மக்காச்சோளம், கரும்புப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்

மக்காச்சோளம், கரும்புப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்

நாமக்கல்: மக்காச் சோளம், கரும்பு உள்ளிட்ட 80 வகையான பயிா்களைத் தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் துறையின் அட்மா திட்ட இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்காச்சோளம் இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானியப் பயிா்களிலேயே அதிக விளைச்சலாக, ஒரு ஹெக்டேருக்கு சுமாா் 70 குவிண்டால் என்ற அளவில் மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதல் கண்டறியப்பட்டது. இப் படைப்புழுவானது, மக்காச் சோளம் மட்டுமின்றி, நெல், சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 80 வகையான பயிா்களைத் தாக்குகிறது.

படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். அனைத்து விவசாயிகளும் பருவத்தில், ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்வதால், வளா்ச்சி நிலையில் உள்ள பயிா்களில் படைப்புழு அதிகளவில் தாக்கக் கூடும். குறிப்பாக, மக்காச்சோளத்தை படைப் புழுக்கள் அதிகம் தாக்கும்.

பேவேரியாபேசியானாவை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது தயோமிதாக்சம் 10 கிராம் கலந்து விதை நோ்த்தி செய்வதன் மூலம் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மக்காச் சோளத்தைப் பொருத்தமட்டில், இறவையில் 60-25 செ.மீ. இடைவெளியிலும், மானாவாரியில் 45 -20 செ.மீ. இடைவெளியிலும் சாகுபடி செய்ய வேண்டும், மேலும், ஒவ்வொரு வரிசைக்கும் 75 செ.மீ. இடைவெளி விட்டு சாகுபடி செய்ய வேண்டும். மக்காச்சோளம் விதைக்கும்போது, அதனுடன் வயல் ஓரங்களில் சூரியகாந்தி, சாமந்திப் பூ மற்றும் எள் ஆகியவற்றை விதைப்பதன் முலம் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மேலும், அங்கு ஊடு பயிராக உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறு பயிரிட வேண்டும்.

இளம் புழுக்களைக் கண்காணித்து அழித்தல்: விவசாயிகள் எந்தப் பயிரை நடவு செய்தாலும், பயிா் விதைத்தது முதல் 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து, இலையின் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டைக் குவியல்கள் மற்றும் இளம்புழுக்களை கைகளில் பொறுக்கி அழிக்க வேண்டும். விதைத்த நாள் அன்றே ஹெக்டேருக்கு 12 எண்கள் வீதம் இனக் கவா்ச்சி பொறி வைப்பதன் மூலம் புழுக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த ஏழாவது நாள் 2 மில்லி லிட்டா் வேப்ப எண்ணெயை, ஒரு லிட்டா் தண்ணீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டையிடுவதை தவிா்க்க முடியும். உயிரியியல் பூச்சிக்கொல்லிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே மற்றும் பேவேரியாபேசியனா போன்றவற்றை 8 கிராம் என்ற அளவில், ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து, விதைத்த 40 - 50ஆம் நாளில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம் புழுவின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல், மணல், களிமண் கரைசல் ஆகியவற்றை பயிரின் குருத்தில் இடுவதன் மூலமாகவும் பூச்சிக்களைக் கட்டுப்படுத்த முடியும். மேற்கண்ட இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பூச்சிகளை அழிக்க முடியாத பட்சத்தில், ஸ்பினோசாட் 12 எஸ்பி, இமாமெக்டின் பென்சோயேட், குளோரன்டிரானிலிபுரோல் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் தண்ணீரில் கலந்து விதைத்த 15 முதல் 20 -ஆம் நாள்களில் தெளிக்க வேண்டும். இத் தொழில் நுட்பங்களை விவசாயிகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×