பிரபலங்கள் - புத்தகங்கள்

'சமுதாய ஒப்பந்தம்': இரண்டு புரட்சிகளின் விதை! -‘முகம்’ மாமணி

முகம் மாமணி

ஜெனிவாவின் குடிமகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்ட சிந்தனையாளன் அவன். தன் தாய் மண்ணை நேசிப்பதில் அந்த அளவுக்கு அவனுக்கு ஈடுபாடு வரக் காரணமே அவன் தந்தை தான். சிறுவயது முதலே நாட்டுப் பற்றை அவனுக்கு ஊட்டி வளர்த்தார்.

எந்தத் தாய்நாட்டை உயிருக்கும் மேலாக அவன் நேசித்தானோ அந்த ஜெனீவாதான் அந்தச் சிந்தனையாளன் வடித்தெடுத்த நூல்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியது.

தான் தீயிலிட்டுக் கொளுத்திய நூல்தான் உலகத்தில் இரண்டு மாபெரும் புரட்சிகளை உருவாக்கப் போகிறது என்று அந்த நாடு அறியாமல் போயிற்று.

உலகையே குலுக்கிய இரண்டு புரட்சிகள் உருவாவதற்குக் காரணமான அந்த நூலை 50 ஆண்டுகளுக்கு முன்பு (26.6.1951) நான் படிக்க நேர்ந்தது. அந்த நூலின் பெயர் சமுதாய ஒப்பந்தம். ரூஸ்ஸோ எழுதியது.

அந்த நூல் ஒரு மொழி பெயர்ப்பு என்று உணர முடியாத அளவுக்கு மூல நூலையே விஞ்சும் அளவுக்கு இன்றும் இருக்கிறது. அதாவது வால்மீகியின் மூல ராமாயணத்தையே விஞ்சும் வகையில் தமிழில் வடித்தெடுக்கப்பட்ட கம்ப ராமாயணத்தைப் போல.

எண்ணற்ற அடிக்குறிப்புகளோடு கிரேக்க, ரோமப் பேரரசுகளைப் பற்றியும் அக்காலச் சிந்தனையாளர்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அறிஞர் வெ.சாமிநாத சர்மா.

ரூஸ்ஸோவின் சமுதாய ஒப்பந்தம் என்னும் நூல் இரண்டு மாபெரும் புரட்சிகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்திருக்கிறது. ஒன்று 1774 ஆம் ஆண்டில் தோன்றிய அமெரிக்கப் புரட்சி. மற்றொன்று 1789-ஆம் ஆண்டில் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி.

இந்த இரண்டு புரட்சிகளின் விளைவாகத் தோன்றிய சுதந்திரப் பிரகடனங்களில் சமுதாய ஒப்பந்தத்தின் வாசகங்கள் எடுத்தாளப்படிருந்தன.

பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தச் சமுதாய ஒப்பந்தத்தைப் படிப்பதும் இதிலுள்ள கருத்துகளை மேற்கோள் காட்டுவதும் பெருமையாகக் கருதப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சி நடந்தபோது சமுதாய ஒப்பந்தம் நூலை ஒரு வேதப் புத்தகம் போல் இளைஞர்கள் வீதிகளில் படித்துச் சென்றதும் உண்டு.

ஒரு நாட்டில் அரசியலில் பொதுமக்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்று சொல்வது தான் ஜனநாயகம். இந்த ஜனநாயகத் தத்துவத்தை முதன்முதலாக அறைகூவிச் சொன்னவன் ரூஸ்ஸோதான். இன்றைய ஜனநாயக அரசாங்க முறைகள் எல்லாம் சமுதாய ஒப்பந்தத்தின் பல்வேறு தோற்றங்களே.

தனி மனித சுதந்திரத்தைப் பற்றி ரூஸ்ஸோ சொல்லும்போது ‘’மனிதன் பிறக்கிறபோது சுதந்திரமுள்ளவனாகவே பிறக்கிறான். ஆனால் பிறகு அவனுடைய நிலைமையைப் பார்க்கிற போது அவன் எங்கு பார்த்தாலும் அடிமைப்பட்டவனாகவே கிடக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனும் தானே மற்றவர்களுக்கு எஜமானன் என்று நினைக்கின்றான். ஆனால் உண்மையில் இவன்தான் மற்ற எல்லாரையும் விடப் பெரிய அடிமையாக இருக்கிறான்’’ என்று அழுத்தமாகக் கூறுகிறான்.

சமுதாயம் என்றால் என்ன என்பதற்கு ரூஸ்ஸோ தெளிவான விளக்கமாக ‘’உலகத்தில் ஏற்பட்டிருக்கிற எல்லாச் சமுதாயங்களைக் காட்டிலும் மிகப் பழமையான சமுதாயம்-குடும்பம்’’ என்கிறான்.

மேலும் ‘’எந்த மனிதனுக்கும் தன் சக மனிதன் மீது ஆதிக்கம் செலுத்த இயற்கையாக அதிகாரம் கிடையாது. அதேபோல் வன்முறையிலிருந்து உரிமை பிறப்பதில்லை. எனவே மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றால் எல்லாம் சம்பிரதாயத்தின் மீதுதான்’’ என்கிறார்.

இந்த சமுதாய ஒப்பந்தத்தைப் பற்றி ஜோசப் சேனியர் என்ற பிரெஞ்சு அறிஞன் அழகாகக் கூறுகிறான்.

‘’மானிட ஜாதி தன் உரிமை சாசனத்தை எங்கேயோ தொலைத்துவிட்டது. அதைத் தேடிக் கொடுத்தான் ரூஸ்ஸோ.’’

இழந்த பொருளைத் தேடிக் கொடுத்தவனை மனித குலம் மறந்துவிடுமா? சுதந்திர உணர்வு பெற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் சமுதாய ஒப்பந்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT