பிரபலங்கள் - புத்தகங்கள்

'சினிமா: நிஜமும் நிழலும்': மனம் எழுதிய புத்தகம்! -நல்லி குப்புசாமி

நல்லி குப்புசாமி

கையில் பேனா வைத்துக்கொண்டு புத்தகங்களைப் படிப்பது என் பழக்கம். முக்கியமான பகுதிகளைக் குறித்து வைத்துக்கொள்வதற்காக. அதனால் தான் நான் புத்தகங்களை இரவல் வாங்குவதில்லை. விலைக்கு வாங்குகிறேன். அப்படியே ஒரு பெரிய நூலகத்தை உருவாக்கிவிட்டேன். எனினும் சில புத்தகங்களை ஒரே மூச்சில் படித்துவிட முடிவதில்லை. நேரமில்லை என்பது ஒரு காரணம். ஆனால் சுவாரசியமான புத்தகம் என்று வரும்போது நேரம் முக்கியமல்ல. தூக்கமும் விலகிப்போகும். அப்படித் தூக்கத்தை விரட்டியடித்த புத்தகம் ‘சினிமா: நிஜமும் நிழலும்’. ஆசிரியர் ஆரூர்தாஸ்.

நள்ளிரவில் படிக்கத் தொடங்கினேன். அதிகாலை முடித்தேன். மனதுக்கும் பேனாவுக்கும் அதிக வேலை கொடுக்க வேண்டியிருந்தது. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் என்ன விஷயம் என்று ஆரூர்தாஸ் அட்டவணை போடவில்லை. உள் அட்டை தொடங்கி, பின்னட்டை வரை காலியாக இருக்கிற இடங்களில் எல்லாம் பக்க எண்களைப் போட்டு விவரங்களை எழுதிவைத்துவிட்டேன். இவ்வளவு விவரமாக வேறு எந்த நூலுக்கும் குறிப்புகள் எடுக்கவில்லை. பதிப்பாளர் அடுத்த பதிப்புக்கு விவரண அட்டவணை போட வேண்டியிருந்ததால் என் பிரதியை வாங்கிச் செல்லலாம். ஆனால் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அட்டவணை அவசியம் என்று நினைக்கிறேன். அவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறேன் அந்த நூலை. ’படித்தேன்’ என்பது சாதாரண வார்த்தை. ’ஸ்டடியிங்’ என்ற பொருளில் அந்த நூலைப் படித்தேன். அப்படி என்ன சிறப்பு அந்த நூலில்?

தகவல் தொகுப்பும் எளிமையான சுவாரசியமான நடையும்தான். நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு சினிமா என்பது நிஜத்தின் நிழல். சினிமா பற்றி எழுதுபவர்கள் தேடிக் கண்டுபிடித்துச் சொல்வது நிழலின் நிஜம். ஆக ரசிகர்களாகிய நிஜங்களுக்கு நிழலாகிய சினிமாவின் நிஜத்தை எடுத்துச் சொல்வதில் இந்த நூல் முழு வெற்றி பெற்றுள்ளது.

இந்த நூல் ‘தன் வரலாறு’ என்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆரூர்தாஸ் அடக்கி வாசித்திருக்கிறார். எனவே திரைத் துறையில் உள்ள நபர்கள் நடப்புகள் பற்றி நாம் நிறையவே தெரிந்துகொள்ள முடிகிறது. பிறர் வரலாற்றை எழுத முற்படும் சிலர் எழுதப்படும் தலைவரின் சிறப்புகளைச் சொல்கிற போக்கில் தன்னைப் பற்றியே அதிகம் எழுதிக்கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் தன் வரலாற்றில் பிறருக்கு அதிக இடம் கொடுத்து ஒரு பார்வையாளனாக, தூரத்துப் பார்வையாளனாக, ஒதுங்கிக் கொள்ளும் மனப்பாங்கு ஆரூர்தாஸ் என்ற எழுத்தாளரை, கலைஞரை, மனிதரை வெகுவாக வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

சென்னை தி.நகர் அருந்ததி நிலையத்தார் பதிப்பித்துள்ள (ரூ.110 விலையுள்ள) இந்த நூல் டெம்மி அளவில் மொத்தம் 320 பக்கங்கள் கொண்டது. சிறு எழுத்துகள். அதனால் தகவல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ‘காய்மகாரம்’ என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் ஆரூர்தாஸ், அதன் பொருள் காரணமில்லாமல் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்வது என்கிறார் (பக்கம் 137). ஆரூர்தாஸுக்கு யார் மீதும் காய்மகாரம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த நாற்பது வருட காலத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்கிறார் ஆரூர்தாஸ். அவருடன் பயணப்படும் நாம் ஒரு தனி உலகைக் காண்கிறோம் என்றால் மிகையல்ல. இது ஒரு திரைத்துறைத் தகவல் களஞ்சியம். கையில் எடுத்தால் முடித்த பின்புதான் கீழே வைக்க முடியும். அதுவரை பசி, தாகம் எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம்.

திரைத்துறையில் நமக்கு அவ்வளவாக அறிமுகமாகாதவர்கள் இங்கே நம்மைச் சந்திக்கிறார்கள். ஓரளவுக்கு அறிமுகமானவர்கள் பற்றி நிறையவே தெரிந்துகொள்கிறோம். யாரைப் பற்றியும் ஆரூர்தாஸ் குறை சொல்வதில்லை. வம்புகளில் சிக்க வைக்கவில்லை. ஒருவிதத்தில் பார்த்தால் இது தமிழ்த் திரை உலகத்தின் வரலாறு. அப்படி வரலாறு என்று வேறு யாராவது எழுத முற்பட்டால் ஒருவேளை சுவாரசியமாக எழுத முடியாமல் போகலாம். ஆரூர்தாஸுக்கு அது முடிகிறது. அவர் அருகே அமர்ந்து ஒருவர் தினமும் அவர் சொல்லச் சொல்லக் குறிப்புகள் எடுத்து அவர் பார்வையில் தமிழ்த் திரையுலக வரலாறு ஒன்று எழுதப்பட்டால் அது மிகச் சிறப்பாக அமையும். திரைத்துறை பற்றி இப்படி வில்லங்கங்கள் இல்லாமல் எழுதுவதற்கு எழுத்தாற்றல் மட்டும் இருந்தால் போதாது. நல்ல மனம் வேண்டும். அது ஆரூர்தாஸுக்கு இருக்கிறது.

இது அவரது மனம் எழுதிய புத்தகம். எனவே நம் மனதைத் தொடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT