பிரபலங்கள் - புத்தகங்கள்

'உயிர்த்தெழும் காலத்திற்காக': திகைத்து நின்றது காற்று! -இந்திரன்

இந்திரன்

நான் கவிதைகளின் வாசகன். ஆதிவாசிகளின் கவிதைகளிலிருந்து ஆலன் ஜின்ஸ்பெர்க் கவிதை வரை தேடித்தேடி வாசித்தவன். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்க் கவிதைகளை - சுகுமாரன் என்றாலும் சுகிர்தராணி என்றாலும் - விடாமல் வாங்கிப் படிப்பவன். அண்மையில் ஒரு தமிழ்க் கவிதைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. ஈழத்துக் கவிஞர் சு. வில்வரத்தினம் எழுதிய ''உயிர்த்தெழும் காலத்திற்காக' எனும் மொத்தக் கவிதைகளின் தொகுப்பு என்னை உள்முகமாகத் தொட்டது போல் அண்மையில் வேறெந்த எழுத்தும் தொடவில்லை.

"என் புத்தகத்தைத் தொடுகிறவன் என்னையே தொடுகிறான்" என்பார் அமெரிக்கக் கவி வால்ட் விட்மன். ஆம்.. வில்வரத்தினத்தின் கவிதைகளைத்தொடுபவன் தமிழ் வாழ்க்கையையே தொடுகிறான்; தமிழ் அடையாளத்தைத் தொடுகிறான்; தமிழ்ப் பண்பாட்டின் சுரங்க அறைகளிலும் பயணிக்கத் தொடங்கிவிடுகிறான்.

வில்வரத்தினம் என்ற கவிஞரை நான் பார்த்ததில்லை. பேசியதில்லை. அவர் கறுப்பா, சிவப்பா என்பதுகூடத் தெரியாது. ஆனால் அவரது கவிதைப் பிரதி கட்டியெழுப்பும் உலகம் என்னுடைய உலகம் என்று உணர்கிறேன். இந்தக் கவிதைகளுக்குள் இருக்கும் ஒரு பன்முக ஆளுமை என்னைக் கவர்ந்து இழுத்துத்தற்காலத் தமிழ் அடையாளத்தின் பன்முகப் பரிமாண விஸ்தீரணங்களைக் காட்டுகிறபோது, வில்வரத்தினம் எனும் கவிஞனின் ஓர்மை, தேர்போல் உயர்ந்து கம்பீரமாய் நகரத் தொடங்குகிறது.

'அகங்களும் முகங்களும்' (1985), 'காலத்துயர்' (1995), 'காற்றுவழிக் கிராமம்' (1995) 'நெற்றிமண்' (2000) என்னும் நான்கு கவிதைத் தொகுப்புகளுடன் அனைத்துமே (ஈழத்தில் வெளியிடப்பட்டவை) இதுவரை அச்சில் பதிவு பெறாத கவிதைகளுக்குமாக இவை முப்பது ஆண்டுக்கால ஈழத்து அனுபவங்கள்.

வில்வரத்தினம் என்னும் முக்கியத் தமிழ்க் கவியின் கவிதை மொழியில் காணக்கிடைக்கும் தமிழ் அழகியல் கூறுகள் மிகவும் அரிதானவை; நுட்பமானவை.

"நான் தமிழ்ச் சூழலே ஈன்ற தமிழ்க் கவி; ஆங்கிலக் கவிதைகளையோ, ஆங்கிலம் வழியாகப் பிறமொழிக் கவிதைகளின் ஆழ அகலங்களையோ கற்றுத் தேர்ந்தவனில்லை" என்று தன்னைப் பற்றிப் பேசிக் கொள்கிறார் வில்வரத்தினம். எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி ஒலிக்கும் இயல்பான இந்தத்தன்னம்பிக்கை கலந்த புரிதல்தான் இவரது கவிதைகளை மூலசக்தி கொண்டவைகளாகவும், அசல்தன்மை கொண்டவைகளாகவும் உயர்த்துகின்றன. அதே நேரத்தில், "தமிழ்க் கவிஞன் தன் பிதுரார்ஜிதமான சொத்துகளை நோக்கித் திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது" என்று பேசுகிற அபத்தமும் இதில் இல்லை.

தமிழ்ப் பண்பாடு என்பது சங்க காலத்துத் தமிழ்ப் பண்பாடு மட்டுமல்ல. இன்றைய தமிழன் தான் கடந்து வந்த பழமையை தற்காலத்தைக் காட்டிலும் உன்னதமானதாக ஜோடித்துக் காட்ட வேண்டிய அவசியமும் இங்கில்லை.

இவரது உவமைகள், படிமங்கள் அனைத்துமே தமிழ் மண்ணில் வேர் கொண்டவை. ஆனால் புத்தம் புதிய காட்சிகள். இத்தகைய தமிழ் அடையாளம் கொண்ட புதிய காட்சிகள்தான் தமிழ் எனும் பழம்பெரும் மொழியைச் சீரிளமை கொண்டதாக்கி இன்றைக்கும் உயிர்த் துடிப்போடு இயங்க வைக்கும்.

போரினால் ஒரு கிராமமே தன்னைக் காலி செய்து கொண்டது. இதுபற்றி எழுத வருகிறார் வில்வரத்தினம்.

'திகைத்து நின்றது காற்று,

தேரடியில் துயின்ற சிறுவன்

திருவிழாச் சந்தடி கலந்தமை கண்டு

மலங்க விழித்தது போல'

என்பது இவரது ஆரம்பகாலக் கவிதை. இதிலேயே வில்வரத்தினம் 'தேரடியில் துயிலும் சிறுவன்' என்று காற்றை உருவகப்படுத்துகிறார். அப்போது தமிழ் வாழ்க்கையின் யதார்த்தம் மொழிப் பரப்பின் மீது மெல்ல மேலெழுந்து வருகிறது.

'நிலவின் எதிரொலி' எனும் கவிதையில் ஈழத்தின் இன்றைய அரசியல் நெருக்கடிகளினால் அநாதைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கப்பட்ட நிலையைப் பாட வருகிறார் கவிஞர். பறம்பு மலைப் பாரியின் குன்றை வென்றெறி முரசின் வேந்தர் கொண்டபின் அனாதைகளாக்கப்பட்ட அங்கவை, சங்கவையும் அவர்களின் 'அற்றைத்திங்க'ளையும், 'இற்றைத் திங்க'ளையும் தனது கவிதையின் பின்புலமாக அமைத்துக் கவிதை எழுதுகிறார். பழந்தமிழ்ச் செய்யுள் இன்றைய ஈழத்துத் தமிழ் வாழ்க்கையின் உள்ளீடாக அமைந்து புதிய கவிதை அனுபவத்தை எழுப்புகிறது.

வில்வரத்தினத்தின் கவிதைகளில் சங்க காலம் தொட்டு இன்று வரை தொடர்ச்சியாகச் சலசலசத்துப் பாய்ந்து வரும் அடி நீரோட்டங்களை அறிய முடிகிறது. அது வாழ்க்கையின் புதிய வயல்களை நோக்கிப் பாய்ந்து தமிழ் வாழ்வை வளப்படுத்து முனைகிறது.

மொழி என்பது ஒரு கட்டுமானம். அதே நேரத்தில் அது ஒரு இயக்கம். பேச்சு மொழி எனும் வாயுமண்டலத்திலிருந்து பிராணவாயுவைச் சுவாசித்து உயிர் வளர்க்கிறது வில்வரத்தினத்தின் இலக்கிய மொழி. வில்வரத்தினம் கவிதைகள் தமிழ் வாழ்க்கையின் தொன்மம் போலச் செயல்படுகின்றன. பிரக்ஞைபூர்வமாக ஒரு தமிழ் அழகியலை மறுகட்டுமானம் செய்கின்றன இக்கவிதைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT