ஜோதிட கேள்வி பதில்கள்

தேசிய அளவில் புகழ்!  

DIN


நான் கட்டுமானத்துறையில் உள்ளேன். அத்துடன் தொல்பொருள் ஆராய்ச்சி செய்து பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளேன். அகில இந்திய அளவில் புகழ் கிடைக்குமா? எனது திருமணம் எப்பொழுது நடக்கும்?  

-வாசகர், திருப்பூர்.

உங்களுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ஒரு ஜாதகத்தில் சந்திரபகவான் சுப கிரகமாகி (வளர்பிறைச் சந்திரன்) வலுத்திருந்தால் வாழ்க்கையில் சுபிட்சங்களைத் தேடிப் பெறுவார். நாணயமான நண்பர்கள் கிடைப்பார்கள். செய்தொழிலில் சாதனைகளும் செய்வார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். அசையும், அசையா சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். மூதாதையர்களின் சொத்துக்களை அனுபவிக்கும் யோகமுண்டாகும். லக்னம், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் பெற்று நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். அதாவது, செவ்வாய் பகவானுக்குரிய காரகத்துவங்களின் மூலம் எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். 

இரண்டாம் வீட்டிற்கும், ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். குரு பகவான் ஐந்தாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் (கஜகேசரி யோகம்), ஒன்பதாம் பார்வையாக தன் உச்ச வீடான கடக ராசியையும் பார்வை செய்கிறார்.

மூன்றாம் வீட்டிற்கும், நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான், ஆறாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச வீடான துலாம் ராசியை அடைகிறார். இதனால் சனிபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகி, சுயமாக சம்பாதித்து நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுகமும் கூடும். ஏழாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் நீச்ச ராசியான கன்னி ராசியை அடைகிறார்.

 சுக்கிர பகவான் குரு பகவானுடன் இணைந்திருப்பதும், உச்சம்பெற்ற சந்திர பகவானால் பார்க்கப்படுவதும் சிறப்பு. சந்திர பகவானின் கேந்திரத்தில் சுக்கிர பகவான் (குரு பகவானுக்கு சம அந்தஸ்திலுள்ள கிரகம்) இருந்தால் அதையும் கஜகேசரி யோகம் என்றே கூறவேண்டும். அதனால் உங்களுக்கு "இரட்டை கஜகேசரி யோகம்' உண்டாகிறது என்று கூற வேண்டும். 

எட்டாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். 

பத்தாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால், பேச்சின் மூலமும் பெயர், புகழ், வருமானம் உண்டாகும். அதோடு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகமாகிய நிபுணத்துவ யோகமும் உண்டாகிறது. ராகு, கேது பகவான்கள் கும்ப, சிம்ம ராசிகளில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம், மேஷ ராசிகளை அடைகிறார்கள். 
உங்களுக்கு தற்சமயம் சனி பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். பத்தாமதிபதி, பதினொன்றாமதிபதியுடன் தன ஸ்தானத்தில் இருப்பதால் தொல்பொருள் ஆராய்ச்சியில் மேன்மேலும் புதிதாகக் கண்டுபிடித்து தேசிய அளவில் புகழ், கெüரவம், பாராட்டுகள் கிடைக்கும். பிரதி வெள்ளிக்
கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT