என் மகனின் ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளைத் தெரிவிக்கவும். இங்கு ஜோதிடர்களிடம் காண்பித்ததில் களத்திர தோஷம் உள்ளதாகக் கூறுகிறார்கள். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் இருப்பதும் குறையா? கல்வி நிலை எவ்வாறு உள்ளது? சந்திரனுக்கு 12-இல் ராகு இருந்து, ஏழரை சனியும் நடக்கும் காலத்தில் கஷ்டப்படுவாரா? ஐந்தாம் வீட்டில் கேது இருப்பது புத்திர பாக்கியத்தைத் தடை செய்யுமா? பரிகாரம் பற்றிக் கூறவும்.
-வாசகர், குறிஞ்சிப்பாடி.
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சுக்கிர பகவான் தன் மூலத் திரிகோண வீடான துலாம் ராசியில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். இதனால் சுக்கிர பகவான் சிறப்பான சுப பலம் பெற்று இருக்கிறார் என்று கூற வேண்டும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்று சூரியன், குரு, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். புத ஆதித்ய யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. கேது பகவான் உச்சம் பெற்றுள்ள புத பகவானுடன் இணைந்து இருப்பதால் அஷ்ட மஹா நாக யோகம் உண்டாகிறது. இதனால் புத்திர பாக்கியத்திற்கும் தடை ஏற்படாது. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று சந்திர பகவானுடன் இணைந்திருப்பதால் சந்திர மங்கள யோகமும் உண்டாகிறது. தர்மகர்மாதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்கிறார். அதோடு சனிபகவானும் சுய சாரத்தில் இருக்கிறார். சந்திர பகவானுக்கு விரய ஸ்தானத்தில் ராகு பகவான் இருப்பதை மஹாசக்தி யோகம் என்று கூறுகிறோம். அதோடு ராகு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், குருபகவானின் பார்வையைப் பெறுவதும் சிறப்பு. அதனால் அவரின் கல்வி, மணவாழ்க்கை, புத்திரபாக்கியம் எதுவும் பாதிக்கப்படாது. அவருக்கு ஏழரை சனி தொடங்கும் முன்பு சந்திர மஹாதசையும் முடிந்துவிடுகிறது. பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.