பிரபலங்கள் - புத்தகங்கள்

'கலந்தாலோசனை': பேக்கன் உதிர்த்த முத்துகள்! -கவிஞர் முகில்வண்ணன்

5th May 2021 07:00 AM | கவிஞர் முகில்வண்ணன்

ADVERTISEMENT

பருத்தி நூல் ஆடையாகி உடல் மானம் காக்கும்; படிப்பு நூல் அறிவாகித் தன்மானம் காக்கும். எத்தனை நல்ல நூல்களை நாம் படிக்கிறோமோ அத்தனை நல்லறிஞர்களை நாம் சந்திக்கிறோம். ஞான ஒளி பெறுகிறோம்.

ஏழாம் வகுப்புக் கோடை விடுமுறையில் நான் படித்த நூலான ’ஞானசூரியன்’ என்னுள் நாத்திக வித்தூன்றியது. பெரியாரியத்துக்கு ஆற்றுப்படுத்திற்று.

பச்சையப்பன் கல்லூரி நூலகத்தில் நான் பயின்ற காந்தி நூல் வரிசை (105 வயது வாழ்ந்த என் தாத்தாவின் மறைவு நாளான) ஒரு காந்தி ஜெயந்தி முதல் காப்பி, தேநீர், சிகரெட்டுகளை இன்றுவரை தீண்டாத திடமனதைக் கொடுத்தது.

நா.பார்த்தசாரதியின் ’குறிஞ்சிமலர்’ கொஞ்ச காலம் என்னை அரவிந்தனாகவே ஆக்கி வைத்தது. வீரம் விளைந்தது (How The Steel Was Tempered) என்ற ருசிய நாவல் என்னுள் துணிவைத் தூண்டியது. சாலை இணைப்பும் அஞ்சலகமும் இல்லாத சிற்றூரில் கிடந்த இந்தக் கருங்கல்லை, பகுத்தறிவையும் பொதுவுடமைச் சிந்தனையுமுள்ள பேசும் சிற்பமாக ஆக்கியவை பல நூறு சிந்தனையாளர்களின் ஞான உளிகளே.

ADVERTISEMENT

பேக்கனின் கட்டுரைகள் அல்லது ‘கலந்தாலோசனை’ (Bacon’s Essays or Counsels) எனும் நூல்தான், திருக்குறள் போல் நான் அடிக்கடிப் புரட்டியும் புடித்தும் ரசித்தும் வாழ்நாள் துணையாய் வைத்துக்கொண்டுள்ள நூல்.

லத்தீன் கலந்த பழைய ஆங்கில நடையில் எழுதப்பட்ட இந் நூல், தமிழில் உள்ள இறையனார் அகப்பொருளுரை, மறைமலை அடிகள், திரு.வி.க. மொழிநடைபோல், சற்றே கடினமாக உள்ளதால் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை போலும்.

ஆனால் அறிஞர் அண்ணா, டாக்டர் மு.வ. போன்றவர்களால் அதிகம் எடுத்தாளப்பட்ட ‘பொன்மொழிகள்’ பேக்கனின் கட்டுரைகளில் காணப்படுபவையே!

இதோ சில சிந்தனைகள்: ‘’பகல் வெளிச்சம் போன்றது உண்மை. அரிதாரங்களையும் அது அம்பலப்படுத்தி விடும்; பொய்யோ, இருளில் ஒளிரும் மெழுகுவர்த்தி போன்றது. அதன் மங்கிய ஒளியில் அரிதாரமும் முகமூடியும் அழகாகத் தெரிகிறது’’.(உண்மை).

மதவாதிகளுக்கு இரண்டு வாள்கள் வேண்டும்; ஒன்று ஆன்மிகம்; இன்னொன்று அரசியல்.’’ (மத ஒற்றுமை).

‘’கடவுள் மனிதனாக அவதாரம் எடுத்து வருவதாகக் கற்பனை செய்வது மிகப் பெரிய அவமானம்…

பல நாட்டு அரசர்களைக் கொலை செய்வது, மக்களை வெட்டிக் குவிப்பது, நாட்டைச் சூறையாடுவது, அரசைக் கவிழ்ப்பது போன்ற  கொடிய பாவச் செயல்களைச்  செய்வதற்காகக் கடவுளை பூமிக்கு இறங்கி வரச்செய்யும் ஏமாற்று வேலைகளால் மதத்துக்குப் பெருமையா சேரும்?’’ (மத ஒற்றுமை)

‘’பெரிய மனிதர்கள் தங்கள் சொந்தக் குறைகளைக் கண்டுபிடிப்பதில் கடைசி ஆளாகவும் தங்கள் தேவைகளைக் கண்டுபிடிப்பதில் முதல் ஆளாகவும் திகழ்கிறார்கள்’’.

‘’நீ ஒரு பெரிய இடத்தை அடையும்போது, உனக்கு முன் அந்த இடத்தில் இருந்த சிறந்த முன்னுதாரணத்தைப் பின்பற்று. ஏனெனில் நீயே எதிர்காலத்துக்கு முன்னுதாரணம்; கொஞ்ச காலம் சென்றபின் உன்னையே உனக்கு முன்னுதாரணமாய் நிறுத்திப் பார்’’. (பெரிய இடம்).

’’அதிகாரத்தின் குரல்கள் நான்கு: 1.தாமதம் 2. லஞ்ச ஊழல் 3.முரட்டுப் பிடிவாதம் 4.சுகபோகம்’’ (பெரிய இடம்).

இக்காலத்துக்கும் பொருந்துமாறு, இன்றைய சிந்தனையாளர் யாரோ எழுதியிருப்பதுபோலத் தோன்றுகிறதல்லவா?

இந்த முத்துகள், அந்த ’பேக்கன்’ என்னும் கடலில் உள்ள முத்துகளில் சில மட்டுமே. திவிர வாசகர்களுக்குத் திகட்டாத விருந்து இந்நூல்.

‘’பூமிக்குப் போர்வை’ என்னும் பெயரில் பேக்கனின் 59 கட்டுரைகளும் தமிழில் வெளிவர இருக்கிறது. மொழி பெயர்ப்பு?

அடியேன்தான்.

 

Tags : celebrities books
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT