ஜோதிட கேள்வி பதில்கள்

சனி தசையில் வளர்ச்சி!

25th Sep 2020 05:08 PM

ADVERTISEMENT

எனக்கு மூளைக்குச் செல்லும் பிராண வாயு குறைவதால் பல உடல் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறேன். சனி தசையில் முன்னேற்றம் ஏற்படுமா? 

-வாசகர், ஆரணி.

உங்களுக்கு கடக லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். லக்னாதிபதி சந்திர பகவான் மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதியின் சுப பலத்தால் திரவ சம்பந்தப்பட்ட பொருள்கள், தானியம், காய் கனி, இனிப்பு, பட்டு, நவரத்தினம் ஆகியவைகளின் மூலம் வருமானம் கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஐந்தாம் வீட்டிற்கும், பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.

ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் ஏகாதச (பதினொன்று) பிரகஸ்பதியாக அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை மூன்றாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (குருச் சந்திர யோகம்) படிகிறது. இதனால் மன நிலை சீரடையும். கற்பனை வளம் ஓங்கும். கலைத்துறையில் நுண்ணிய அறிவு உண்டாகும். சந்திர பகவான் (தனு) உடல் காரகராக ஆவதால் உடல் ஆரோக்யத்தையும் மீட்டுத் தருவார். தாய் நலமும் சிறப்படையும். 

ADVERTISEMENT

குரு பகவானின் ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும் படிகிறது. குடும்பாதிபதி லக்னத்தில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். மூன்று, பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதியான புத பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். நான்கு, பதினொன்றாம் வீட்டிற்கதிபதியான சுக்கிர பகவான் லக்னத்திலமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். ஏழு, எட்டாம் வீடுகளுக்கு அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சுய சாரத்திலமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 

ராகு, கேது பகவான்கள் துலாம், மேஷ ராசிகளில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப, சிம்ம ராசியை அடைகிறார்கள். 

"அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலுள்ளது' என்பதை அனைவரும் அறிந்ததே. மனித வாழ்வுக்குத் தேவையான வாயுக்கள் அனைத்து கிரகங்களுக்குள்ளும் அடைந்துள்ளது. இதில் பிராணவாயு சூரிய, குரு, செவ்வாய், சுக்கிர பகவான்களில் மேற்கூறிய வரிசையில் அடங்கியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. 

அரசமரம் சூரிய பகவானுக்குரியதாகக் கருதப்படுகிறது. அதை வடமொழியில் "அஸ்வத்த மரம்' என்றும், திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசைகளில் அரச மரத்தைச் சுற்றிவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அரசமரம் அதிகமாக பிராணவாயுவை வெளியிடுவதால் அரச மரத்தைச் சுற்றி வரும்போது பிராணவாயு உட்புகுவதால் கர்ப்பப்பை பிரச்னைகள் நீங்கிவிடும் என்று வைத்திருந்தார்கள். உங்களுக்கு சூரிய பகவான் லக்ன சுபராகி சனி பகவானுடன் இணைந்து இருப்பது குறையென்றாலும், அவரால் குறையையும் மீறி நன்மையைச் செய்ய முடியும். 

தற்சமயம் சனி பகவானின் தசை நடுவயதில் நடக்கத் தொடங்கியுள்ளதால் வாழ்க்கையில் அனைத்து வளர்ச்சியும் எதிர்பார்த்தபடியே உண்டாகும். பிராணவாயு பிரச்னையும் இன்னும் இரண்டாண்டுகளில் முழுமையாகத் தீர்ந்துவிடும். பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT