பிரபலங்கள் - புத்தகங்கள்

'இருண்ட வீடு':வீடு தரும் வெளிச்சம்!: -மன்னர் மன்னன்

மன்னர் மன்னன்

என்னை சோர்வு சுடும்போது, தயக்கம் சுடும்போது, குழப்பம் குழப்பும் போது, ஓடி இருண்ட வீட்டில் ஒளிந்து கொள்வேன்.

அது அப்பா கட்டிய வீடு. சிறிய ஓட்டு வீடு. சுவர்களின் காரை பெயர்ந்து இருக்கும். தூலங்கள் தொங்கும், வெளிச்சக் கதிர்கள் வீட்டினுள் எட்டிப் பாரா, காற்றும் வாசல் கடந்து உள்ளே கால் பதிக்காத, இரவும் பகலும் எலிகளின் நாட்டியம். பெருச்சாளிகளின் ஓட்டப்பந்தயம்.

வீட்டின் தலைவி ஆழ்ந்து தூங்குவதை அய்யா பார்த்து எரிச்சலை அடக்கிக் கொள்வார். இவரின் வயிற்றில் தீயாய் வளர்ந்தாலும் தாகம் உயிரைக் குடித்தாலும் அம்மையாரின் ஆழ்ந்த நித்திரையை இவர் கலைக்க மாட்டார். இரண்டு தட்டு தட்டி எழுப்பும் அளவு வீரம் வரும் விர்ரென்று அடங்கிவிடும். கைக் குழந்தை பாலுக்கு அழுது வயிறு வீங்கும்.

கடன்காரன் கூவிப்பார்த்து திரும்பிச் செல்வான். கடன் இவரிடம் பெற்றவர் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போவார். திருடன் வருவான். தன் வேலையை கச்சிதமாக முடித்து தெருக் கதவைத் திறக்கச் சொல்லி ஒய்யாரமாய் நடப்பான். வேலைக்காரி வந்து வேண்டிய மட்டும் சமைத்து வைத்து விட்டு வீட்டுக்கும் எடுத்துச் செல்வார். இந்த சின்னஞ்சிறிய வீட்டில் அறியாமை கொலுவிருக்கும். மூடநம்பிக்கை முடிசூடிக் கொள்ளும். இந்த ’இருண்ட வீடு’ இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் ஓடிவிட்டன.

கட்டாயக் கல்வி இந்த நாட்டிற்கு உடனடித் தேவை என்பதை அப்போதே சொல்லி வைத்தார் பாவேந்தர், இருண்ட வீடு என்கிற நகைச்சுவை  நடமிடும் தொடர்நிலைச் செய்யுள் நூலில்; இப்போதுதானே இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி இனிமேல் தானே கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது. ஆனால் கல்வியில்லா வீடு இருண்டு வீடு என்பதை வலியுறுத்தி இந்த எள்ளல் தொடர்நிலைச் செய்யுள் இயற்றிநார் பாவேந்தர்.

எனக்கு சோர்வு துக்கம் இடர்பாடு எது நேர்ந்தாலும் 'இருண்ட வீடு' நூலை கையில் எடுப்பேன். நொடியில் அது நம்மை ஈர்த்து விடும். காலைகதிர் அவனையே தூற்றும். இல்லத்தரசி போடும் கோலம் துடைப்பம் சிதறினால் போல ஆவதும் இதைக்கண்டு சூரியன் மறைவதும்… சிரிப்பு விழா நோகும்படி இருக்கும். சிந்தனை தெளிவாகும்.

வீட்டை விட்டு வெளியே வரும் கணவன் தன்னை யாரும் வந்து அழைக்க முயலக் கூடாது என்று சினத்துடன் குறிப்பிட்டு தான் தங்கியிருக்க உள்ள வீட்டின் அடையாளத்துடன் கதவு எண் தேர்வு எல்லாமே தெளிவாய் சொல்லுவதும், தான் பசியோடும் தாகத்தோடும் வீட்டை விட்டு வெளியேறுவதாக சூளுரைத்து வீட்டு வேலைக்காரி வீட்டுத் தலைவி இடம் இது பற்றி விளக்கியும், தலைவி இது போன ஓடி வரத்தானே போகுது என்று எகத்தாளமாக சொல்லி தனது தூக்கத்தை தொடர்வதும்…. இப்படி எத்தனையோ!

கல்வியறிவில்லாத குடும்பத்தின் கதி சாவுதான் என்று முடிக்கையில் நம் மனம் வருந்தும். பாவேந்தரின் ’இருண்ட வீடு’ மன வெளிச்சம் தரும் சிறிய சுடர் விளக்கு!

இருண்ட வீடு எழுதுவதற்கு ஓர் ஆண்டின் முன் ’குடும்ப விளக்கு’ எழுதி முடித்தார் பாவேந்தர். அது உலகம் பொது காப்பியமாக ஒளிர்கிறது. தமிழ் குடும்பங்கள் எப்படியெல்லாம் அமைந்திட வேண்டும் என்று நுணுகி ஆராய்ந்து சிந்தனைச் சிற்றுளியால் செதுக்கி வைத்தார் ’குடும்ப விளக்கு’.

ஏற்புடைய கருத்துக்களை மட்டுமே யாத்து உருவாக்கிய திருவிளக்கு அது. இதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து எதிர்மறை கருத்துக்களை ஒருங்கு திரட்டி நகைச்சுவையில் நனைத்து எடுத்து இந்த இருண்ட வீட்டை இயற்றினார்.

இவரின் நண்பர் குயில் சிவா இவரை நோக்கி, ’’இப்படி ஒரு கற்பனையா?’’ என்றார். பாவேந்தர் சொன்ன பதில்: என் கற்பனை கால்வாசிதான். மீதி நீ எனக்காக அமர்த்தி விட்டாயே ஒரு வீடு அங்கிருந்த அலங்கோலத்தை தான் இந்த வீட்டில் காட்டியிருக்கிறேன். எப்படி எல்லாம் ஒரு ஒரு குடும்பம் இருக்கக் கூடாதோ அதன் முழுத் தோற்றத்தை ’இரண்டு வீடு’ காட்டுகிறது.

பிறர் மனம் வருந்தாமல் கிண்டலும் கேலியுமாக பேசி சிரிப்பை உண்டாக்கும். சிவா, இருண்ட வீட்டை படித்துவிட்டு ஓயாமல் சிரித்தாராம். அப்படிப்பட்ட சிரிப்புச் செல்பவர்களே மனம் விட்டு சிரிக்கும் வகையில் அமைந்த ’இருண்ட வீடு’ என் போன்றோரின் மனதில் புகுந்து சிரிப்பலைகள் எழுப்பியதில் வியப்பில்லை.

நாட்டின் நலன் கருதி கல்வியை கட்டாயமாக்கும் முயற்சியில் ஆட்சியினர் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்த எண்ணிய பாவேந்தர், தம் கருத்தை நகைச்சுவை களஞ்சியமாக்கி இந்த சிறு நாவலைப் படைத்துள்ளார். இந்த வீட்டுக்குள்ளே அடி எடுத்து வைத்தால் நம் சோகம் எல்லாம் பறக்கும். துயரம் நீங்கும். கலகலப்பாய் படித்துக்கொண்டே செல்வோம். இறுதிக் காட்சிகளில் துன்பியல் ஆக மாறி நம் மனதைக் கவ்வும் நானே சொல்லிக் கொண்டிருக்கிறேனே… நீங்கள் படித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT