அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-61: சைவ சமயம்-தத்துவங்கள்

4th Mar 2019 03:43 PM | C.P.சரவணன்

ADVERTISEMENT

 

முப்பத்தாறு தத்துவங்கள் (36 Saiva Philosophy)

சித்தாந்தம் என்ற சொல்லுக்குப் பொருள் முடிந்த முடிபு என்பர். இந்தக் கொள்கைக்குரிய இறைவன் சிவபெருமான் ஆவார். சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றன சிவ ஆகமங்கள் ஆகும். இம் மாயையை இறைவன் தன் சக்தியினால் இயக்க இதில் படிப்படியாக 36 தத்துவங்கள் தோன்றுகின்றன. 36 தத்துவங்கள் என்பன மாயையிலிருந்து தோன்றும் பொருள்கள் ஆகும். இவ்வாறு தோன்றும் பொருள்களை 3 வகையாகப் பிரிப்பர். அவை சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என்பன. சுத்த மாயையிலிருந்து ஐந்து தத்துவங்கள் தோன்றுகின்றன. அவை :

சிவம், சக்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை ஆகும். இவை ஐந்தும் இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களாகும். ஆதலால் இவை சிவதத்துவம் எனப்படுகின்றன. அடுத்த அசுத்த மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் 7 ஆகும். அவை: காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்பனவாகும். இவை வித்யா தத்துவங்கள் எனக் கூறப்பெறும். இவையனைத்தும் உயிரினுடைய நிலைகள் தோன்றுவதற்குரிய தத்துவங்கள் ஆகும். பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் 24 ஆகும். அவை: அந்தக்கரணங்கள் நான்கு, ஞானேந்திரியங்கள் ஐந்து,கன்மேந்திரியங்கள் ஐந்து,தன்மாத்திரைகள் ஐந்து, பூதங்கள் ஐந்து ஆகியனவாம். இந்த 36 தத்துவங்கள் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோன்றுகின்றன. இவை தோன்றி உலகத்தை இயங்க வைக்கின்றன.

ADVERTISEMENT

இதர தத்துவங்கள்

உயிரானது பிறப்பெடுத்து உலகத்தில் பெறுகின்ற இன்பம் உலக இன்பமாகும். பல பிறப்புகளின் இறுதியில் இறைவனின் அருளைப் பெறுகின்ற இன்பம் பேரின்பம் எனப்படும். இதனை, போகம் என்றும் மோட்சம் என்றும் குறிப்பிடுவர். துன்பத்துடன் கூடிய இன்பம் முன்னது. துன்பம் கலவாத இன்பம் பின்னது. துன்பம் கலவாத இன்பமான பேரின்பத்தைப் பெற இறைவன் அருள்வழங்க வேண்டும். இறைவன் அருள் பெறக்கூடிய சூழலைச் சத்திநிபாதம் என்று குறிப்பிடுவர். சத்திநிபாதம் என்றால் இறைவனுடைய அருள் பதிதல் என்பதாகும். இந்த நிலை அடைய வேண்டுமானால் உயிர்களிடத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகக் கருதும் நிலை ஏற்படவேண்டும்.

அதாவது இன்பத்தால் மகிழாது, துன்பத்தால் துவளாது இரண்டையும் எவ்வித உணர்வுமின்றி எல்லாம் பிறப்பின் நிலை, அனுபவித்தே ஆகவேண்டும் என நினைப்பதாகும். இதை அடைய வேண்டுமானால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முதல் மூன்றும் உயிர்கள் செய்யவேண்டிய செயல்பாடுகள். சரியை என்பது உடம்பால் இறைவனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்வது. கிரியை என்பது இறைவனுடைய வடிவங்களை, மூர்த்தங்களைப் பூசனை செய்யும் முறையாகும். யோகம் என்பது இறைவனையே நினைந்து தவமிருத்தல்.

இம்மூன்று நிகழ்வுகளையும் கடைப்பிடித்தால் இறைவனின் வடிவாகிய ஞானாசிரியரால் ஞானம் பெறலாம். ஞானம் பெறுவதால் சத்திநிபாதம் (வீடுபேறு) கிடைக்கும். நால்வகை நெறிகளில் ஐந்தெழுத்து மந்திரங்களை மெய்ப்பொருளாக உணர்ந்து உச்சரித்தல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிவாயநம என்பது அந்த ஐந்தெழுத்தாகும். சி – என்பது சிவத்தையும்,வா – என்பது சக்தியையும்,ய – என்பது உயிரையும், ந – என்பது மறைத்தலையும்,ம – என்பது மலத்தையும் குறிப்பனவாகும். இந்த ஐந்தெழுத்தை ஞானாசிரியர் வழங்க அதன் மூலம் உபதேசத்தைப் பெற்று உயிர்கள் தத்தம் தகுதிக்கு ஏற்ப உச்சரித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பதுகொள்கையாகும். இவ்வாறு உயிர்கள் பல்வேறு பிறப்பெடுத்து இறுதியில் சிவபெருமான் திருவடிகளை அடைந்து அவன் திருவருளில் திளைத்து மாறா இன்பத்தில் அமர்ந்திருப்பது வீடுபேறு எனக் கொள்ளப்படும்.அந்நிலையில் உயிர் தன் தன்மையில் கெடாது பேரின்பத்தை அனுபவிக்கும். உயிர் அழிவதில்லை..

சிவ ஆகமங்கள் 28ம் சிறப்பாகக் கொள்ளப் பெற்றுச் சித்தாந்தக் கொள்கைள் வரையறுக்கப் பெற்றன. தத்துவங்கள் 36 என்பவை, உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் இந்து மெய்ஞ்ஞானத்தின் எண்ணக்கருக்களில் ஒன்று ஆகும். பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருட்கள் தத்துவங்கள் எனப்படுகின்றன. இருபத்துநான்கு என்றும் முப்பத்தாறு என்றும் தொண்ணூற்றாறு என்றும் இந்த தத்துவங்களைப் பல வகைகளில் கூறுவதுண்டு. குறிப்பாக சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்களும் சைவநெறியில் 36 தத்துவங்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

சைவ சித்தாந்தத்தின் படி, மும்மலங்களில் ஒன்றான மாயை, பதியால் இயக்கப்படும் போது, இந்த 36 தத்துவங்களும் படிப்படியாகத் தோன்றுகின்றன. இந்த மாயாமலமானது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்று மூன்றாகப் பிரிந்து, அவை ஒவ்வொன்றிலுமிருந்து, முறையே ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என, மொத்தம் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றுகின்றன. சுத்தமாயையிலிருந்து தோன்றும் ஐந்தையும், "சிவதத்துவம்" என்றும், அசுத்தமாயையிலிருந்து தோன்றும் ஏழையும் "வித்தியாதத்துவம்" என்றும், பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் இருபத்து நான்கையும் "ஆன்ம தத்துவம்" என்றும் வகைப்படுத்துவர்.

சிவ தத்துவம் ஐந்து

• நாதம் - தூய அறிவாலான பரம்பொருளின் முழுமையான நனவிலி நிலை. இதுவே பரசிவ வடிவம் ஆகும்.
• விந்து - சக்தி, இயங்கிக் கொண்டிருக்கும் கிரியா சக்தி. அந்த இயக்கத்தாலேயே, சிவத்துடன் இணைந்து ஏனைய தத்துவங்களை உருவாக்க ஆரம்பிக்கும் இறைவனின் திருவருட்சக்தியின் நிலை ஆகும்.
• சாதாக்கியம் - சதாசிவன். சிவ-சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படும். ஏனைய தத்துவங்களின் தோற்றம் தூண்டப்படும்.
• ஈசுரம் - மறைத்தற்  சக்தியான மகேசுரன். செயலற்ற நிலையில் இருக்கும் ஆன்மாக்களை மறைத்தலுக்குள்ளாக்கும் செயல்பாடு ஆரம்பமாக, அதனூடே மறைவாக இறையறிவும் இயங்கிக் கொண்டிருக்கும்.
• சுத்த வித்தை - படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு அடிப்படையான இறைதத்துவம். இதன்போது, இறையறிவு முழுமை்யாகச் செயற்பட, செயல் (கிரியாசக்தி) பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். உயிர்கள் மீது கருணைகொண்டு, செயலற்று இருக்கும் "இறை" எனும் கருதும், மெல்ல மெல்லக் கீழிறங்கி வருவதை இப்படிநிலை காட்டுகிறது. ஈஸ்வர தத்துவமானது, ஈடேறாத ஆன்மாக்களை சுத்த வித்தையில் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்று கொண்டிருக்கச் செய்யும். பக்குவப்பட்ட ஆன்மாக்கள், மேலே சாதாக்கிய தத்துவத்தை அடைந்து மலங்களிலிருந்து விடுதலை பெறும். பின், விந்து தத்துவம் ஆன்மாவை திருவருட்சக்தியில் நனைத்து, முக்திக்கு அழைத்துச் செல்லும். இறுதிப் பரிபூரண நிலையான சிவதத்துவமாம் நாதத்தில், ஆன்மா மோட்சம் பெறும். 

வித்தியா தத்துவம் ஏழு

இவை அசுத்த மாயையிலிருந்து தோன்றுபவை. செயலற்றுறங்கும் ஆன்மாக்களின் செயற்பாட்டுக்கான கருவிகளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன.
 
•    காலம்
•    நியதி
•    கலை
•    வித்தை
•    இராகம்
•    மாயம்
எனும் கஞ்சுகங்கள் ஆறுடன்,
•    ஆன்மா (புருடன்)
ஒன்றும் சேர்ந்து, வித்தியா தத்துவங்கள் ஏழு ஆகின்றன.

இந்த வித்தியா தத்துவங்கள் தொழிற்படுவதற்கு, சிவ தத்துவங்கள் அவசியமாகும். காலம், நியதி, கலை எனும் மூன்றும் விந்தினாலும், வித்தை, சுத்த வித்தையாலும், இராகம் ஈசுரனாலும், மாயம் நாதத்தினாலும், புருடன் சதாசிவத்தினாலும் இவ்வாறு இயக்கப்படுகின்றன.

ஆன்ம தத்துவம் இருபத்துநான்கு

இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களுமே, உலகத்தினதும் உயிர்களினதும் அடிப்படை ஆகும். சிவதத்துவத்தால், வித்தியா தத்துவம் தூண்டப்பட்டு, ஆன்மா இயங்குவதற்கான கருவிகள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது. அவ்வாறு இயக்கப்படுவற்கான பௌதிக உடலையும் அதுசார்ந்த பொறிகளும் ஆன்மாவிற்கு அவசியமாகின்றன. பஞ்சபூதங்களும், ஐம்பொறிகளும் இன்னும் ஒன்பது கருவிகளும், வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆன்ம தத்துவத்தில் அடக்கப்பட்டிருக்கின்றன.

மாபூதங்கள் ஐந்து
•    நிலம்
•    காற்று
•    நீர்
•    தீ
•    ஆகாயம்

ஆகிய ஐம்பருக்களும் ஆகும். மனித உடல் ஐம்பருக்களால் ஆனது என்பது சைவர்தம் நம்பிக்கை.

தன்மாத்திரைகள் ஐந்து
•    சுவை
•    ஒளி
•    ஊறு (தொடுகை)
•    ஓசை
•    நாற்றம் (மணம்)

என்னும் ஐந்தின் வகைகளும் தன்மாத்திரை ஐந்து ஆகும்.

கன்மேந்திரியம் ஐந்து
•    பற்றுதல் (பாணி)
•    பதித்தல் (பாதம்)
•    படைத்தல் (உபத்தம்)
•    பலுக்கல் (வாக்கு)
•    கழித்தல் (பாயு)

எனும் ஐந்தும் ஆகும். கன்மம் என்றால் செயல். மனித உடல் செய்யும் ஐந்து செயல்களையும் கன்மேந்திரியமாக வகைப்படுத்தப்படுகின்றன. பற்றும் செயலைக் கையும், (கால்) பதித்தலை பாதங்களும், ஆக்கத்திறனுடன் படைத்தலை மூளையும், பலுக்கும் (பேசும்) செயலை நாக்கும், கழிக்கும் தொழிலை கழித்தல் அங்கங்களும் செய்கின்றன. இவை ஐந்தும் ஆன்மா, உடலில் இயங்க அவசியமாகும்.

ஞானேந்திரியம் ஐந்து
•    மெய்
•    வாய்
•    கண்
•    மூக்கு
•    செவி

எனும் ஐம்பொறிகளும் ஞானேந்திரியம் ஆகும். இவ்வைந்தும் ஒன்றோடொன்று இணைந்து செயல்புரிவதாலேயே, உயிர்கள் அறிவைப் பகுத்தறிந்து மெல்ல மெல்ல மேனிலையை அடைகின்றன.

அந்தக்கரணங்கள் நான்கு
•    மனம்
•    புத்தி
•    அகங்காரம்
•    சித்தம்

எனும் நான்கும். சித்தத்தைப் "பிரகிருதி" என்றும் அழைப்பதுண்டு. எனவே தான், சித்தத்தை முதலாகக் கொண்ட இந்த இருபத்து ஆன்ம தத்துவங்களும் "பிரகிருதி மாயா தத்துவங்கள்" எனப்படுகின்றன. இப்பிரகிருதியுடன் புருடனான ஆன்மா (வித்தியா தத்துவங்களுள் ஒன்று) இணையும் போதே, ஏனைய தத்துவங்களுடன் இணைந்து, இப்பௌதிக உலகில் செயலாற்ற ஆரம்பிக்கின்றது  என்பது சைவ சித்தாந்தத்தின் முடிபாகும்.

இறைவன் ஒருவன் என்றாலும், சிவம், சக்தி என்ற இரு தன்மைப்பட்ட நிலைகளில் நின்று முன்குறித்த ஐந்து தொழில்களைச் செய்கின்றான். இதற்கு உவமை சூரியனும், சூரியஒளியும் ஆகும். இந்தச் சக்தியின் மூலமாக இறைவன் அருளுகின்ற போது அருளவேண்டிய உயிர்களுக்கு ஏற்ப அருளுகின்றான்.

உயிர் பற்றிய கொள்கைகள்

கடவுளைப் போல உயிரும் அநாதியானது. அதாவது அழிவில்லாதது என்பது பொருள். கடவுள் இல்லையென்று மறுப்பவர்கள் உயிர் இல்லை என்று உறுதியாக மறுப்பதில்லை. எனவே உயிர் உள்பொருளாகும். இதனைப் பசு என்ற சொல்லால்குறிப்பர். பசு என்பது கட்டுப்பட்டிருப்பது என்ற பொருளைத்தரும். வீட்டுத் தொழுவத்தில் பசு எவ்வாறு கயிற்றால் கட்டப்படுகிறதோ அதுபோலப் பாசம் என்ற மலங்களால் கட்டப்படுவதால் உயிர், பசு என அழைக்கப்படுகிறது. உயிரானது தானே அறிந்தும் அறிவித்தும் நிற்பதுமாகிய கடவுளும் அன்று. அறிவித்தாலும் அறிய மாட்டாத பாசமும் அன்று. அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருளாகும்.அறிவே வடிவாகிய கடவுள் சித்துப் பொருள் என்றும், அறிவே இல்லாத சடப் பொருள்களாகிய பாசங்கள் அசித்து என்றும் கூறப்படும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகிய உயிர் சதசித்து என்று கூறப்படும்.

உயிர்கள் எண்ணற்றவையாகும். அவை யாராலும் படைக்கப்பட்டதும் இல்லை. அவற்றிற்குத் தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை. தானே உணர்கின்ற ஆற்றல் இல்லாதது. அறிவிக்க அறியும் அறிவுடையதால் சிற்றறிவு என்றும் கூறப்படும்.இவ்வுயிரைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’என்று குறிப்பிடுவதும் உண்டு. உயிரின் நிலைகளை அவத்தைகள் என்று குறிப்பிடுவர். அவத்தை என்ற சொல்லுக்கு நிலை என்பது பொருள். இந்த நிலைகளைக் காரண அவத்தை என்றும், காரிய அவத்தை என்றும் இருவகையாகக் கூறுவர். காரண அவத்தை மூன்று வகைப்படும். அவை கீழ்வருமாறு கூறப்படுகின்றன.

(1) கேவல அவத்தை:

ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவல அவத்தை எனப்படும்.

(2) சகல அவத்தை:

மாயையினால் உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தையாகும்.

(3) சுத்த அவத்தை:

பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை சுத்த அவத்தை எனப்படும்.

இம்மூன்று நிலைகளில் உயிரானது நிற்பது கூறப்படுவதால் காரண அவத்தையாயிற்று. அடுத்து, காரிய அவத்தை என்பது உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகும். செயல்படுவது கேவலம் முதலிய மூன்றிலும் நிகழும். அவ்வாறு செயல்படும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் ஐந்தாகச் செயல்படும். எனவே கேவலம் முதலிய மூன்றிலும் ஐந்து செயல்நிலைகள் அமைந்து பதினைந்து காரிய அவத்தைகள் ஆகின்றன. பொதுவான ஐந்து காரிய அவத்தைகள் கீழ்வருமாறு :

1)நனவு: இது வடமொழியில் சாக்கிரம் என்ற சொல்லப்படும். இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.

2)கனவு: சொப்பனம் என்று கூறப்படும். இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.

3)உறக்கம்: சுழுத்தி என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.

4)பேருறக்கம்: இது துரியம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.

5)உயிர்ப்படக்கம்: துரியாதீதம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.

கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை என்பர். சுத்த நிலையில் செயல்படும் பொழுது மலோலவத்தை என்பர். சகலத்தில் செயல்படும் பொழுது மத்தியாலவத்தை என்பர். இவ்வாறு கடவுளைப் போல அநாதியாய்த் தோன்றி என்றும் உள்பொருளாகி எண்ணற்றவைகளாய் விளங்கி, சார்ந்ததன் வண்ணமாகி, உணர்த்த உணரும் தன்மை உடையதாய், மூன்று நிலைகளில் நின்று, ஐந்துவகை நிலையில் செயல்படுவது உயிராகும்.

அளவில்லாத உயிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். உயிரின் அடிப்படைநிலை பாசங்களோடு விளங்குவதாகும். அப்பாசங்கள் மூன்றாகும். அவை ஆணவம், கன்மம், மாயை என்பன. இம்மூன்று பாசங்களோடு சேர்ந்திருப்பதைக் கொண்டு உயிர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஆணவத்தோடு மட்டும் நிற்கும் பொழுது விஞ்ஞானகலர் என்று அழைக்கப்படும். ஆணவம், கன்மம் என்ற இரண்டோடு நிற்கும்பொழுது பிரளயாகரர் என்று அழைக்கப்படும். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களோடு நிற்கும் பொழுது சகலர் என்று அழைக்கப்படும். இவ்வாறு மூன்று வகைப்பட்ட உயிர்கள் இன்ப, துன்ப, பிறப்பு, இறப்புகளுக்கு ஆட்பட்டு உழல்வது செயற்கைநிலை. இறைவனின் அருளுக்கு ஆட்பட்டு மாறாத பேரின்பத்தைப் பெறுதல் இயற்கைநிலை. இந்த உயிர் தன் வினைக்கு ஏற்பப் பல்வகைப் பிறப்புகளுக்கு ஆளாகிறது. இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. இறுதியில் இறைவனின் திருவருளுக்கு ஆளாகிறது.

பாசம்

சைவசித்தாந்த முப்பொருள்களில் பாசம் என்பது மூன்றாவது பொருளாகும். இதனைத் தளை என்றும் கூறுவர். பாசத்தளை என்று சேர்த்துச் சொல்வதும் உண்டு. பாசம் என்பது கயிற்றைக் குறிக்கும். தளை என்பது கட்டுவதைக் குறிக்கும். எனவே கட்டப்படுகின்ற கயிறு என்ற நிலையில் பாசங்கள் குறிக்கப்படுகின்றன. இப்பாசங்கள் மூன்று வகைப்படும். அவை ஆணவம், கன்மம், மாயை எனப்படும். ஆணவம் என்பது முதலாவது. செம்பு என்ற உலோகப் பொருள் என்றைக்கு உண்டோ அன்றே அதற்குக் களிம்பு இருப்பது போல, உயிர் என்று உண்டோ அன்றே அதற்கு ஆணவம் உண்டு. எனவே இதனை மூலமலம் என்று குறிப்பிடுவர். ஆணவம் என்ற சொல் சைவசித்தாந்த அடிப்படையில் செருக்கு என்ற பொருளைத் தராது. உயிரை அறியாமைப்படுத்தும் நிலையைக் குறிக்கும். சிறிது விளக்கமாகச் சொன்னால் கண்ணை மறைக்கின்ற இருள்போல உயிர்கள் எதிரில் உள்ள பொருள்களை அறிய முடியாத நிலையில் அவ்வுயிர்களுக்கு அறியாமையைத் தருவது ஆணவமாகும்.

இது ஆணவத்தின் முதல் நிலையாகும். அதாவது உயிர்களின் அறிவு,இச்சை, செயல் என்ற மூன்றனையும் நிகழவிடாது தடுத்து உயிர் என்ற ஒன்றே உண்டு என்பதே தோன்றாதவாறு மறைத்துத் தானேயாய் நிற்பது ஆணவமாகும். இதுதான் உயிர்களின் கேவலநிலை என்றும் ஆணவத்தின் முதல்நிலை என்றும் கூறப்படும். பின், கன்மம், மாயை இவற்றோடு சேர்ந்து அறிவைத் தடுக்கும்பொழுது இரண்டாவது நிலையை அடைகிறது. அதாவது மங்கலான ஒளியினில் கண்களானது பொருள்களைத் தவறாகக் காண்பது போன்றதாகும். இது உயிரின் சகலநிலை என்றும், ஆணவத்தின் இரண்டாவது நிலை என்றும் கூறப்படும். இவ்வாறு ஆணவ நிலை இரண்டு வகைப்படும்.

ஆணவமலம் என்பது பிறபொருளைக் காட்டாது மறைப்பதோடு தன்னையும் காட்டுவதில்லை. நெல்லுக்கு உமிபோல, செம்பினில் களிம்புபோல, உயிர்களைத் தோற்றத்தின் காலத்திலேயே பற்றிவிடுகின்ற ஆணவம் இறுதிவரை உயிர்களைப்பற்றி நின்று இறுதியில் உயிர்கள் இறைவன் அருளைப் பெறுகின்ற பொழுது அடங்கி நிற்குமே தவிர அழிவதில்லை. ஆணவத்தின் மறைப்பால் தன்னிடத்தில் நிறைந்து நின்ற கடவுள் அருளை அறியாத உயிர், ஆணவம் அடங்கி அறிவு மறைத்தலை ஒழித்தவுடன் பேரானந்தத்தைப் பெறுகிறது. இரண்டாவது பாசம், கன்மம் ஆகும். உயிரில் ஆதியாய் நிற்பது ஆணவமலம். மற்ற கன்மம், மாயை என்பவை இடையில் வந்து சேருவன ஆகும். எனவே இதனை ஆகந்துக மலம் என்பர். இவ்விரண்டு மலங்களும் ஆணவ மலம் அடங்கும் காலத்து நீங்கிவிடும். கன்மம் என்பது வினை என்றும் ஊழ் என்றும் சொல்லப்படும்.

வினை

உயிர்கள் வினையை அனுபவித்தே ஆகவேண்டும். இந்தக் கன்மமாகிய வினைதான் பிறப்புக்கும், அதன்கண் உளவாகும் இன்ப துன்ப வினைக்கும் காரணமாகும். எனவே உயிர்களின் அறிவை மறைத்தல் ஆணவமலம் என்று கூறுவதுபோல் உயிர்களின் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைப்பது கன்மம் எனக் குறிப்பிடலாம். வினையானது சடப்பொருள், அறிவற்றது. எனவே செய்தவனைத் தேடி அடையாது. ஆகவே இறைவன்தான் வினைகளை உயிர்களிடத்தில் அடைவித்து இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கின்றான். ஒரு பிறப்பில் செய்த நல்வினை, தீவினை அடுத்தடுத்த பிறப்பில் நன்மை தீமைகளைச் செய்வதால்தான் வினையை ஊழ்வினை என்கின்றனர். நல்வினை, தீவினை இரண்டுமே பிறப்பைத் தரும் என்பது உணரத்தக்கது.

வினைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

முற்பிறப்புகளில் உயிரால் செய்து ஈட்டப் பெற்ற நல்வினை, தீவினை இரண்டும்சஞ்சிதம் (பழவினை) எனப்படும். எடுத்த இப்பிறவியில் அனுபவிக்கும் வினை பிராரத்தம் (நுகர்வினை) எனப்படும். இப்பிறவியில் செய்கின்ற அறம், பாவங்களால் மேலும் ஏற்படுகின்ற வினை ஆகாமியம் (ஏதுவினை) எனப்படும். இவ்வாறு கன்ம வினைகள் செய்வதாகிய உயிர், செய்யப்படுவதாகிய வினை, வினையின் பயன், அந்தப் பயனைக் கொண்டு உயிர்களிடத்தில் சேர்ப்பவனாகிய கடவுள் என்ற நான்கின் அடிப்படையில் வினைக்கோட்பாடு சித்தாந்தத்தில் கூறப் பெறுகின்றன எனலாம்.

மூன்றாவது மலமாகிய மாயையும் உயிர்களிடத்தில் இடையில் வந்து இணைவதாகும். இம்மாயை உள்பொருள் ஆகும்.
நித்தப்பொருள்.
கண்ணுக்குப் புலன் ஆகாத அருவப் பொருள்.
உலகத்திற்கு வித்தாக அமைவது.
உயிருக்கு உடல், கருவி, நுகர்ச்சிப்பொருள் ஆகியவற்றைத் தருவது. ஆணவத்தால் மறைக்கப்பெற்ற  உயிரைச் சிறிது விளக்கம் செய்வது. ஆணவத்தின் கொடிய செயலை நீக்குவதற்கு இறைவனால் பயன்படுத்தக் கூடியது.

மூன்று விதமான ஆன்மாக்கள்

ஆன்மாக்களுக்கு, உண்மை தெரியாத ஆன்மாக்கள், உண்மையும் பொய்யும் தெரிந்த ஆன்மாக்கள், உண்மை மட்டும் தெரிந்த ஆன்மாக்கள் என மூன்று குணங்கள் உள்ள ஆன்மாக்கள் உள்ளன. அந்த ஆன்மா ஆகாயத்தில் உள்ளன. அந்த ஆன்மா ஆகாயத்தில் மூன்று பிரிவுகளாக உள்ளன .அதற்கு சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்பதாகும் .

அபக்குவம் உள்ள ஆன்மாக்கள் சகலர் என்பதாகும். அந்த ஆன்மாக்கள் ஜீவர்கள் எனப்படும் உயிர்பெற்று வாழம் ஜீவ ஆன்மாக்கள் என்பதாகும். அந்த ஆன்மாவில் இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயையும், செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் இம்முன்றும் உள்ளவைகளாகும் .

பக்குவாபக்குவம் உள்ள ஆன்மாக்கள் பிரளயாகலர் என்பதாகும். இந்த ஆன்மாக்களில் இயற்கையாகிய ஆணவம் இயற்கையில் செயற்கையாகிய மாயை இவ்விரண்டும் உள்ள உயிர்பெற்று வாழும் ஜீவன்களாகும்.

பக்குவம் உள்ள ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் என்பதாகும். இந்த ஆன்மாவில் இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளதாகும். இந்த ஆன்மா உயிர் பெறாமல் வாழும் கலாதீதர்கள். இவை எங்கு வேண்டுமானாலும் உயிர், உடல் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் சென்று வாழும் தகுதிப் பெற்றதாகும்.

 

மாயை

மாயைக்கு நான்கு பிள்ளைகள். முதல் பிள்ளை ’மனம்’ என்னும் பெயராகும். இரண்டாவது பிள்ளை ’புத்தி’ என்னும் பெயராகும். மூன்றாவது பிள்ளை ’சித்தம்’ என்னும் பெயராகும். நான்காவது பிள்ளை ’அகங்காரம்’ என்னும் பெயராகும். இந்த நான்கு பிள்ளைகளும் எனக்கு கொடுக்கும் தொல்லைகள் அளவில் அடங்காது.

சகலர்,பிரளயாகலர்,விஞ்ஞானகலர் வாழ்க்கை முறைகள்

சகலர் என்ப்படுவது ’ஜீவர்கள்’. தாவரம் முதல் மனிதர் வரை ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களுடன், ஆன்மா, உயிர், உடம்பு பெற்று இவ்வுலகில் வாழ்ந்து இறுதியில் மனித தேகம் கிடைத்து, வாழ்ந்து இன்பம், துன்பம், சலிப்பு, வெறுப்பு அடைந்து மெய், அறிவு என்னும், ஆன்ம அறிவு பெற்று, அருளை அடைந்து, சுத்த தேகம் பெற்று, பின் பிரணவ தேகம் பெற்று, பின்பு ஞான தேகம் பெற்று இறை உண்மையை அறிந்து, பேரின்ப நிலையை அடைவதாகும்.

பிரளயாகலர் எனப்படுவது ’கல்ப தேகிகள்’. இவர்கள் ஆன்மாவில் ஆணவம் மாயை என்னும் இரண்டு மலங்கள் உடையதால், இயற்கையாகிய ஆணவத்துடன் செயற்கையாகிய மாயை என்னும் உடம்புடன் வாழும் தகுதியைப் பெற்று வாழ்வதாகும். கன்மம் என்னும் செயல்கள் (பதிவுகள்) இவைகளுக்கு கிடையாது. இந்த ஆன்மாக்கள் மாயை என்னும் உடம்புடன் வாழ்ந்து,இன்பம், துன்பம், சலிப்பு, வெறுப்பு அடைந்து, மெய் அறிவு என்னும் ஆன்ம அறிவு பெற்று, இறைவன் உண்மையை அறிந்து, அருளைப் பெற்றுப் பிரணவ தேகம் பெற்று, பின் ஞான தேகம் பெற்று பேரின்ப நிலையை அடைவதாகும்.

விஞ்ஞானகலர் எனப்படுவது ’கலாதீதர்கள்’. இவர்கள் ஆன்மாவில் இயற்கையாகிய ஆணவம் மட்டும் உள்ளவர்கள். இந்த ஆன்மாவிற்கு மாயையின் உடம்பு தேவை இல்லை, மாயையின் உதவி மட்டும் தேவை. இந்த ஆன்மா உடம்பு இல்லாமல் மாயையின் உதவியுடன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்கும் சென்று, எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அதுவும் வாழ்க்கையில் இன்பம், துன்பம், சலிப்பு, வெறுப்பு அடைந்து, மெய் அறிவு என்னும் ஆன்ம அறிவு பெற்று இறை உண்மையை அறிந்து, அருளைப் பெற்று ஞானதேகம் என்னும் ‘ஒளி தேகம்’.பெற்று பேரின்ப நிலையை அடைவதாகும்.

மும்மலங்கள்

ஆன்மா என்னும் ஒளியை, ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்கள் மறைத்துக் கொண்டு உள்ளதால், உண்மையான கடவுளை அறிய முடியவில்லை என்கிறார்கள், அதை அழித்தால் தான் கடவுளை அறிய முடியும் ஆணவம், கன்மம், மாயை இவையே மும்மலங்கள் ஆகும்.

ஆணவம்

மலங்களுள் முதன்மையானது ஆணவ மலம். இதனால் இது மூல மலம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. தமிழ் நூல்களில் இது ''இருள்'' என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. ஒன்று, உயிரின் அறிவை முற்றாக மறைத்தல், இரண்டாவது, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் இதுவே என்கிறது சைவசித்தாந்தம்.

கன்மம்

கன்மம் என்பது அவரவர் செய்யும் வினைகளின் பயன் ஆகும். இதனை ''வினை'' என்றும் அழைப்பர். செய்யும் வினை நல்வினை ஆனாலும், தீவினை ஆனாலும் அவற்றுக்குரிய பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் அடைந்தே ஆகவேண்டியுள்ளது. இதனால் இப்பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. உயிர்கள் மீண்டும் பிறக்கும்போது, அவைகளுக்குரிய பலன்களை இறைவன் அவற்றிடம் சேர்க்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். வினைகளிலும் மூன்று வகை உண்டு. இவை:
பழவினை (சஞ்சிதம்)
நுகர்வினை (பிராரத்தம்)
ஏறுவினை (ஆகாமியம்)

என்பனவாம். இவற்றுள், ''பழவினை'' என்பது முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகு ''நுகர்வினை'', அந்தப் பிறவியிலேயே சேர்த்துக்கொண்ட வினைப் பயன்கள். ''ஏறுவினை'' என்பது வினைப்பயனை அனுபவிக்கும்போது உருவாகும் வினைப்பயன்களாகும்.

மாயை

மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது. இம்மாயை என்று சொல்லப்படுகின்றது. சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் சுவாலையை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.

மாயை மிக நுண்ணியது என்றும், அது இறைவனடியிலேயே இருக்கிறது என்றும், ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது என விளக்குகிறது சைவசித்தாந்தம். ஒருபொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பன அவை. உதாரணமாக மண்குடம் என்ற ஒரு பொருள் தோன்ற மண் முதற்காரணம், குயவன் நிமித்தகாரணம், அவன் உபயோகிக்கும் கருவிகள் துணைக்காரணம். அதுபோலத்தான் உலகம் தோன்ற மாயை முதற்காரணம், இறைவன் நிமித்தகாரணம், அவனுடைய சக்தி துணைக் காரணம். ஒரு பெரிய ஆலமரத்தின் உற்பத்தி ஒரு சிறிய விதையில் அடங்கியிருப்பது போல இவ்வுலகத்து அம்சங்கள் யாவும் சூட்சுமப் பொருளாகிய மாயையுள் அடங்கிக் கிடக்கின்றன.

சிவநடனங்கள் (Dances of Siva)
பிரபஞ்ச நடனம்/நடராஜ தத்துவம் (Cosmic Dance)

நடராஜரின் பிரபஞ்ச நடனம் இயக்கம், இயக்கமின்மை என்ற இரு தெய்வீக சக்திகள் கலந்து ஆடுவதைக் குறிக்கும் குறியீடாகும். நடராஜர் ஒளிவட்டத்துக்குள் ஆடுகிறார். இந்த ஒளிவட்டம் படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய நெருப்பைக் குறிக்கும். இது பிரபஞ்சத்தையும் குறிக்கும். நடராஜர் மேல் வலக்கரத்தில் டமருகத்தை (உடுக்கை) ஏந்தியிருக்கிறார். டமருகம் ஓசையின் குறியீடு. இது ஓசையில் இருந்து பிரபஞ்சம் தோன்றியது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. இது கால ஓட்டத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. நடராஜரின் மேல் இடக்கரம் நெருப்பை ஏந்தியிருக்கிறது. இது அழிவின் குறியீடு. இரண்டாவது வலக்கரம் அபய முத்திரையைக் காட்டுகிறது. இது தர்மத்தைப் பின்பற்றுகிறவர்களை தீமையில் இருந்தும், அஞ்ஞானத்தில் இருந்தும் இறைவன் காப்பாற்றுவான் என்பதைக் குறிக்கிறது. இரண்டாம் இடக்கரம் தூக்கிய காலைச் சுட்டுகிறது. இது மோட்சத்தைக் குறிக்கிறது. மேலும், இக்கரம் யானையின் தும்பிக்கையைப் போல் அமைந்திருக்கிறது. இது காட்டில் யானை வழிநடத்திச் செல்வது போல் இறைவன் அறியாமைக் காட்டில் வழிநடத்திச் செல்வதை உணர்த்துகிறது.

நடராஜர் முயலகன் என்ற குள்ளனை மிதித்துக் கொண்டிருக்கிறார். முயலகன் அறியாமையின் குறீயீடு. இது இறைவன் அறியாமையை வெற்றி கொண்டதைக் குறிக்கும். முயலகனைத் தீமையின் குறியீடாகவும் கொள்ளலாம். நடராஜர் உடலைச் சுற்றியிருக்கும் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. நடராஜரின் அவிழ்ந்து நாலா பக்கமும் ஆடும் சடை பால்வீதியை, நாள்களைக் கோள்களை அடித்துச் சிதற வைப்பதைக் குறிக்கும். ஊழிக் காலத்தில் இவையெல்லாம் அழிக்கப்படும் என்பது பொருள்.நடராஜரின் நடனம் இரு வகைப்படும். ஒன்று, ஆனந்தத் தாண்டவம். இது, படைப்புச் செயல். மற் றொன்று ருத்ர தாண்டவம். இது, அழிவுச் செயல். நடராஜ நடனம் இறைவனின் ஐம்பெருஞ் செயல்களை (பஞ்ச கிரியா) குறிக்கிறது. அவை 1.ஆக்கல் 2.காத்தல் 3.அழித்தல், 4.மறைத்தல் 5.அருளல். இந்நடனம் காலச் சுழற்சியையும் குறிக்கிறது. பிரபஞ்ச உருவாக்கத்துக்குக் காரணமான ஹிக்ஸ் போஸானே, அதன் அழிவுக்கும் காரணமாக இருக்கும் என்று பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார். இதை மெய்ஞ்ஞானம் என்றோ சொல்லிவிட்டது.

சிதம்பரத்தில் நடராஜர் சிலை அமைக்கப் பட்டிருப்பதிலும் பொருள் உண்டு. ‘சித்’ என்றால் மனம். அம்பரம் என்றால் ஆகாயம். இறைவன் மனம் என்ற ஆகாயத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான் என்று பொருள். யாருடைய மனம் ஆகாயம் போல் விரிந்து பரந்திருக்கிறதோ, அங்கே இறைவனுடைய நடனம் நிகழும். இறைவனுடைய நடனம் ஒரே நேரத்தில் மனத்திலும் நடக்கிறது, ஆகாயத்திலும் நடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். நடராஜர் சிற்றம்பலத்தில் ஆடுகிறார், பேரம்பலத்திலும் ஆடுகிறார் என்று சொல்லப்படுகிறது. மனம்தான் சிற்றம்பலம். ஆகாயம்தான் பேரம்பலம்.
.
நடராஜர் நடனத்தில் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், கலை மூன்றும் அற்புதமாக, அழகாகச் சங்கமம் ஆகியிருக்கிறது. இந்தச் சிலையை ஒரு சாதாரணச் சிற்பி உரு வாக்கியிருக்க முடியாது. மெய்ஞ்ஞானத்திலும், கலையிலும், குறியீட்டிலும் வல்லவரான யாரோ ஒரு ஞானிதான் இதை உருவாக்கியிருக்க வேண்டும். சிவபெருமான் சுடுகாட்டில் ஆடுவதாகக் கூறப்படுகிறது. அவர் சாம்பல் மீது ஆடுகிறார் என்பதே இங்கே குறிக்கப்படும் பொருள். ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பிறகு, எது எஞ்சுகிறதோ அதைக் குறிப்பது சாம்பல். படைப்புக்குக் காரணமாக, ஆதிமூலமாக இருந்த பரமாணுவே பிரபஞ்சம் அழிந்த பிறகும் எஞ்சியிருக்கும். அதில், இறைவன் இயங்கிக் கொண்டிருப்பான் என்பதையே சாம்பல் குறிப்பிடுகிறது. இதே கருத்தை வைணவமும் சொல்கிறது.

பிரளயத்தில் எல்லாம் அழிந்த பின் எது எஞ்சுகிறதோ, அதில் இறைவன் உறங்கிக் கொண்டிருப்பான் என்பது பொருள்.இங்கே ‘உறங்கிக் கொண்டிருப் பான்’ என்றால் மனிதர் மாதிரி உறங்கிக் கொண்டிருப்பான் என்று பொருள் அல்ல.இதை ‘அறிதுயில்’ என்று வைணவம் கூறுகிறது. அதாவது, இறைவன் எல்லாம் அறிந்தபடியே உறங்குகிறான் என்று பொருள். பிரளயத்தில் எல்லாம் அழிந்து விடும். எனவே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற வேலைகள் இல்லாத தால் இறைவன் இயங்காமல் இருக்கிறான் என்பதையே உறக்கம் குறிப்பிடுகிறது.

அணுவுக்குள் எலெக்ட்ரான் இடை விடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது. நியூட்ரான் அசைவற்று அமைதியாக இருக்கிறது. நடராஜரை எலெக்ட்ரானின் குறியீடாகவும், விஷ்ணுவை நீயூட்ரானின் குறியீடாகவும் கொள்ளலாம். பிரபஞ்சத்தை உருவாக்கியது ஹிக்ஸ் போஸான் பரமாணு என்று விஞ்ஞானம் கூறுகிறது. அந்தப் பரமாணுவையே உருவாக்கியது பரம்பொருள். அதாவது, இறைவன் என்று மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இங்கு திருமுகம் என்பது இறைவனுடைய மூலச் சத்தைக் (தாத்) குறிக்கும். சைவமும், வைணவமும் கூறும் அதே கருத்தையே இஸ்லாமும் கூறுகிறது. இதில் வியப்பேதும் இல்லை. உண்மை ஒன்றே! அதை வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு குறியீட்டு மொழியில் சொல்கின்றன.

தாண்டவ நடனம்
இது சிவனுடை தாமசிக மூர்த்தம் என்னும் வைரவர் அல்லது வீரபத்திரர் ஆரும் நடனம். 

நாதாந்த நடனம்
தில்லையில் ஆடிய நாதந்த நடனமே தென்னிந்திய வெண்கலச் சிலைகளாயமைந்தது. இவற்றில் பலவகை அமைப்புகளுண்டு. ஆனால், அவற்றின் மூலாதாரமான கருத்து ஒன்றே. சிறிய விவரங்களில் மாத்திரம் வித்தியாசமுண்டு. 

திருநடனம்
திருநடனம் சிவபெருமானின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் போன்றவற்றைக் குறிக்கும். சிதம்பர மும்மணிக்கோவையிலே இத்திருநடனம் விளக்கப்பட்டுள்ளது. திருமூலரும் திருமந்திரத்திலே திருக்கூத்துத் தரிசனம் என்னும் அதிகாரத்தில் ஐந்தொழில் தத்துவத்தை விளக்குகிறார்.

ஊன நடனம்
ஐந்தொழிலால்தான் உயிர்கள் பிறந்தும், வாழ்ந்தும், இறந்தும் பலகோடி பிறவிகள் எடுக்கின்றன. எடுப்பதால் பிறவி தோறும்  சிறிது  சிறிதாக வளர்ச்சியடைகின்றன.  வளர்ச்சி  அடைய  அடைய  ஆசாபாசங்கள்  சிறிது சிறிதாக  அகல்கின்றன.  ஆசாபாசம்  அகலவே முத்திப்பேற்றை  அடையத் தகுதி  பெறுகின்றன. ஆசாபாசங்களில்  உழன்று  நிற்கும்  நிலையில் ஆன்மாக்கள்  பெத்த  நிலையில்  உள்ளன.  அஃதாவது  கட்டு  நிலையில் உள்ளன.   இவ்வான்மாக்களைப்  பக்குவப்படுத்தும்  நடனத்தை  ஊன நடனம் என்பர்.

ஞான நடனம்
பிறவியில் அருவருப்புற்று இனிப் பிறவி வேண்டாம் என்ற மனோநிலை எய்திய ஆன்மாக்கள் முத்தான்மாக்கள் எனப் பெறுவர். அவர்களை ஈடேற்றம் செய்வதற்குப் புரியும் நடனம் "ஞான நடனம்" எனப்பெறும்.முன்சொல்லிய நடராஜப் பெருமானின் வலது மேற்கரத்தில் உள்ள உடுக்கை ஒலி, முன்பு பெத்த காலத்தில் உலகைத் தோற்றுவித்தது. அதே ஒலி இப்பொழுது முத்தான்மாக்களின் மாயையை உதறுகிறது.இடது மேல் கரத்தில் உள்ள அக்கினி வல்வினையைச் சுட்டு அழிக்கின்றது. முன்சொன்ன அதே வலதுபாதம் முயலகனாகிய ஆணவத்தை அமுக்குகிறது. முன்சொன்ன அதே இடதுபாதம் ஆகிய குஞ்சிதபாதம் முத்தான்மாக்களாகிய உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் அருளால் எடுக்கிறது. குஞ்சித பாதமாகிய  ஆடியபாதம், பிறவிக் கடலினின்றும்  எடுத்த  உயிர்களை, அத்திருவடியினின்றும் நெகிழ்ந்து விடாமல், அவ்வருள் திருவடியிலேயே பேரின்பம் நுகர, பெருமானின் வ ரதகரமாகிய  இடதுகரம்  தூக்கிய திருவடிக்கு  மேல்   வளைந்து  நின்று, தூக்கிய திருவடியில்  ஆன்மாக்களை  அழுத்தி,  பேரின்ப  வீட்டைப்  பெறச் செய்கிறது.

ஒன்றில் இரண்டு
நடராஜப் பெருமான் ஒரே ஆட்டத்தில் ஊன நடனம், ஞான நடனம் என்ற இருவேறு நடனங்களையும் நிகழ்த்தி, பெத்தான்மாக்களின்  ஆசைகளை  ஊன நடனத்தால் நிறைவேற்றியும்,  அநுபவித்து  உவர்ப்புத்  தோன்றி,  வீடுபேற்றில் விருப்புத்  தோன்றும்  முத்தான்மாக்களுக்கு ஞான  நடனத்தால்  வீடுபேற்றை நல்கியும்  அருள் புரிகிறார். இவற்றையெல்லாம் நமக்குத் தெளிவாக விளக்கியுள்ள  உண்மை விளக்கம்  என்ற  சித்தாந்த நூலில்  உள்ளன.

ஊனமும், ஞானமும்
ஊனம் என்பது குறைவைக் குறிப்பது. குறைவுடைய உடல் தோற்றத்தையும், பஞ்ச பூத உலகத் தோற்றத்தையும் குறிப்பது. ஊனம்- குறைவு; தசை. ஞானம் என்பது நிறைவைக் குறிக்கும். குறைவுடைய உயிர்களை நிறைவு செய்தற்பொருட்டு முதலில் ஊன நடனம் புரிந்து, அவ்வுயிர்களை முத்தான்மா நிலைக்கு உயர்த்துவதால் அது ஊன நடனம் எனப்பெற்றது. முத்தியில் விருப்புற்ற அவ்வுயிர்களை ஈடேற்றம் செய்யப் புரிவதே ஞான நடனம். உயிர்களின் மாயையை உதறி, வல்வினையைச் சுட்டு, ஆணவ மலத்தை அமுக்கி, தூக்கிய திருவடியால் உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் எடுத்து, அவ்வாறு எடுக்கப்பெற்ற உயிர்களைத் திருவடியிலேயே வரத கரத்தால் அப்பேரின்பத்திலேயே திளைக்கச் செய்வதும், பேரா இன்பப் பெருவாழ்வாம். முத்தி நிலையைப் பெறுமாறு செய்வதும் ஞான நடனமாம்.
 
References
1.தமிழ் அருட்சுனைஞர், செந்தமிழ் வேள்விசதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார், 2015
2.சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம்_முனைவர் ந.சுப்புரெட்டியார் 2001
3.Dance of Shiva, Dr.Anand coomarawsamy 1924
4.Cosmic Dance of Lord Shiva,Philippe L. De Coster, B.Th., D.D. 2001

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

ADVERTISEMENT
ADVERTISEMENT