ஜோதிட கேள்வி பதில்கள்

பேச்சாற்றலால் ஜீவனம்! 

25th Sep 2020 05:09 PM

ADVERTISEMENT


எனக்கு 52 வயதாகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்ததால் தரையில் உட்காரவோ, படுக்கவோ முடியாது. இதனால் தொடர் வருமானமும் இல்லை. ஜோதிடம் படித்து பலன் சொல்லலாமா? வேறு என்ன தொழில் செய்யலாம்? தெய்வ அனுக்கிரகம் உள்ளதா?   

-வாசகர், பொள்ளாச்சி.

உங்களுக்கு கும்ப லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம். லக்னம், அயன ஸ்தானமான பன்னிரண்டாமதிபதி சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் இறுதிவரை உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்துக்கும் எக்காலத்திலும் கஷ்டம் வராது என்று கூறவேண்டும். 
சனி பகவான் உழைத்து பொருளீட்டச் செய்வார். அதேநேரம் உழைப்புக்கேற்ற வருமானத்தை நிச்சயம் கொடுப்பார். ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி உச்ச மூலத் திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார். 
நான்காம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். புத, சுக்கிர பகவான்களின் சேர்க்கை மஹா விஷ்ணு, மஹா லட்சுமி யோகமாகும். 
"படுத்தவுடன் உறக்கம்' என்பார்களே அது பன்னிரண்டாம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பதால் அமையும். அதே போல் இறுதிக் காலமும் அமைதியாகக் கழியும் என்பதையும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ள வேண்டும். 
இரண்டாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஏழாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் (சிவ ராஜ யோகம்) ஒன்பதாம் பார்வை மூன்றாம் வீட்டின் மீதும் படிகிறது. மூன்றாம் வீட்டிற்கும், பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகு, கேது பகவான்கள் மீன, கன்னி ராசிகளில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப, சிம்ம ராசிகளை அடைகிறார்கள்.
உங்களுக்கு லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. அவருடன் அசுபக் கிரகங்கள் இணைந்திருந்தாலும் அவர்கள் லக்ன சுபராகிறார்கள்.
புத, சுக்கிரபகவான்களின் இணைவும் ஒரு வகையில் புதிய ஆராய்ச்சியில் வெற்றி பெற உதவுவார்கள். அதனால் ஜோதிடத்தைப் பயிலலாம். தொழில் ஸ்தானாதிபதி வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சினால் வருமானம் வரக்கூடிய தொழிலை உண்டாக்கித் தருவார். அதனால் "கன்சல்டன்ஸி' துறையிலும் ஈடுபடலாம். 
லக்னத்தையும், லாப ஸ்தானத்தையும், தைரிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வை செய்வதால் தெய்வ அனுக்கிரகம் உள்ளது. 
பொதுவாக இரண்டாம் வீட்டில் ராகு பகவான் உள்ளதால் பெண் தெய்வங்களை வழிபடுவது நலம். இதனால் துர்க்கையை வழிபட்டு வரவும். தற்சமயம் கேது மஹா தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படும். மற்றபடி, உடல் உபாதைகள் மறுபடியும் ஏற்படாது. தொடரும் சுக்கிர மஹா தசை யோக தசையாக அமையும். தீர்க்காயுள் உண்டு. வருடா வருடம் குல தெய்வ வழிபாட்டையும் செய்து வரவும்.

Tags : ஜோதிட கேள்வி பதில்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT