ஜோதிட கேள்வி பதில்கள்

பூர்வீகத்தில் இருக்கலாம்...!

DIN

என் கணவர் ஒன்றரை ஆண்டுக்கு முன் சாலை விபத்தில் இறந்து விட்டார். என் மகன், மகள்களுடன் என் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறேன். வருமானம் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. என் வாழ்க்கை எப்பொழுது முன்னேற்றம் அடையும். என் மகனின் ஜாதகப்படி பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் யோகம் உள்ளதா? என் கஷ்டங்கள் எப்போது தீரும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? 

வாசகி, திருப்பூர் மாவட்டம்.

உங்களுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச வீடான ரிஷப ராசியை அடைகிறார். 

தொழில் ஸ்தானாதிபதி சுப கிரகமாகி உச்ச கேந்திரமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷத்தை பெறுவார். அவர் பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெறுவதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடும். அதோடு அவரோடு சுபாவ அசுப கிரகமான சனி பகவான் இணைந்திருப்பதும் கேந்திராதிபத்ய தோஷத்தை நீக்கி விடுகிறது. அதேநேரம் சந்திர பகவான் வளர்பிறை சந்திர பகவானாக இருப்பதால் சுப கிரகமாகவே கருதப்பட வேண்டும். இதனால் தைரியம், துணிவு இருக்கும். வைராக்யம் உண்டாகும். கெüரவம், பதவி, அந்தஸ்து அமையும். காரியசித்தி உண்டாகும். உயர்பதவி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சந்திர பகவான் புத பகவானின் வீட்டில் இருப்பதால் நயமாகப் பேசும் ஆற்றல் உண்டாகும். சூட்சும புத்தி தக்க சமயத்தில் கை கொடுக்கும். சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசும் குணம் அமையும். சந்திர பகவான் தாயைக் குறிக்கும் கிரகமாகவும் கூறப்படுவதால், தாய் நலமும் உயர்ந்து காணப்படுவதோடல்லாமல் புத்தி, உடல்நலம் (தனு காரகர் அதாவது உடல் காரகர்) ஆகியவைகளும் உயர்வுறும். அதனால் சந்திர பகவானுக்கு முழுமையான ஸ்தான பலம் உண்டாகிறது என்றும் புரிந்துகொள்ளவேண்டும். 

லக்னம், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். லக்னாதிபதி தன் வீட்டிற்கு ஏழாம் வீடான கேந்திர ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. அதேநேரம் அஷ்டம ஸ்தானமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெறுவது குறை என்றே பார்க்க வேண்டும். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் நீச்சமடைகிறார்.

பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) நீச்சமடைந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். நீச்சம் பெற்ற கிரகம் லக்ன கேந்திரத்திலோ அல்லது சந்திர கேந்திரத்திலோ அமர்ந்திருந்தால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுவார் என்பது ஜோதிட விதி. இதனால் பெரிய அளவுக்கு கடன்களோ, உபாதைகளோ, வழக்கு விவகாரங்களோ ஏற்படாது என்று கூறலாம். அதோடு பாக்கியங்களும் தேடிவந்து வாழ்க்கையில் தங்கும் என்றும் கூற வேண்டும். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் வர்கோத்தமம் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார். இதனால் சிறப்பான பூமி பாக்கியம் ஏற்படும். அதோடு உத்தியோக ஆதிக்கம், கர்ம ஆதிக்கம், சகோதர ஆதிக்கம், அறிவு ஆதிக்கம் ஆகியவைகள் மேன்மையுறும் என்றும் கூற வேண்டும். 

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். குரு பகவான் சந்திர பகவானுடன் இணைந்து குருச் சந்திர யோகத்தைப் பெறுகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுகஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஏழாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் புத பகவானின் மீதும், குருபகவானின் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். கேது பகவான் சுகஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ராகு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம், சுகஸ்தானம், கல்வி ஸ்தானம், தாய் ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். புதபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். சந்திர பகவானின் கேந்திரத்தில் சுக்கிர பகவான் ஆட்சி பெற்றிருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான "மாளவிகா யோகம்' உண்டாகிறது. பொதுவாக தனாதிபதியும், ஐந்தாமதிபதியும் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் எவ்வளவு ஏழ்மையில் பிறந்திருந்தாலும், படிப்படியாக உயர்ந்து சிறப்பான வாழ்க்கை வசதிகள் உண்டாகிவிடும் என்று கூறவேண்டும். 

ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) விபரீத ராஜ யோகம் பெற்று, நவாம்சத்தில் கடக ராசியில் நீச்சமடைகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பித்ரு காரகராகி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) திக்பலம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். அதோடு சூரிய பகவானுடன் புத பகவான் இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறது. 

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாபஸ்தானத்தில் (ஏகாதச பிருஹஸ்பதி) சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசி அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானின் மீதும் (குருமங்கள யோகம்), ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும், அங்கு உச்சம் பெற்றமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான தன் மூலத் திரிகோண வீட்டின் மீதும் படிகிறது. ராகு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகிறது. 

உங்களுக்கு தற்சமயம் குரு மஹா தசையில் கேது பகவானின் புக்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடக்கும். உங்கள் மகனுக்கு தற்சமயம் பலம் பெற்றுள்ள ராகு மஹா தசையில் குரு பகவானின் புக்தி இன்னும் ஒன்றரை ஆண்டு நடக்கும். உங்களுக்கு நட்பு ஸ்தானத்திலும், அயன ஸ்தானத்திலும் ஆறு கிரகங்கள் இருப்பதாலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து சுக்கிர பகவானின் புக்தி நடக்க இருப்பதாலும் குடும்பத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையத் தொடங்கும். உங்கள் மகனின் ஜாதகப்படியும் குடும்பத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையத் தொடங்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி 
பூர்வீக சொத்தை ஆண்டு அனுபவிக்கும் பாக்கியம் உள்ளது. உங்களுக்கு அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். கல்வி நிறுவனங்களிலும் பணி செய்ய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT