ஜோதிட கேள்வி பதில்கள்

பனங்காட்டு நரி! 

27th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? திருமணத்திற்குப் பிறகு மணவாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வெளிநாட்டில் வசிக்கும் அவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாட்டுக்குத் திரும்பி விட வேண்டும் என்று நினைக்கிறார். இது நடக்குமா? அமெரிக்காவில் எம்பிஏ படிப்பாரா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

வாசகர், தரமணி.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், நவாம்ச லக்னம் ரிஷபம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். அயன ஸ்தானாதிபதியான சந்திர பகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 

லக்னாதிபதியான சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பதால் அவர் வாழப் பிறந்தவர் என்று கூறவேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதும் மேன்மையாகும். 

ADVERTISEMENT

குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது. குரு பகவானின் ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரியபகவானின் மீதும் (சிவராஜயோகம்), ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும் படிகிறது.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று (நீச்சன் இருக்கும் வீட்டில் உச்சம் அடையும் கிரகம் சந்திர கேந்திரத்திலோ அல்லது லக்ன கேந்திரத்திலோ இருப்பதால் உண்டாகும் யோகம்; அதாவது சுக்கிர பகவான் சந்திர பகவானின் கேந்திரத்தில் இருக்கிறார்) நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 

சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் ஆறாம் வீட்டிலமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
ஆறாம் வீட்டிற்கும், ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று (விபரீத ராஜயோகம்) நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 

அவருக்கு ஆறாம் வீடு அதிபலம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆறாம் வீடு வலுத்திருந்தால் "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது' என்பார்களே அதுபோல் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சமயோஜிதமாக நடந்து கொண்டு, யுக்தியுடன் செயல்பட்டு வெற்றி பெறும் ஆற்றல் உண்டாகும். 

அதோடு செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக தன் ஆட்சி வீடான பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். ராகு பகவான் ஐந்தாம் வீட்டிலமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியையும், கேது பகவான் லாப ஸ்தானத்திலமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியையும் அடைகிறார்கள். வெளிநாட்டு வாழ்க்கைக்கு சுக ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும், அயன ஸ்தானமும் குறிப்பாக பலம் பெற்றிருக்க வேண்டும்.

சுக பாக்கியாதிபதி செவ்வாய் பகவான் உச்சம், பன்னிரண்டாமதிபதி விபரீத ராஜயோகம், சர ராசியில் நான்கு கிரகங்கள் வலுப்பெற்று இருப்பதும் அவர் வெளிநாட்டில் இன்னும் குறைந்தது பத்தாண்டுகளாவது வசிப்பார் என்று கூற வேண்டும்; அதாவது ராகு பகவானின் தசை முடியும் வரை. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் மேலாண்மைப் படிப்பை முடிப்பார். 

தற்சமயம் ராகு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சீராகவே செல்லும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT