பிரபலங்கள் - புத்தகங்கள்

‘இளைஞர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது’: ஆர்.நல்லகண்ணு

DIN

நாட்டின் சுதந்திரம் மதச் சார்பற்றதாக, மக்களின் நலனுக்கானதாக,  வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  ஆர். நல்லகண்ணு.

பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கிய 45ஆவது சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டும், ஏற்கெனவே வெளியான புத்தகங்கள் சிறப்பான விற்பனையை நோக்கியும் புத்தகக் காட்சி நகர்ந்து வருகிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்களும் அரங்குகளில் கிடைப்பதால் நாள்தோறும் புத்தகக் காட்சியை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர். வார நாள்களைக் காட்டிலும் வார இறுதி நாள்களில் கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் அரங்குகளில் குவிகின்றன. 

இவற்றுக்கு மத்தியில் சமூகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், ஆளுமைகளும் புத்தகக் காட்சிக்கு வருகை தருவது வாசகர்களுக்கும், மக்களுக்கும் உற்சாகம் தருவதாக உள்ளது. 

புத்தகக் காட்சியில் எதிர் வெளியீட்டின் சார்பில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள் எனும் புத்தக வெளியீட்டில் முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். 

நிகழ்ச்சியின்போது அவர் பகிர்ந்துகொண்டவை:

“உலகில் பிரச்னைகள் ஏராளமாக உள்ளது. சுதந்திரம் பெறுவதற்கான போராட்டம், பெற்ற சுதந்திரத்தை வளர்ப்பதற்கான போராட்டம், இப்போது தொழில் முறையிலும், சுற்றுச்சூழலிலும், மற்ற தொழில் வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டங்கள் என பல போராட்டங்கள் உள்ளன. அன்று சுதந்திரத்திற்கு முன்னால் பிரிட்டிஷர் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்ட நாடாக நம்நாடு இருந்தது.  அடிமையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு வளர்ச்சிக்கான முறையில் திட்டமிட வேண்டியிருக்கிறது.

எல்லா வகையிலும் சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பது, விவசாயத்தில் உற்பத்தி பெருக்கம், தொழில், வேலைவாய்ப்பு என இப்படி பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அரசியல் இருக்க வேண்டுமே தவிர மதவெறியைக் கொண்டதாகவோ, சாதிவெறியைக் கொண்டதாகவோ இருந்துவிடக் கூடாது. அதற்காகதான் அரசியல் சட்டம் நேர்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியல் சட்டம் பல மொழி பேசக்கூடிய நாடு, அந்த நாட்டில் எல்லா மொழிகளுக்கும் சமத்துவத்தைக் கொடுத்துள்ளது. மாநிலங்களைக் கொண்ட இந்திய ஒன்றியமும் மதசார்பற்ற ஒன்றியமாக இருக்க வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம்தான் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதிலிருந்து மாற்றம் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். அதில் இப்போது மாற்றம் கொண்டு வருவதற்கு மதத்தைச் சார்ந்த கொள்கையைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. 

இன்றைக்கு இளைஞர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்க்க வேண்டும். தொழில்கள் வளர்ச்சி பெற வேண்டும். தொழில் வளர்ச்சியை பரவலாக்குவதற்கு பதிலாக கார்ப்பரேட் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. விவசாயத்தை கார்ப்பரேட் கைகளில் கொடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். மதசார்பற்ற ஆட்சி இருக்க வேண்டும். அதுதான் இன்றைக்கு ஒன்றியத்தை எதிர்த்து குரல் கொடுக்க மதச்சார்பற்ற கூட்டணி என்ற நிலையிலேயே உருவாக்கப்படுகிறது.

நாட்டின் சுதந்திரம் மதசார்பற்றதாக இருக்க வேண்டும். மக்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் மக்கள் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான போராட்டங்களில் ஈடுபட வேண்டும். சாதி பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடாமல் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தாமல் மதச்சார்பற்ற நிலையைக் காக்க இளைஞர்கள் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்” என்றார் நல்லகண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT