உங்கள் கணவருக்கு மீன லக்னம் அல்ல. மேஷ லக்னம். ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்னமாகிய உயிர் ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் புதபகவானின் நட்சத்திரத்தில் (கேட்டை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
லக்னம் என்பது முதல் திரிகோணமாகும். இது முதல் கேந்திரமாகவும் ஆகிறது. லக்னாதிபதி இரண்டு வீடுகளுக்கு அதிபதியாகி எந்த வீட்டில் ஆட்சி பெற்றிருந்தாலும் நன்மையே செய்வார் என்று கூற வேண்டும். இதில் அவர் துர்ஸ்தானங்களுக்கு அதிபதியாக வந்தாலும் துர்ஸ்தான ஆதிபத்யங்களுக்கு அசுப பலம் குறைந்து விடும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் செவ்வாய்பகவான் நவாம்சத்தில் தன் நட்பு ராசியில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அதோடு அவர் சந்திரகேந்திரத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார். சந்திரமங்கள யோகமும் உண்டாகிறது. பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். பூர்வபுண்ணியாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் மறைந்தாலும் ஆட்சி பெற்றுள்ள லக்னாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. சந்திரபகவானும் சூரியபகவானும் சமசப்தம பார்வை செய்து கொள்வதால் பௌர்ணமி யோகமும் உண்டாகிறது.
பொதுவாக, சந்திரபகவானை சூரியபகவான் பார்வை செய்வதால் மனதில் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். நேராக சிந்தித்து சரியான முடிவுகளையும் எடுப்பார்கள். எதிர்காலத்தை ஓரளவு சரியாக கணித்து செயலாற்றுவார்கள். சூரியபகவான் ஆத்மகாரகராகவும் ஆவதால் ஆத்ம ஒளியும் கூடும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியன், செவ்வாய், புத பகவான்களின் மீதும் படிகிறது. சூரியபகவானின் மீது படிவதால் சிவராஜ யோகம் உண்டாகிறது. செவ்வாய்பகவானின் மீது படிவதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. புதபகவானின் மீது படிவதால் மகா புத்திசாலித்தனம் ஏற்படும். வியாபார தந்திரம், நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல், சிறப்பான பேச்சாற்றல் ஆகியவைகள் உண்டாகும்.
மேலும் எட்டாம் வீட்டை குருபகவான் பார்வை செய்வதால் வாழ்க்கையில் பெரிய அபவாதமோ, கண்ணியக்குறைவான நிகழ்ச்சிகளோ உண்டாகாது. மேலும் புனித யாத்திரைகளையும் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. குருபகவானின் ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும் படிகிறது. குருபகவானின் பார்வை கேதுபகவானின் மீது படிவதால் ஆன்மிகம், ஆலய விஷயங்களில் ஈடுபாடும், திடீர் அதிர்ஷ்ட யோகமும் உண்டாகும்.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெற்று நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். சுக்கிரபகவான் ராசியிலும் நவாம்சத்திலும் ஆட்சி உச்சம் பெற்றிருப்பது சிறப்பாகும்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுய சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். ஆறாமதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும் என்பது ஜோதிட விதி. அதோடு புதபகவானை உச்சம் பெற்ற குருபகவான் பார்வை செய்வதால் புதபகவானின் புக்தி அந்தர காலங்களில் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான கன்னி ராசியை அடைகிறார். ராகு பகவான் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானத்தில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். கேது பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தையும் பார்வை செய்வதாலும் நட்பு ஸ்தானாதிபதி நட்பு ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதாலும் சொந்தத் தொழிலில் தைரியமாக ஈடுபடலாம். மரச்செக்குத் தொழில் பத்தாமதிபதியான சனிபகவானுக்கு ஏற்றதாகவே அமைகிறது. அதனால் இந்த தொழிலில் முன்னேற்றத்தைக் காணமுடியும். இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு சனிபகவானின் தசையும் தொடங்குகிறது. மிளகாய் செவ்வாய்பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளதால் மிளகாய்ப்பொடி அரைக்கும் தொழிலையும் சேர்த்துச் செய்யலாம்.
பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் பித்ருகாரகருமாகி உச்சம் பெற்றுள்ள ஒன்பதாமதிபதியான குருபகவானின் பார்வையை பெற்றுள்ளதால் பூர்வீக சொத்தின் மூலம் வருமானம் கிடைக்கும். அதனால் பூர்வீக ஊருக்குச் சென்று விவசாயமும் செய்யலாம். தற்சமயம் நடக்கும் குருமகா தசையிலேயே நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இடம் வாங்கி வீடு கட்டும் யோகமும் உள்ளது. உங்கள் இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்க்கையும் சிறப்பாகவே அமையும். சனிமகா தசையில் அதிகமாக உழைத்து அதற்கேற்ற கூடுதல் லாபத்தைப் பெறுவார். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.