பிரபலங்கள் - புத்தகங்கள்

புத்தர் வாழ்வின் தொகுப்பு நூல்: நில் என்றால் நில்! - பழ.கருப்பையா

புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

எவ்வளவோ வகையான நூல்களுக்கிடையே புத்தரோடு தொடர்புடைய எளிய கதை ஒன்றைத் தற்செயலாகப் படிக்க நேரிட்டது. புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த படிப்பினை நிறைந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூல் அது. மாணவப் பருவத்தில் படித்ததால் புத்தகத்தின் பெயர் நியாபகமில்லை. எனினும் அதில் படித்த ஒரு கதை இன்றும் நெஞ்சில் அப்படியே பதிந்திருக்கிறது. புத்தர் தொடர்பான வாழ்க்கைச் சரிதப் புத்தகங்களில் வாசகர்களுக்கு இது கிடைக்கக் கூடும். அந்தக் கதை என் மீது ஏற்படுத்திய தாக்கம் மாணப் பெரிது. புத்தரின் சிந்தனைக் கோணம் என்னைப் புரட்டிப் புரட்டி எடுத்தது. மருளச் செய்தது. தெளியவும் வைத்தது.

அங்குலிமாலா என்று ஒருவன் இருந்தான். சிலரால் பாதிக்கப்பட்ட அவன் தான் பாதிக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்த மனிதர்களையெல்லாம் பழிவாங்கியதோடு நில்லாமல், பொதுவாக மனிதர்களே கெட்டவர்கள் என்னும் கருத்து வயப்பட்டு, ஆயிரம் பேரைப் பழிவாங்கி மனித வர்க்கத்துக்கு பாடம் கற்பிப்பது என்று முடிவெடுத்துச் சூளுரையும் செய்தான். அதன்படி தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரைக் கொன்றுவிட்டான். சூளுரை நிறைவேற இன்னும் ஒருவனே பாக்கி.

ஒவ்வொருவரையும் கொன்றதற்கு அடையாளமாக அவர்களுடைய விரல் ஒன்றை வெட்டித் தன்னுடைய கழுத்தில் மாலையாகக் கோர்த்துக்கொண்டே வந்தான். இன்னும் ஒரு விரல் கோர்ப்பதற்குத்தான் அந்த மாலையில் இடம் இருந்தது. அங்குலிமாலா என்றால் விரல்களை மாலைகாக அணிந்தவன் என்பது பொருள்.

இந்த நிலையில் ஊர்மக்கள் எல்லாம் அரண்டு, படையாக ஒன்று திரண்டு அங்குலிமாலாவைக் கொல்ல முயன்றபோது அவன் ஊரைவிட்டு ஓடிப் பக்கத்துக் காட்டிலுள்ள மலையின்மீது ஏறி ஒளிந்துகொண்டான். அவன் அந்த மலையில் ஒளிந்திருக்கிறான் என்று மக்களுக்குத் தெரிந்ததால் யாரும் அந்தப் பகுதியில் தனியே நடமாடுவதில்லை. அங்குலிமாலாவும் ஆயிரமாவது விரலுக்குரிய அந்தக் கடைசி மனிதன் தப்பித்தவறியாவது தன்னிடம் வந்து சிக்குவான் என்று பலகாலமாகக் காத்திருந்தான்.

     இந்த சமயத்தில் புத்தர் அந்த மலையடிவாரத்தில் உள்ள கிராமத்திற்கு வந்து சேர்கிறார். அங்குலிமாலாவைப் பற்றி கேள்விப்படுகிறார். அவனைச் சந்திக்க ஆர்வம் கொள்கிறார். ஊரே கூடிப் புத்தரைத் தடுக்கிறது. அவருடைய சீடர்களான பிக்குகளும் தடுக்கின்றனர். ஆயிரமாவது விரலுக்குரிய மனிதனாகக் கருணையே வடிவான புத்தரா அகப்பட்டுக் கொள்வது! அதுவும் தெரிந்துபோய்ச் சிக்குவது தற்கொலைக்கு நிகரானதன்றோ! ஆகவே, புத்தரை ஊர் மறித்து நிற்கிறது. புத்தர் அவர்களைப் பார்த்து புன்புறுவல் பூத்து விட்டு மலையை நோக்கி தன்னந்தனியராய் நடக்கத் தலைப்படுகிறார்.

