பிரபலங்கள் - புத்தகங்கள்

'தி ஃபெளன்டெய்ன்ஹெட்': இப்போது நினைத்தாலும்..! -விக்ரம்

விக்ரம்

நீங்களும் படிக்கலாம் 48 |

சினிமா பார்ப்பதற்கும், புத்தகம் படிப்பதற்கும் நிறைய வேற்றுமை உண்டு. வேட்கை கொண்ட ஒரு சினிமா ரசிகனை ஒரு திரைபடப் படைப்பாளி முழுமையாகத் திருப்தி செய்வது கடினம். ஆனால் தேர்ந்த எழுத்தாளன் எந்த வாசகனின் தேடலையும் பூர்த்தி செய்து விட முடியும். இது எப்படிச் சாத்தியம் என்றால், ஒரு எழுத்தாளனின் படைப்புக்குள் செல்லும் வாசகன் அந்தக் கதையைத் தன் கற்பனைத் திறனுக்கேற்றவாறு எப்படியும் வளைத்துக் கொள்ள முடியும்.

அவர்கள் தேடும் அல்லது விரும்பும் விஷயங்களைக் கதைக்குள் புகுத்திக் களிப்புற முடியும். உதாரணத்துக்கு, ’எல்லா வசதியும் கொண்ட ஒரு மாளிகை’ என்று எழுத்தாளன் எழுதிவிட்டால் ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு விதமாக அந்த மாளிகையைக் கற்பனை செய்து திருப்தி கொள்ள முடியும். ஆனால் சினிமாவிலோ அந்த மாளிகையைக் காட்டிவிட நேர்கிறது. அந்த மாளிகை ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதபோது அந்தப் படைப்பு தோல்வியடைகிறது. எனவே சினிமா ரசிகனுக்கு இருக்கும் எல்லைகள், ஒரு வாசகனுக்குக் கிடையாது. இந்த வகையில் நான் ரசிகனின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முயலும் படைப்பாளியாக ஒரு புறமும், எந்த எல்லைகளுமில்லாமல் என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து கொள்ளும் வாசகனாக இன்னொரு புறமும் இருக்கிறேன். இரண்டும் சுகமானவை.

பள்ளிப் பருவத்திலிருந்தே படிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டதால் படிக்கும் பழக்கமுள்ளவர்கள் எந்தெந்த நூல்களைத் தவிர்க்கமாட்டார்களோ அநேகமாக அவற்றையெல்லாம் படித்திருப்பேன். அவற்றுள் சட்டென்று என் நினைவில் வந்து அகல மறுப்பது AYN RAND எழுதிய FOUNTAIN HEAD  தான். இதைப் பலரும் படித்திருப்பார்கள். எனினும் இன்றைக்குப் படித்தாலும் முதல் முறை படித்த அனுபவம் கிடைக்கப் பெறுகிறேன்.

அந்தக் கதையின் நாயகன் ’ஹோவர்ட் ரோர்க்’ திறமைசாலி மட்டுமல்லாமல் நேர்மையாளன். அந்த நேர்மைதான் அவன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். கட்டடக் கலைஞனான அவன் படிக்கும் காலம் தொட்டு அதே குணத்துடன் இருப்பவன். இதனால் வெறும் அலங்காரத்தை வைத்து முன்னேற நினைக்கும் அவனது நண்பன் ஜெயித்துக்கொண்டே போக, இவன் தோற்றுக்கொண்டே இருப்பான். கட்டடத்துக்கான வரைபடத்தை உருவாக்கும் ஹோவர்ட்டின் நண்பன். காண்போர் கவரும் தூண்கள் வைத்துச் சிறப்பாக வடிவமைப்பதால், அந்தத் தூண்களின் அனாவசியத்தை விவரிப்பான் இவன். அந்தக் கட்டடத்தில் சின்னஞ்சிறு இடத்தைக்கூட உபயோகத்துடன் கையாள வேண்டும் என்று வாதிடுவான். ஆனால் அலங்கார மோகம் கொண்ட உலகம் அவன் கூற்றைப் புறந்தள்ளிவிடும்.

நண்பனோ வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க, ஹோவர்ட் மிகவும் பின்னுக்குப் போய்விடுவான். அவனது காதலி டோமினிக் ஃபிராங்கோனும் அவன் உணர்வதைத் தன் காதல் சிதைத்துவிடக் கூடாதென்று கருதி, வாழ்க்கையில் உயர்வடைந்த அவனுடைய நண்பனை மணந்து கொள்வாள். இப்படியாகப் போகும் கதை கடைசியில் ஹோவர்ட்டின் திறமையை உலகம் புரிந்து கொள்ளுமிடத்தில் முடியும். பிறகென்ன? நியூயார்க் முழுக்க ஹோவர்ட்டின் திறமை மிக்க கட்டடங்களாக உயரும்.

இந்தக் கதையை இப்போது நினைத்தாலும் என் கைகளில் உள்ள ரோமங்கள் சிலிர்ப்பதை உணர முடிகிறது. அவ்வளவு அற்புதமான புத்தகம். இது தத்துவப் புத்தகம் அல்ல. ஒரு கதைப் புத்தகம்தான். எனினும் அதில் உலகத் தத்துவம் உள்ளமைந்து இருப்பதைக் காணலாம். அந்த வகையில் இதைத் தத்துவப் புத்தகமாகச் சொன்னாலும் பொருத்தமே. இதைப் பல தடவை படித்தும் இன்னொரு முறை படித்துவிடத் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் விட்டவர்களுக்காகவும், இந்தத் தலைமுறையினருக்காகவும் மீண்டும் நினைவுகூர்கிறேன்.

நல்ல செய்திகள் தலைமுறைகள் கடந்தவைதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT