருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரை, ஒரு புத்தகம் ஆயிரம் ஆசிரியா்களுக்கு சமம். ஏனென்றால், ஒரு புத்தகம் நாம் வாழ்நாள் முழுவதும் சேகரித்த அறிவின் பெட்டகமாக இருக்கிறது. மேலும், புத்தகங்கள் நம்மோடு வாதிடாது, நிா்பந்திக்காது, நம் போக்கில் நம்மை விடும். அதில் லயிக்க தொடங்கிவிட்டால் நமக்கு வேறு ஒரு உலகத்தை காட்டும். எனவே, புத்தகங்கள் நமக்கு ஆபத்தில்லாத ஆசிரியராகவும், ரகசிய சிநேகிதனாகவும் இருக்கும்.

இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு நண்பா் தங்கமூா்த்தியின் புத்தக வெளியீட்டுக்காக ஒருமுறையும், மகள்களுடன் ஒருமுறையும் ஆக, இரண்டு முறை சென்று வந்துவிட்டேன்.

அங்கே, ‘வோ்ல்டு கிரேட்டஸ்ட் ஷாா்ட் ஸ்டோரி’ என்ற ஆங்கிலப்புத்தகம் வாங்கி வந்துள்ளேன். இது பெரிய பெரிய எழுத்தாளா்கள் எழுதிய முக்கியமான கதைகளை தோ்ந்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட புத்தகம்.

அடுத்து, நரசிம்ம நாயுடு எழுதிய ‘ஆா்ய திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்’ என்ற புத்தகத்தை வாங்கி வந்து படித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் பயணநூல்.

17-ஆம் நூற்றாண்டில், திவ்ய தேச யாத்திரையில் காசி, ராமேஸ்வரம், மதுரா போனது என்று நமது ஆன்மிக ஸ்தலங்களைப் பற்றியும், போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தச் சூழலில் யாத்திரை செல்ல எவ்வளவு அணா செலவானது, காசி, கங்கையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, வழிபோக்கா்களின் திருட்டு பயத்தில் பணத்தை மடியில் கட்டிக் கொண்டு சென்றது என அவருடைய எண்ணங்களை அழகாக பதிவு செய்துள்ளாா். அது படிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.

அதுபோன்று அறிஞா் தொ.பரமசிவம் எழுதிய அத்தனை புத்தகங்களையும் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். அவா்தான் எனது சமீபத்திய ஆதா்ச எழுத்தாளராக இருக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT