பிரபலங்கள் - புத்தகங்கள்

'செருப்புத் தைக்கும் தொழிலாளி': டால்ஸ்டாய் விளக்கிய பெரிய புராணம்! - அ.ச.ஞானசம்பந்தன்

13th Mar 2021 07:00 AM | -அ.ச.ஞானசம்பந்தன்

ADVERTISEMENT

80 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்கத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள்தான் இருந்தன. எனவே, படிப்பு என்பது சிலபேருக்கு மட்டுமே இருந்த வாய்ப்பு. இப்படிப்பட்ட நாளில் என் தந்தையார் ‘பெருஞ்சொல் விளக்கனார்’ அ.மு.சரவண முதலியார் தாமாகவே தமிழ் பயின்று ஒரு குறிப்பிட்ட தகுதியை அடந்தவர். ஆங்கிலம் அறியாத தந்தை மிகக் கூர்மையான திறனாய்வு அறிவு பெற்றிருந்தார். எந்த ஒரு இலக்கியத்தையும் பலமுறை திரும்பத் திரும்பப் படித்து, தானே பொருள் கொள்ள வேண்டும் என்ற வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். அதே பழக்கத்தை எனக்கும் ஏற்படுத்தியிருந்தார். இதன் பயனாக நானே பெரிய புராணத்தைப் படித்தேன்.

படிக்கும்போது பல ஐயங்களுக்கு உள்ளானேன். ஒவ்வொரு அடியாரையும் காண்பதற்குச் சிவபெருமானே ஏன் நேரில் வரவேண்டும் என்ற ஓர் ஐயம். அப்படி வருகிற சிவபெருமான் கிழ வேதியராகவும் சிவ வேடம் புனைந்த அடியாராகவும் தூர்த்தராகவும் ஏன் வரவேண்டும் என்பன போன்ற கேள்விகள் இளைஞனான என் மனத்தில் தோன்றலாயின. அக்காலத்தில் வாழ்ந்த சைவப் பெருமக்களிடம் இம்மாதிரியான கேள்விகளைக் கேட்டால் பதில் சொல்ல முடியாமல், ‘’நீ நரகத்துக்குத்தான் போவாய்’’ என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். இந்தப் பெருமக்களிடமிருந்து என் தந்தையார் சற்று மாறுபட்டவராக இருந்தார். ஒரு சில ஐயங்களுக்கு அவரே விடை கூறுவார். ஒரு சிலவற்றிற்கு, ‘’உன் அறிவு வளர்ந்து நீ பெரியவனாகும்போது இதைப் புரிந்துகொள்வாய்’’ என்று மட்டும் கூறினார்.

நாள்கள் நகர்ந்தன. ஆங்கில நூல்களைப் படிக்கும் வாய்ப்புப் பெருகியது. 10-ம் வகுப்பு படிக்கும்போது நான் அறிஞர் டால்ஸ்டாயின் ‘செருப்புத் தைக்கும் தொழிலாளி’ கதையைப் படித்தேன். அது என்னுடைய ஐயங்களுக்கு விடை கூறும் முகமாக இருந்தது.

செருப்பைத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இறைவனை நேரில் காண வேண்டும் என்ற ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுகிறார். இறைவன் கனவில் தோன்றி, ‘நாளை உன் கடைக்கு வருகிறேன். காட்சி தருகிறேன்’ என்கிறார். தொழிலாளிக்கு பெரு மகிழ்ச்சி. மறுநாள் கடையைச் சுத்தம் செய்து, செருப்புகளையும் தோல் முதலியவைகளையும் அப்புறப்படுத்திவிட்டு அமர்ந்து கொண்டிருந்தார். குழந்தை ஒன்று வருகிறது. ‘’கல் குத்துகிறது. வலி தாங்க முடியவில்லை. ஒரு ஜோடி செருப்பு வேண்டும்’’ என்று கேட்கிறது. குழந்தையிடம் தொழிலாளி, ‘’இன்று கடவுள் வரப்போகிறார் அதனால் தோல் முதலியவைகளை அப்புறப்படுத்திவிட்டேன். நாளைக்கு வா, இலவசமாகச் செய்து தருகிறேன்’’ என்றார். குழந்தை போய்விட்டது. சற்று நேரத்தில் வயதான கிழவி ஒருத்தி செருப்பு வேண்டும் என்று கேட்டு வருகிறாள். குழந்தைக்குச் சொன்ன அதே பதிலைச் சொல்லி அவளை அனுப்புகிறார் தொழிலாளி.

ADVERTISEMENT

மாலையும் வந்தது. கடவுள் வரவேயில்லை. மனம் வருந்திய தொழிலாளி இரவு படுக்கைக்குச் செல்கிறார். கனவில் கடவுள் வருகிறார். தொழிலாளி வருத்தத்துடன், ‘’கடவுளே… நீங்களுமா என்னை ஏமாற்ற வேண்டும்’’ என்று கேட்கிறார். ‘’அன்பனே… நேற்று இருமுறை உன் கடைக்கு வந்தேன். முதலில் குழந்தையாக. பின்பு வயதான கிழவியாக. நீ தான் என்னை அறிந்து கொள்ளவில்லை. யாரையோ எதிர்பார்த்திருப்பதாகச் சொல்லி அனுப்பிவிட்டாய். நான் என்ன செய்ய முடியும்?’’ என்கிறார். இப்படியாகக் கதை செல்கிறது. இந்தக் கதை பெரிய புராணத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு விடையாக அமைந்தது.

திருமணக் கோலத்தில் இருந்தார் சுந்தரர். எதிரே இருந்த கிழவரை இறைவன் என்று அறிந்துகொள்ளவில்லை. திருவதிகை வீரட்டானத்தில் இறைவனின் காலடி சுந்தரரின் தலையில் பல காலம் பட்டது. ஆனால் அவர் அறிந்துகொள்ளவில்லை. தான் கொடுத்த சட்டி காணாமல் போனதும் திருநீலகண்டரிடம் பெரும் சண்டை போடும் சிவனடியாரைச் சிவன் என்று திருநீலகண்டர் புரிந்துகொள்ளவில்லை. நல்ல மழைக்காலத்தில் வீடு தேடி வந்த சிவனடியாருக்கு எப்படியாவது சோறிட வேண்டும் என்று முயன்ற இளையான்குடி மாறனாருக்கு, வந்தவர் சிவன் என்று அறியமுடியவில்லை.

குழந்தையாகவும் கிழவியாகவும் வந்த இறைவனை இன்னாரென்று செருப்புத் தைக்கும் தொழிலாளியால் அறியமுடியவில்லை. ஆனால், இறைவனைத் தரிசிக்கும் வாய்ப்பை அவர் பெற்றார். அதே போலத்தான் பெரியபுராணத்தில் வரும் அடியவர்களும். இறைவனைப் பற்றிக் கவலைப்படாமல் அடியவர்களுக்குத் தொண்டு மட்டுமே செய்ய வேண்டும் என்ற இந்த நுணுக்கத்தை டால்ஸ்டாய் கதை எனக்குச் சொன்னது. இந்தத் தெளிவை அடுத்து, பல ஆண்டுகளாக நான் படித்து வந்த பெரியபுராணத்தைச் சைவர்களுக்கான பக்தி நூலாக மட்டுமே பார்க்கும் எண்ணம் என்னை விட்டு அகன்றது. இந்த எண்ண ஓட்டத்தை என்னுள் விதைத்தது டால்ஸ்டாயின் கதைதான்.

           (தினமணி கதிரில் 05.08.2001 அன்று வெளிவந்தது)

 

ADVERTISEMENT
ADVERTISEMENT