மலை உச்சிக்குப் புத்தர் சென்றுவிட்டார். அப்போது ஒரு பாறையின் பின்னாலிருந்து புத்தரைப் பார்க்கிறான் அங்குலிமாலா. எனவோ விவரம் தெரியாத வெளியூர்க்காரன் இன்று வந்து மாட்டிக்கொண்டான். நம்முடைய சூளுரை நிறைவெய்தப் போகிறது என்று அகமகிழ்ந்தான்.

புத்தரோ தொடர்ந்து அங்குலிமாலாவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்து அங்குலிமாலாவின் ’தான்’ என்னும் ஆணவம் காயப்படுகிறது. தன்னைப் பார்த்து பயம் கொள்ளாத ஆளை அவன் இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறான். விவரம் தெரியாமல் வரும் புதிய ஆளுக்குத் தான் இன்னார் என்று காட்டி அச்சமுறச் செய்து, அந்த ஆள் பயந்து ஓடும்போது கொலை செய்து தன் சூளுரையை முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறான்.

புத்தரைப் பார்த்து கத்துகிறான். ‘’ஏய் யார் நீ?. யாராக இருந்தாலும் அங்கேயே நில். அசையாதே! சிறிது அசைந்தாலும் இந்தக் கொடுவாள் உன் கழுத்தில் இறங்கிவிடும்.’’

ஆனால் புத்தரிடமோ அதே புன்முறுவல்; இன்னும் நெருக்கிக்கொண்டே சொல்கிறார் ‘’அங்குலிமாலா… நான் ஏற்கெனவே நின்றுகொண்டுதானே இருக்கிறேன்.’’

தொடர்ந்து நடந்து கொண்டே, ’நான் நின்றுகொண்டுதான் இருக்கிறேன்’ என்று சொல்பவன் புத்தி பேதலித்தவனாக இருக்கக்கூடும் என்று எண்ணிய அங்குலிமாலா, இவர் முகத்தைப் பார்த்தால் அப்படிப்பட்ட ஆளாகவும் தெரியவில்லையே என்று குழம்பிப்போய் மீண்டும் கத்துகிறான்.

’’நில் என்றால் நில்! விளையாடாதே, விபரீதமாகிவிடும்.’’

‘’இல்லை அங்குலிமாலா… நீ கோபப்பட வேண்டாம். நான் அசையவில்லை. நின்றுகொண்டுதான் இருக்கிறேன்’’ என்று கூறிக்கொண்டே தொடர்ந்து அங்குலிமாலாவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்.

‘’மீண்டும் அதையே சொல்லிக் குழப்புகிறாயே!’’

’’இல்லை அங்குலிமாலா… இதில் எந்தக் குழப்பமுமில்லை. தெளிவாகத்தான் சொல்கிறேன். ஆசையோ, விருப்பமோ, குறிக்கோளோ, உள்ளவன்தான் அதை நோக்கி இயங்கிக்கொண்டிருப்பான். எனக்கு எந்த விருப்பமும் இல்லை; என் வாழ்கைக்கு எந்த நோக்கமும் இல்லை. உனக்கோ ஆயிரமாவது மனிதனைக் கொன்றாக வேண்டும்; அது உன் குறிக்கோள். ஆகவே நீதான் இயங்குகிறாய். எந்த ஆசையுமில்லாத நான் எதை நோக்கி இயங்க முடியும்? ஆகவே நான் ‘நின்று’ வெகுகாலமாகிவிட்டது அங்குலிமாலா….’’

அங்குலிமாலா அதிர்ந்துபோகிறான். அவனுடைய சூளுரை தவிடுபொடியாகிறது. கண்களில் கண்ணீர் சுரக்கிறது. புத்தரை நோக்கி ஓடி வந்து அடிபணிகிறான். அவனுடைய வாழ்க்கை தலைகீழ் மாற்றம் அடைகிறது. பெளத்தத் துறவியாகிறான் என்று கதை முடிகிறது. படிப்பு என்பது எதையாவது படிப்பதல்ல. அதற்கு பரமபதம் விளையாடலாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT