என் மைத்துனரின் மகளுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? குடும்ப பாரம்பரியத்தின் படி திருமணம் செய்து கொள்வாரா? அவரது மனநிலை எப்பொழுது மாறும்?
-வாசகர், சென்னை.
உங்கள் மைத்துனரின் மகளுக்கு ரிஷப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னம், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் சந்திர பகவானுடன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான புத பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில், உச்சம் பெற்றுள்ள சுகாதிபதியான சூரிய பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் மூலத்திரிகோணம் பெற்றமர்ந்து சசமஹா யோகத்தைப் பெறுகிறார். ராகு பகவான் ஆறாம் வீட்டில் இருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும்.
அஷ்டம ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானையும், உச்சம் பெற்ற சுக்கிர பகவானையும், லக்னத்தையும், தைரிய ஸ்தானத்தையும், அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்) பார்வை செய்கிறார்.
தற்சமயம் கேது பகவானின் தசையில் தர்மகர்மாதிபதியின் புக்தி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நடக்கத் தொடங்கும். இதனால் அவருக்கு மன மாற்றம் உண்டாகும்.
பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவருக்கு எதிர்பார்த்த குடும்ப பாரம்பரியத்தின்படி திருமணம் கைகூடும்.