நன்மைகள் உண்டாகத் தொடங்கும்
ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். குரு தசை காலத்தில் பத்து ஏக்கர் நிலம், புகழ், செல்வாக்கு அனைத்தையும் இழந்தேன்... இழந்தவை மீண்டும் கிடைக்குமா..?
சண்முகம், அம்மாபாளையம்.
உங்களுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதி சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதி, லாபாதிபதி ஆகிய சந்திர, சூரிய, புத பகவான்கள் லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுக, பூர்வ புண்ணியாதிபதியான சனி, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
மூன்றாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் விபரீத ராஜ யோகம் பெற்று, பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம், லாப ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதியான புத பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகத் தொடங்கும். படிப்படியாக வருமானம் உயரும். இழந்த நிலம், வண்டி, வாகனங்களை மறுபடியும் வாங்குவீர்கள். புகழ், செல்வாக்குடன் வாழ்வீர்கள்.