எதிர்காலம் சிறப்பாக அமையும்
என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்?
வாசகி, அம்பத்தூர்.
உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி மூலத் திரிகோணம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெற்று சூரிய பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார்.
சுக பூர்வ புண்ணியாதிபதி சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
மூன்று, ஆறாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று, கேது பகவானுடன் இணைந்து ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார்.
தன, களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் சனி பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டு வரவும்.