பிரபலங்கள் - புத்தகங்கள்

'பெண்ணின் பெருமை': மறுவாசிப்பிலும் குறையாத உயரம்! -ச.செந்தில்நாதன்

ச.செந்தில்நாதன்

இது பெண்ணியம் பேசப்படும் தலைமுறை. அந்த காலத்தில் புதுமைப் பெண்ணை கனவு கண்டவன் பாரதி. பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து இயக்கம் கண்டவர் பெரியார். புரட்சிகரமான சிந்தனைக்குச் சொந்தக்காரர் எனும் இனம் காட்டப்படாத ஒரு தமிழ் தென்றலும் பெண்ணின் பெருமை பேசி இருக்கிறது. அந்த தமிழ்த் தென்றல் திருவிக. அது தென்றல் தான். பாரதி போல் பெரியார் போல் புயல் அல்ல. நமக்கு அடித்துச் சாய்க்க புயல் வேண்டும். இழுத்துப் பிடிக்க தென்றல் வேண்டும்.

தமிழ் பற்று உள்ளவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட போது தேசிய இயக்கத்தால் இழுக்கப்பட்டவர் திரு. வி.க. அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர். தொழிற்சங்கத்தின் பக்கம் அழுத்தமாக திரும்பிய முதல் தமிழறிஞர். மாறாத காந்தியவாதி. பொது வாழ்வில் தூய்மை இலக்கணமாகத் திகழ்ந்தவர். காந்தியமும் மார்க்சியமும் இணைந்த ஒரு சமூகத்தை பார்க்க விரும்பியவர். அவர் இடதுசாரிகள் போல் பெரியார் போல் பெண்ணியம் பேசாவிட்டாலும், மரபுவழிச் சிந்தனையில் வளர்ந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பெண்கள் நிலை பெண்ணுரிமை பற்றிப் பேசியவர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பெண்ணின் பெருமையை எப்போது திரு. வி.க. பேசினார் என்பது தான். ’பெண்ணின் பெருமை’ அல்லது ’வாழ்க்கைத்துணை’ என்ற அவருடைய நூல் வெளிவந்த ஆண்டு 1927.

முதல் பதிப்பு வெளிவந்த போது அதற்குப் பெரிதும் எதிர்ப்பு எழுந்தது என்று திரு. வி.க. பின்னாளில் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த எதிர்ப்புதான் திரு. வி.க.வின் வெற்றி. சமகாலத்துச் சராசரித் தமிழ் அறிஞர்களை விட மிகவும் முன்னேறி சென்றவர் அவர்.

திரு. வி.க.வின் இந்த நூலை நான் 1962-ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது படித்தேன். மீண்டும் இப்போது படித்தேன். கல்லூரி நாள்களில் நான் படித்த சில நூல்களை மறுவாசிப்பு செய்யும்போது அன்று உயரத்தில் வைத்து கொண்டாடிய உயரம் இப்போது சற்று குறைந்து இருப்பதாகப்பட்டது. சில நூல்களின் உயரம் மறு வாசிப்பிற்கு பின்னும் மாறவில்லை. திரு. வி.க.வின் பெண்ணின் பெருமை இரண்டாம் வகையைச் சேர்ந்தது.

திரு. வி.க.வின் எல்லாக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல கருத்துகள் விவாதத்திற்குரியன. திரு.வி.க. அறம் போதிப்பவர். மரபுவழி சிந்தனையில் தோய்ந்தவர் என்றாலும் சமூக வளர்ச்சியை உள்வாங்கி தன் காலத்தில் முன்னோக்கி நடந்தவர் என்பதை நிராகரிக்க முடியாது. சராசரி தமிழ் அறிஞர்களின் பார்வையில் பெண்ணியத்தைத் திரு. வி.க. பார்க்கவில்லை ஆண், பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, விதவைத் திருமணம் இவற்றிற்கு ஆதரவாக குரல் கொடுப்பதோடு ஆண்களையும் அக்கால இளைஞர்களின் ஆதிக்கச் சிந்தனைகளுக்காக அவர் சாடி இருக்கிறார்

’’பின்னை  நாளில் ஆண் மக்கள் பெண் மக்களின் கல்வியுரிமையை மட்டுமா கெடுத்தார்கள்? வேறு பல பிறப்புரிமைகளையும் அவர்கள் பறித்திருக்கிறார்கள். அந்நாளில் பெண் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எண்ண எண்ண உள்ளம் உருகுகிறது. கண்ணீர் பெருகுகிறது. அக்கால அறிஞர்களின் வன்கண் இருந்தவாறென்னே.’’ இவ்வாறு திரு. வி.க. எழுதி இருப்பது கவனிக்கத்தக்கது.

பெண்கள் அடிமைகள். அடங்கி இருக்க வேண்டியவர்கள். அடுக்களைக்கு உரியவர்கள்; கல்விக்கும் கேள்விக்கும் உரியவர் அல்ல. பேதமையே அவர்களின் பெரும்செல்வம் என்ற கண்ணோட்டங்கள் மண்டிக்கிடந்த காலகட்டத்தில் அந்த கருத்தோட்டங்களின் மறுப்பு குறளே திரு. வி.க.வின் குரல். அதேசமயம் பெண்கள் பழந்தமிழர் வாழ்வில் உரிமை உடையவர்களாக இருந்தார்கள் என்றும் இடைக் காலத்தில் அடிமைப்பட்டார்கள் என்றும் அவர் நம்புகிறார்.

பெண் தாழ்ந்தவள் என்ற சமூக கருத்து மேல் ஓங்கிய காலகட்டத்தில் அவர் ’பெண்ணின் பெருமை’ என்று நூலுக்குத் தலைப்பிட்டவர். அவள் வேலைக்காரி அல்ல என்பதைச் சுட்டவே ’வாழ்க்கைத் துணை’ என்று மாற்றுத் தலைப்பும் தந்தார்

பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்களில் பெண் குலம் தாழ்த்தி பேசப்பட்டிருக்கிறது. ஆனால் திரு. வி.க. அவர்கள் பெண்களைப் பொதுவாக வெறுத்தும் பழித்தும் பாடவில்லை என்கிறார். குறிப்பிட்ட சில வகை பெண்களைப் பற்றியதே அவை என்கிறார். இந்த வாதம் சரிதான் என்பது விவாதத்துக்கு உரியது. அந்தப் புலவர்களின் மீது இருக்கும் மரியாதையால் சொல்கிறாரா? அல்லது ஆராய்ந்து சொல்கிறாரா?

கவிதைக்கு எப்படி பாரதியோ அப்படி உரைநடைக்கு திரு. வி.க. தன் காலத்திய பண்டித நடையில் இருந்து விடுபட்டு பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக தமிழ் உரைநடையை மேற்கொண்டவர் அவர். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ் அது. பண்டிதர்கள் பண்டிதர்களுக்காக தமிழ் உரைநடையை எழுதிய காலத்தில் நல்ல, இனிய, எளிய தமிழ் நடையில் அவர் எழுதினார். அது இப்போது படிக்கும்போதும் இனிதாக இருக்கிறது.

நல்ல உரைநடை எழுத விரும்புகிறவர்கள் பழைய உரைநடை நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும். அதில் முதன்மையானது திரு. விக.வின் தமிழ். சரியாக நாற்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் திரு. வி.க.வின் ’பெண்ணின் பெருமை’யை மறுவாசிப்பு செய்யும்போது திரு. வி.க. என்னிடம் ஏற்படுத்தும் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது. மற்றவர்களையும் அது பாதிக்கும் என்ற நம்பிக்கை உறுதியாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT