பிரபலங்கள் - புத்தகங்கள்

திறக்கத் திறக்க ஜன்னல்கள் வரும்! -மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்

9th Apr 2021 07:00 AM | மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்

ADVERTISEMENT

ஒரு புத்தகம் அல்லது ஒரு சம்பவம் ஒரு மனிதர் நம் வாழ்க்கையை மாறியதாகக் கூறும் அனுபவம் என்னைப் பொருத்தவரை வாழ்க்கையின் ஒட்டு மொத்தப் பார்வையில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. வாசகானுபவத்தைப் பொருத்தவரை ஒரு வாசகன் என்ற முறையில் பள்ளிப்பாடத் திட்டத்திற்கு அப்பால் முதல் முதலில் வேறு படிப்பு என்பது நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது அந்தக் காலத்தில் வெளிவந்த சிறுவர்  இதழான ’கண்ணன்’ தான் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும்.

 அதற்குப் பின்னால் வார இதழ்களில் வந்த கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சரித்திர நாவல்களைக் கூறலாம். எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’, சாண்டில்யனின் ’கடல் புறா’ படித்தபோது ஏற்பட்ட உணர்வு…. ஆச்சரியம்…. பின்னால் வளர்ந்த பிறகு படித்தபோது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. விடுமுறையில்தான் எனக்கு மு.வ.வின் நாவல்கள் ’கரித்துண்டு’, ’அகல்விளக்கு’ போன்றவையும் அகிலனின் ‘சித்திரப்பாவை’ ‘எங்கேபோகிறோம்’ போன்றவற்றையும் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

பி.யூ.சி. படிக்கும்போது ஜெயகாந்தனின் நாவல்கள், பெண் எழுத்தாளர்கள் இந்துமதி, வாஸந்தி, சிவசங்கரி, லக்ஷ்மி, போன்றவர்களின் கதைகளைப் படிக்க நேர்ந்தது. அறிவுப் பூர்வமாக சுஜாதாவின் சில சிறுகதைகள், ஓரிரு நாவல்கள், ’மணிக்கொடி’க் காலத்திய படைப்பாளிகளான மெளனி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் மற்றும் லா.ச.ரா. அதன் பின் அசோகமித்ரன், கந்தசாமி, பிரபஞ்சன் போன்றோரின் படைப்புகளைப் படிக்கும்போது வித்தியாசம் உணர முடிந்தது. கவிதையிலும் அப்படியே ஆரம்பகால ’வானம்பாடி’க் கவிஞர்களின் புதுக்கவிதைகளை முதலில் படிக்கையில் ஏற்படுத்திய அனுபவம் ஒரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போது இல்லை. அதேபோல் கல்லூரி நாள்களில் படித்த மார்க் ட்வெயின், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், கார்க்கி, துர்க்கனேவ், அலெக்ஸாண்டர் டூமாஸ், தாஸ்தாவ்ஸ்கி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஆர்த்தர் ஹெய்லி இப்படி நான் மேலே குறிப்பிட்ட மற்றும் குறிப்பிட மறந்த பல புத்தகங்கள், பத்திரிகைகள், கட்டுரைகள் இவையனைத்திலிருந்தும் நான் பெற்ற அனுபவம் என்னவென்றால், எந்த ஒரு புத்தகமோ, நபரோ, சம்பவமோ வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களுக்கும் வழிகாட்டியல்ல.

ADVERTISEMENT

மனித வாழ்க்கையில் எல்லாப் படிமங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான படைப்பு  இது வரை ஒரே புத்தகத்திலோ அல்லது நபரிலோ தேடிக் கிடைப்பதில்லை. அவை வாழ்க்கையின் ஒரு பரிமாணம் அல்லது புரிந்துணர்வை மட்டுமே நமக்கு அளிக்கின்றன.

என் வாசக அனுபவம் அல்லது சிறிய படைப்பு அனுபவம் எனக்குக் கூறும் செய்தி என்னவென்றால், முதல் அனுபவத்தில் ஏற்படும் பரவசம் அதுவரை எனக்கு இருக்கும் அறியாமை இருளை அகற்றும் ஒரு ஜன்னல். வாழ்க்கை அனுபவம் என்பது திறக்கத் திறக்க ஜன்னல்கள் வந்து கொண்டே இருக்கும். நாம் மிக உன்னதமானது, மிகப் பரவசமுடையது என்று நினைக்கும் வாசக அல்லது படைப்பு அனுபவம் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மாறிவிடும் சாத்தியமே அதிகம்.

ஒருவேளை பல புத்தகங்கள் படித்தவுடன் நமக்குச் சில செய்திகள் கிடைக்கலாம். மாறாக ஒரு புத்தகத்தையோ, நபரையோ, சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பது நமக்குள் ஒரு அடிப்படைவாதத்தை (ஃபண்டமெண்டலிசம்) ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இறுதியாக 30 வருடங்களாக அடிக்கடிப் பார்க்கும் (படிக்கும்) புத்தகம் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷ்னரி என்று கூறலாம் என்றால் அதுகூடச் சமீபத்தில் கிடைத்த சி.டி.ராம் அமெரிக்கன் ஹெரிடேஜ் உச்சரிப்புடன் கூடிய டாக்கிங் டிக்‌ஷ்னரியாக மாறிவிட்டது!.  

Tags : celebrities books
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT