பிரபலங்கள் - புத்தகங்கள்

'பொன்னியின் செல்வன்': வேர்களை அறிய விரும்பினால்! -தி.கண்ணன்

தி.கண்ணன்

இருபத்தைந்து வயதுக்குள்ளாகக் கதைகள், கட்டுரைகள், கவிதை, விஞ்ஞானம், பொது அறிவு எனப் பலதரப்பட்ட பொருள்களில் ஆங்கிலத்திலும் தத்தம் தாய்மொழியிலும் ’காயசண்டிகைப் பசி’யுடன் படித்துவிடுவது நல்லது.

பிறகு இருக்கவே இருக்கிறது வேலை பற்றிய, தொழில் பற்றிய படிப்புகளும், வேகமும், வேதனைகளும், சாதனைகளும்…

சிறு வயதில் படிக்கும் சில நூல்கள் ஆழமான பதிவுகளை ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அந்த விதத்தில் கடலூர் நகரட்சி நூலக முன்னாள் அலுவலரும் என்பது குடும்பத்தாரும் எனக்குப் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமேற்படுத்த உதவியிருந்தார்கள்.

கதைகள்தான் என்றாலும் வரலாற்றுப் பின்னணியுடைய கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘சோலை மலை இளவரசி’, ‘அலை ஓசை’, ‘அமரதாரா’ போன்றவை வெளி வந்தபோதே பிரபலம்.

தேவனின் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘லஷ்மி கடாட்சம்’ போன்றவை வந்தபோது முதலில் படிப்பது யார் என்பதில் போட்டியே நடக்கும்.

விக்ரமாதித்தன் கதைகள் தனிரகம். ராஜாஜியின் ’வியாசர் விருந்து’ம் (மகாபாரதம்), ’சர்க்ரவர்த்தித் திருமகனும்’ (ராமாயணம்) அலாதியான ஈர்ப்புடையவை. டி.கே.சி.யின் ’கம்பர் தரும் காட்சி’யும் பிஸ்ரீயின் ’சித்திர ராமாயண’மும் மிகுந்த சுவை உடையவை. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளும், அழ.வள்ளியப்பாவின் ’பிஞ்சு’க் கவிதைகளும் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை. பாரதியார் கவிதைகளைக் கல்லூரிக் காலத்துக்குள் படிக்கமுடியாவிட்டால் வேறென்ன படித்தீர்கள் என்று கேட்கத் தோன்றும்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ’பிரதாப முதலியார் சரித்திர’த்தைப் படித்துவிட்டுதான் மறுவேலை என்றிருந்த நாள்கள் உண்டு. டாக்டர் மு.வ.வின் ‘கள்ளோ காவியமோ’ என்னும், படைப்பில் மயங்காத கல்லூரி மாணவர் (அப்போது) இல்லை. ஜெயகாந்தனின் ‘ஊருக்கு நூறு பேர்’ போன்று கிளம்பியிருந்தால் நாடு இன்று இப்படி இருக்குமா?

தி.ஜானகிராமனின், நாடோடியின், லஷ்மியின் வை.மு.கோ.வின், வழுவூராரின் ஆரணி குப்புசாமி முதலியாரின் இன்னும் பலரின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. ஆனால் நல்ல ரசனையை வளர்த்தவை.

ராஜம் கிருஷ்ணனின் ’மலர்க’ளும், ஜெகசிற்பியனின் ’ஆலவாய் அழக’னும், கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பா’ளும் தமிழ்நாட்டைக் கலக்கவில்லையா?

ஆங்கிலத்தை எடுத்துக் கொண்டால் ‘ராபின் குரூசோ’, ‘டிரெஷர் ஐலண்ட்’, ‘டேல் ஆஃப் டூ சிட்டீஸ்’, ‘ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிந்த கதைகள்’, வோட்ஹவுசின் ஜீவ்ஸ் முதலான கதைகள் போன்றவற்றைப் படித்தால் அந்த மொழி எப்படி, எல்லாக் கருத்துகளையும் சொல்ல லாவகமானது என்று புரியும்.

விஞ்ஞானத்தில் ருசி ஏற்பட வேண்டுமானால், அப்போது ஜியார்ஜ் ஜாமோ எழுதிய ‘ஒன் டூ த்ரீ இன்பினிடி’ மிகப் பிரபலம். எச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன், ஐசக் அசிமாவ் அநேகமாய் எல்லோருக்கும் அறிமுகமானவர்கள். டூமாஸின் ’த்ரி மஸ்கிடியர்ஸ்’ ’கவுன்ட் ஆஃப் மாண்டிகிரிஸ்டோ’ அகாதா கிறிஸ்டியின் துப்பறியும் நாவல்கள். எர்ல் ஸ்டான்லி கார்ட்னரின் ‘பெர்ரி மேஸன் சாகசங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

டேல் கார்னகியின் ‘பப்ளிப் ஸ்பீக்கிங்’, ’ஹெள டு வின் ப்ரெண்ட்ஸ்’ போன்றவை இக்காலத்தில் ஏராளமான புத்தகங்களின் முன்னோடி. இப்போது எத்தனையோ புதுத் துறைகளில் புதுப்புதுப் புத்தகங்கள் வந்து விட்டன. புத்தகக் கண்காட்சிகுப் போனால் மலைப்பாயிருக்கிறது.

ஆனால் வேர்களைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டுமானால் ராமாயணமும், மகாபாரதமும், திருக்குறளும், முடிந்தால் சிலப்பதிகாரமும் முக்கியத் தேவை.

மற்ற புத்தகங்களைப் படிப்பது தனிப்பட்ட ருசியையும் தேவையையும் பொறுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT