பிரபலங்கள் - புத்தகங்கள்

'திருமந்திரம்':பாப்ஸியை மறக்க முடியுமா? -மதன்பாப்

மதன்பாப்

முத்தமிழ் மதுரை மணி என்றழைக்கப்பட்ட என் அப்பா ‘மதுரை மித்திரன்’ என்.சுப்பிரமணியம் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் இருந்த காரணத்தாலோ என்னவோ சிறு வயதிலிருந்தே எனக்கு படிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. நான் படித்த ஹிந்து உயர்நிலைப் பள்ளியின் அருகிலேயே ஒரு நூலகம் இருந்தது. பள்ளி விட்டதும் நேரே அங்கே போய் உட்கார்ந்து விடுவேன். தமிழில் ஆத்திசூடியும் திருக்குறளும் சொல்லாத விஷயங்கள் உலகத்தில் இல்லை. ஆனால், இவற்றைப் பற்றி இப்போது சொன்னால் அடிக்க வந்து விடுவீர்கள் - இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்று. தெரிந்த நூலாக இருந்தாலும் படிக்கப் படிக்க தெளிவுபெறும் ஒரு நூல் திருமூலரின் திருமந்திரம்.

உலகத்து விஞ்ஞானிகளில் மிகப்பெரிய விஞ்ஞானி திருமூலர். திருமந்திரத்தில் சொன்னவற்றை படித்தால் மட்டும் உபயோகமில்லை அவற்றை வாழ்வியல் உண்மைகளாகக் கடைபிடித்தால் வாழ்க்கை மேம்படும்.  வேறு யாரும் சொல்லாத பிரணயமா முறையை திருமூலர் சொல்லியிருக்கிறார். 1:4:2  என்ற விகிதாசாரத்தில் அதாவது மூச்சை 16  வினாடிகள் உள்ளிழுத்து  64 வினாடிகள் அடக்கி 32  வினாடிகள் வெளியே விடுவது அவர் சொல்லித் தரும் பிராணாயாமம். இது ஆச்சரியமான பலன் தரக்கூடியது.

ஆங்கில நூல்களில் ஆரம்பத்தில் என்னை கவர்ந்த ஃபிக்ஷன் வகையறாக்கள் பிறகு கவரவில்லை. மனித கற்பனைகளைத் தாண்டி இயற்கையின் கற்பனையான நான் ஃபிக்‌ஷன் வகை நூல்கள் தான் தான் மன வளத்தையும் மனித வளத்தை மேம்படுத்தக் கூடியவை என்று கண்டுகொண்டு பின்னால் அப்படிப்பட்ட நூல்களின் வாசகன் ஆனேன். அந்த நூல்களில் Chiken Soup For The Soul என்னை அதிகம் கவர்ந்தது. பிரபல எழுத்தாளர் ஜேக் கேன் ஃபீல்டும், மார்க் விக்டர் ஜேன்சனும் வெளியிட்டுள்ள இந்நூலில் நிஜமும் கற்பனையும் ஆன நூற்றியொரு கதைகளின் தொகுப்பு. எல்லாமே சின்ன சின்ன கதைகள் மற்றும் சம்பவங்கள். எல்லாமே மனதைத் தொட்டாலும் உதாரணத்துக்கு அதிலிருந்து ஒன்றை சொல்லிக்கிறேன்.

ஒரு நிஜ சம்பவத்தில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நாள்களை எண்ணிக் கொண்டிருக்கும் பாப்ஸி என்ற ஆறு வயது மகனிடம் அவனுடைய எதிர்காலக் கனவை கேட்கிறாள் இருபத்தாறு வயதுள்ள இளம் தாய். தீயணைப்பு வீரனாக வேண்டும் என்று அவன் கூறியதை அடுத்து அந்த ஊரில் தீயணைப்பு நிலையத்திற்கு சென்று அங்குள்ள தீயணைப்பு வீரரிடம் மகனின் நிலையை சொல்லி ஒரு நாள் அவன் அங்கு தங்கிச் செல்ல அனுமதி கேட்கிறாள். பெரிய மனம் கொண்ட ’பாப்’ என்ற வீரரும் அதற்கும் ஒருபடி மேலே போய் பாப்ஸி அளவுக்கு உண்மையான தீயணைப்பு உடைகளையும் தயார் செய்து அவனை நிஜத் தீயணைப்பு வீரனாக மாற்றி ஒரு நாள் அவர்கள் ஈடுபட்ட 3 தீயணைப்பு சம்பவங்களுக்கும் அழைத்துப் போகிறார். அந்த மகிழ்ச்சியில் அவன் எதிர்பார்த்ததை விட மூன்று மாதங்கள் அதிகமாக உயிர் வாழ்கிறான். கடைசியில் அவன் இறுதி மூச்சு அடங்கும் தருவாயில் அவனுடைய உறவினர்களுக்கு எல்லாம் தகவல் சொல்லும் நர்ஸ் நியாபகம் வந்து தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் சொல்கிறார். அந்தத் தீயணைப்புப் படைத் தலைவன் சைரன் ஒலிக்க அங்கு வந்து பாப்ஸியின் அறை ஜன்னலில் ஏணி போட்டு 14 வீரர்களையும் இரண்டு வீராங்கனைகளையும் ஏற்றி போகச் செய்து அவனை அடைகிறார். அதைக்கண்ட பாப்ஸி ஆனந்தமுற்று தன் கனவு நனவான சந்தோஷத்தில் கண்ணை மூடுகிறான். இதில் அந்த மகன் கனவை நிறைவேற்றிய இளம் தாயை பாராட்டுவதா? கடைசியாகத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் சொன்ன நர்ஸை பாராட்டுவதா? இல்லை அதை சிரமேற்கொண்டு வந்து நிறைவேற்றிய அதிகாரியைப் பாராட்டுவதா மனிதனாக வாழ்வதன் அவசியத்தை உணர்த்தும் இதைப் போன்ற ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து விடலாம் என்பது இந்நூலின் சிறப்பு.

இதே Chiken Soup For The Siul பெண்களுக்கு குழந்தைகளுக்கு சமையலுக்கு என பல தொகுதிகளாக வெளியாகியிருக்கிறது. இதை தவிர இருபதே நிமிடங்களில் படித்து விடக்கூடிய டாக்டர் ஸ்பென்சர் ஜோன்சன் எழுதிய  Who Moved My Cheese என்ற புத்தகமும் வாழ்விலும் சரி தொழிலிலும் சரி முன்னேற்றத்துக்கான வழி முறைகளை குழந்தைகளுக்கு போதிப்பது போல் எலிகளையும் பாலாடைக்கட்டி களையும் வைத்து எளிமையாக விளக்குகிறது. நூல்களைப் படிப்பதை விட அந்த கருத்துக்களை வாழ்வுடன் கொண்டு வளமாக்கிக் கொள்வதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முதல்படி படிக்க ஆரம்பிப்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT