நல்ல வேலை கிடைக்கும்
என் பேத்தி இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வேண்டும். எந்தத் துறை ஏற்றது? மணவாழ்க்கை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு பற்றியும் கூறவும்..!
வாசகி, மயிலாடுதுறை.
உங்கள் பேத்திக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி, எட்டாமதிபதி சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டைப் பார்வை செய்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானத்தில் லாபாதிபதியான சூரிய பகவானுடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து புத ஆதித்ய யோகத்தைப் பெற்று அவர்கள் இருவரின் பார்வையும் லாப ஸ்தானத்தின் மீது படிகிறது.
தனாதிபதி, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்து சனி பகவானுடன் சமசப்தம பார்வையில் இருக்கிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ஆறாம் வீடான ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக தன் ஆட்சி வீடான ஆறாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக எட்டாம் வீட்டையும் (பெண்களுக்கு எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும்), அங்கு அமர்ந்திருக்கும் உச்சம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியான சந்திர பகவானையும் (குரு சந்திர யோகம்) பார்வை செய்கிறார்.
கேது, ராகு பகவான்கள் லக்னம், ஏழாம் வீடுகளில் வர்கோத்தமத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். அவருக்கு கணினி, மெடிக்கல் அல்லது மருந்துத்துறை ஏற்றது. வெளியூர் சென்று தங்கிப் படிப்பார். அதிக பயணங்களுடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும். ராகு மகாதசை இன்னும் 12 வருடங்கள் நடக்க இருப்பதால் அதற்குள் ஓரளவுக்கு நல்ல நிலையை அடைந்துவிடுவார். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.