என் பேரனுக்கு மூளையில் சிறிய கோளாறு உள்ளதால் சிகிச்சை எடுத்து வந்தார். கஷ்டப்பட்டு படிப்பை முடித்துவிட்டார். என்ன வேலை செய்யலாம் அல்லது தொழில் தொடங்கலாமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்?
-வாசகர், சென்னை.
உங்கள் பேரனுக்கு கடக லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்து இருவரும் யோககாரகரான செவ்வாய் பகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான் அயன சயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் பாக்கியாதிபதியான குரு பகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் சூரிய (சிவராஜயோகம்), புத (புத ஆதித்ய யோகம்), சுக்கிர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் பெற்றிருக்கிறார். தற்சமயம் குரு மஹா தசையில் சுய புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்யலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.