பிரபலங்கள் - புத்தகங்கள்

'புதுமைப்பித்தன் கட்டுரைகள்': ஜவஹர்லால் நேரு -சாந்த சொரூபன் ராஜேந்திரப் பிரஸாத்

சாந்த சொரூபன் ராஜேந்திரப் பிரஸாத்

ஸ்ரீ எம்.எஸ். சுப்ரமணிய அய்யரைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முற்படுவது அதிகப் பிரசங்கித்தனம் அல்லது அசட்டுத்தனமான வேலையாகும். சரித்திரத்தின் சலனப் படங்களை மிகுந்த உணர்ச்சி ததும்பும் சித்திரங்களாகப் பொதுமக்களுக்கு எழுதிக் கொடுத்த ஸ்ரீ அய்யரவர்கள், தலைவர் ராஜேந்திரருடைய வாழ்க்கை வரலாற்றையும் விஸ்தரிக்கும் ஓர் சிறு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். பாபுவின் வாழ்க்கை சாரமற்ற வெறும் அரசியல்வாதியின் சிறுமைச் சாயை கவிந்த ஜீவிய சரித்திரமல்ல.

ஆனந்தம், பரமானந்தம், பிரம்மானந்தம், என்பர். இந்த ஆனந்தத்தை அடைவது எப்படி? மன அமைதி இல்லை. நிம்மதி பிறக்கவில்லை. என்ன செய்வது என்பர் சிலர். மன அமைதியை அடைவது எங்கனம்? உண்மையில் ஊருக்கு உழைத்தால் ஆனந்தம் எய்தலாம், மன அமைதியையும் பெறலாம். உள்ளங்கலந்த உண்மை ஊழியத்தினும் உயர்வு உடைய ஆனந்தம் ஒன்று உண்டோ?

உண்மையான உழைப்பில் ஆசை பறக்கும்; சுயநலம் தலைகாட்டாது; சித்தசுத்தி பிறக்கும்; சிறப்பெல்லாம் வந்து காலடியில் குவிந்து கிடக்கும். உலகோரின் உள்ளக் கோவிலிலே குடி கொள்ளலாம்.

இது தான் கர்ம வீரனின் வாழ்க்கையின் சாரம். பாபு ராஜேந்திரரின் வாழ்க்கையின் சுருக்கமும் இதுவே. அய்யரவர்கள் இதையே கருவாகக் கொண்டு பாபுவின் சரித்திரத்தை பின்னியிருக்கிறார்

ஸ்ரீ ஐயர் அவர்களின் நடை சரித்திரத்தில் மகத்தான வேலைகளை மறுபடியும் ஓவியங்களாக சிருஷ்டிக்க ஏற்றது. சில சமயம் வாக்கியங்களில் காணப்படும் அனாவசியமான மோனையும் பிராசமும் வேகத்தை கெடுக்கின்றன அது அய்யரவர்களின் குற்றம் அல்ல. தமிழ் நடை செய்த பாவம். வெறும் கவிதையிலேயே தன்னை மறந்த தமிழரசிக்கு பழைய பண்டிதர்கள் ஏற்றிவைத்த சுமை. வசனத்தை இவ்விரண்டில் இருந்து தப்பிப்பது சிறப்பாக ஐயர் அவர்களின் கடமை. அவருக்குத்தான் பழமையும் சிறப்பும் புதுமையின் அழகும் நயமாக தெரியும்

நான்கணாவிற்கு இவ்வளவு அழகான புத்தகத்தை விற்க முடியும் என்று நம்ப முடியவில்லை. உருப்படியாக பொழுதுபோக்கை விரும்புவோருக்கு ஸ்ரீ அய்யரவர்களின் ஸ்ரீ ராஜேந்திர பிரசாத் உற்ற துணைவன் என்பதில் சந்தேகமில்லை

குறிப்பிட்ட ஒருவனது மனுஷ்ய சுபாவத்திற்கும் அவனது குண விசேஷத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக் காண்பிப்பது ஜீவிய சரித்திரங்களின் இலட்சியம். பண்டித ஜவஹர்லால் வெறும் அபேதவாதி மட்டுமல்ல ஓர் பெரும் சிந்தனைவாதி. இதற்கும் இதன் பிறப்புக்கு காரணமான அவரது சுற்றுப்புற பழக்கம் வாசனைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதை ’தினமணி’ ஆசிரியர் ஸ்ரீ டி.எஸ். சொக்கலிங்கம் தமது கிரந்தத்தில் வெகுநயமாக எடுத்துக் காண்பித்துக் கொண்டுவந்திருக்கிறார். ஓர் மனிதனின் குண விசேஷங்களை, அவனது மனுஷ சுபாவத்தை விளக்க, சிறு சம்பவங்களை போல் வேறு ஒன்றும் கிடையாது, ஆசிரியர் கூறும் சிறு சம்பவங்கள் தான் எடுத்துச் சொல்ல வந்ததை நன்றாக விளக்குகின்றன. சரிதம் 1936 வரை கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழில் ஜீவிய சரித்திர கிரந்தங்கள் மிகவும் குறைவு. மிகவும் நயமாக எழுதப்படுபவை என்னவென்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் ஓர் முக்கிய ஸ்தானம் வகிப்பது ஜவஹர்லால் நேரு ஜீவிதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT