பிரபலங்கள் - புத்தகங்கள்

'குறத்தி முடுக்கு': ஞானப் பாதையில் வந்த சிலுக்கு - சாருஹாசன்

சாருஹாசன்

நீ சந்தித்த அழகிகளில் உனக்கு பிடித்தவள்? என்பதைப் போல் இருக்கிறது இந்தக் கேள்வி. எத்தனையோ பெண்களின் அழகை ரசித்ததுபோல் எத்தனையோ புத்தகங்களையும் ரசித்திருக்கிறேன். எனக்கென்று கிடைத்த பெண்ணிடம் மட்டில் இதைக் கூறிவிடாதீர்கள்.

நானே ஒருவித வித்தியாசமான ரசனை உடையவன். எனக்குப் பிடித்த நடிகை என்றால் காலம் சென்ற சிலுக்கு ஸ்மிதா. காமிராவுக்கு வெளியே நடிப்பைத் தொடராத ஒரு வெகுளி உள்ளம். அருணகிரிநாதர், நீலகண்டர் போன்றவர்கள் கடந்து வந்த அதே ஞானப் பாதையைக் கடந்து வந்த ஒரு நல்ல இதயம். எம்.என். நம்பியாரும், வீரப்பாவும் கொள்ளைக்காரர்கள் அல்ல என்று கீத்துக் கொட்டகை ரசிகனிடம் விளக்குவதுபோல்தான் நடுத்தர வர்க்க வாசகர்களிடம் நான் சிலுக்கைச் சிலாகிப்பது.

நான் ஒரு சினிமாக்காரன். இலக்கியவாதி அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்! இந்த ஜி. நாகராஜன் என்பவரை எனக்கு முன்பின் தெரியாது. ஒரு எழுத்தாள நண்பர் படப்பிடிப்புத் தளத்தில் காலம் சென்ற நாகராஜனின் படைப்புகள் என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். பல சிறுகதைகள், சில நீண்ட கதைகள் அல்லது குறுநாவல்கள் என்றும் கூறலாம்.

தமிழ்தான்! ஆனால் முக்காபலாவுக்கு முதலிடமும் முஸ்தபாவுக்கு அரியணையும் தந்துவிட்டு, ‘’உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’’ என்று உப்புக்குச்சப்பாணி உயில் எழுதுகிறார்களே அவர்களுக்காகப் படைக்கப்பட்டதல்ல. நாமறியாத சிந்தனைகளை அவரறிந்த தமிழிலே தருகிறார்.

தொகுப்பாசிரியர் மோகன் தன் முன்னுரையில்,  ‘’நாகராஜனது பிராந்தியம் மனிதனின் இயல்புணர்வுகளைத் தானே உணர்ந்து கொண்டாடிய மனதிலிருந்து உருவாக்கப்பட்டது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும், வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து இயந்திர ரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கும் நிலையில் படைப்பு மனதின் அடிப்படையான சுதந்திர வேட்கையிலிருந்து உருவாகியிருக்கும் கலைப்பிராந்தியம்’’ என்கிறார்.

‘குறத்தி முடுக்கு’ என்ற துண்டுக் கதையில் விலைமாதர் விடுதி பற்றிக் குறிப்பிடும்போது நாகராஜன் சொல்கிறார். ‘’அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமி இடத்து யாரும் ஒரு தெய்வீக அழகைச் சந்திக்காமல் இருக்க முடியாது… தி.ஜானகிராமனின் ‘கோபுர விளக்கு’ என்ற சிறுகதையோ அல்லது ஈஜின் ஓனீஸின் ‘அன்னா கிறிஸ்டி’ நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்…

பரத்தை மாதவியின் நல்லியல்புகள்தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன?’’

காதல், திருமணம், மணவாழ்க்கை இவையெல்லாம் பற்றிக் குறிப்பிடும்போது, ‘’திருமணம்தான் தங்கள் காதலின் குறிக்கோள் என்று சொல்லாத காதலர்கள் இல்லை. நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்; அதுவே போதும்; திருமணம் என்று ஒன்று தேவையில்லை என்று சொன்ன காதலர்களும் இல்லை. கள்ளக்காதலர்கள் கல்யாணம் பற்றி  நினைப்பதில்லை. காரணம் அது சாத்தியமில்லாததால்! ஒருவேளை கல்யாணம் சாத்தியமாக இருந்தால் இருவரை ஒருவர் காதலித்திருப்பார்களோ என்னவோ! திருமணம் மூலம்தான் தங்கள் காதலை உறுதிப்படுத்தி நிலைநிறுத்த முடியும் என்பது காதலர்களின் பல்லவி’’ என்கிறார்.

நானும் ஜி.நாகராஜனைப் போல் சிந்திக்க முயல்கிறேன். எழுதத்தான் முடியவில்லை. இல்லாததை வணங்கிப் போற்றுவது மனித இயல்பு. கடவுளும் காதலும் மனிதன் தன் வசதிக்காகப் படைத்த கற்பனைச் சொற்கள். ஆனால் இவையிரண்டையும் விடக் கொடுமையான கற்பனை கற்பு என்ற சிந்தனை.

இல்லாததைப் பேணிப் புகழ்வதுதான் உலக மரபோ? என்னைப் பொறுத்தவரை ஒரு திருமணத்தின் வெற்றி இருவருடைய சகிப்புத்தன்மையைச் சார்ந்தது. ‘’சீர்திருத்தத் திருமணம் என்றாலும் அது புதுச் சீதைகள் படைக்கும் ராமாயணந்தானே!’’ என்று ஒருமுறை எழுதினேன். என் கோழைத்தனம், வெளியிடவில்லை.

மதுவருந்தி, புகைபிடித்து, புலாலுண்ணும், நாத்திகவாதியின் உதடுகள் பட்ட கோப்பையை நான் பயன்படுத்த மாட்டேன் என்னும் அந்தண மனைவியுடன் 47 ஆண்டுகள் வாழ்ந்துகொண்டு நாகராஜன் எழுத்துகளையும் ரசிக்கிறேன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT