அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-60: சைவ சமய வளர்ச்சியும், சைவ சமய உட்பிரிவுகளும்

28th Feb 2019 05:04 PM | C.P.சரவணன்

ADVERTISEMENT

 

பண்டைய தமிழ் இலக்கியங்கள் கடவுளரைப் பற்றியும், வழிபாடுகளைப் பற்றியும் கூறுகின்றன என்பதை முன்பே பார்த்தோம். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் நிலவியிருந்தமையைக் காட்டுகின்றன. அரசர்களுக்கிடையே தொடர்ந்து நிகழ்ந்து வந்த போர்களாலும் பிரிவினைகளாலும் துன்புற்று அமைதியில்லாதிருந்த மக்களின் மனத்தைச் சமண, பௌத்தக் கருத்துகள் பெரிதும் கவர்ந்தன. சமண நூலாகிய சிலப்பதிகாரம் சமயக் காழ்ப்பின்றிக் கண்ணன், சிவன் போன்ற கடவுள்களையும் போற்றுகின்றது. ஏறக்குறைய அதே காலத்தில் தோன்றிய மணிமேகலை சமயக் காழ்ப்புடையதாக இருக்கின்றது. வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த களப்பிரர்கள் பாண்டிய மன்னர்களை வென்று, பாண்டிய நாட்டிற்குரியவற்றையெல்லாம் அழித்துத் தம்முடைய சமயத்தையும், பண்பாட்டையும் புகுத்தினர். அவர்கள் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சமயமாகிய சமணம் தமிழகத்தில் நன்கு வேரூன்றியது. களப்பிரர்களின் ஆட்சி, நாட்டில் தொன்மையான சைவ நெறிகளையும் நம்பிக்கைகளையும் பெருமளவு அழித்துவிட்டது. தமிழ் மக்கள் சமண பௌத்தக் கோட்பாடுகளை வரவேற்றனர். எனினும், துறவு பூணுதலே ஒருவர் கொண்ட குறிக்கோளை அடைவதற்குரிய வழி.பிறிதில்லை என்னும் கோட்பாடு தமிழ் மக்களுக்கு உகந்ததாக இல்லை. மேலும், அரசு இந்த வகையில் வற்புறுத்தலை மேற்கொண்டது. ‘‘வழிபாட்டு முறையில் தாராளமான சுதந்திரத்தை அனுபவித்துப் பழகிய தமிழ் மக்களுக்கு இந்தக் கட்டாயக் கருத்துத் திணிப்பு வெறுப்பை ஊட்டியது. இவை சைவ, வைணவ சமயங்கள் எழுச்சியடைந்து வளர்ச்சியடைய வழிகோலியது’’ எனச் சைவ சித்தாந்தப் பேராசிரியர் T.B. சித்தலிங்கையா குறிப்பிடுகின்றார்.

இத்தகைய சூழலில் தோன்றிய சைவ சமயக் குரவர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்புக் கிடைத்தது. அவர்கள் சமண பௌத்த சமயங்கள் வற்புறுத்திய துறவினுடைய சிறப்பை ஒரு சிறிதும் குறைக்காமலேயே, ‘இறைவன் துறவியர்க்கு எல்லாம் துறவி’ என்று கூறியும், அதே நேரத்தில் ‘ஒரு பாகம் பெண்ணுருவானவன்’ என்று கூறியும் இறைவனைப் பாடினார்கள். இறைவன் புகழைப் பாடுவதற்கும் பரப்புவதற்கும் அவர்கள் இசையைப் பயன்படுத்தினர். இதன் விளைவாகச் சமயச் சூழலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. பெருங்கோயில்கள் எழுந்தன. அவை கலைகளின் கருவூலங்களாக அமைந்தன என்று கூறுகின்றார் பேராசிரியர் சித்தலிங்கையா. இதை அவர் சைவம் மீண்டும் வளர்ச்சியடைந்ததற்குரிய காரணமாகக் கூறுகின்றார்

 

ADVERTISEMENT

பல்லவர் காலத்தில் சைவ சமயம் (கி.பி.300-900)

பல்லவருக்கு முற்பட்ட காலத்தில் திருமூலர், காரைக்கால் அம்மையார் போன்றோர் சைவ சமயத்தை போற்றி வளர்த்தனர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை இப் பக்திநெறி தமிழகத்தில் பெருவெள்ளமாகப் பரவியது. கோவில்கள் மிகப் பலவாகத் தோன்றின. ஆடலும் பாடலும் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. திகம்பர சமணமும் பௌத்தமும் நாட்டில் செல்வாக்கை இழந்தன. பல்லவ வேந்தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தம் இரு கண்களாகக் கருதி வளர்த்து வந்தனர். அழிந்து விடக்கூடிய மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம், இவற்றால் ஆகிய கோவில்களைக் கட்டாமல், பல்லவ மன்னர் மலைச்சரிவுகளில் குடைவரைக் கோவில்களை அமைத்தார்கள், பின்பு பாறைகளையே கோவில்களாக அமைத்தார்கள்.

பல்லவர்கள் சமயத்திற்குச் செய்த தொண்டுகளுள் சிறந்தவை கோயில்களே. அதுவரை மண்தளி (கோவில்)களாக இருந்தவை கற்றளிகளாக மாற்றப்பட்டன. தொடக்கத்தில் பாறைகளைக் குடைந்து குடை கோவில்களைக் கண்டனர். (இப்போது குகைக் கோவில்கள் என்கிறார்கள்.) குடை கோவில்கள் சமணர்களுடைய பழக்கத்தின்மேல் ஏற்பட்டவை என்று கூறவேண்டும். பண்டைக் குடை கோவில்கள் சமணர்கள் தவத்திற்காகக் குடைந்தவையே. அதனைப் பின்பற்றிப் பல்லவர்கள் குடை கோவில்களை ஆக்கினார்கள். (மகேந்திரவர்மன் சமணனாக இருந்து சைவனாகிக் குடை கோவில்களை முதலில் குடைந்தவன்.) மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630) பிறகு தனிப் பாறைகளைக் கோவில்களாகச் செதுக்கினார்கள். (மாமல்லைச் சிற்பத் தேர்களைக் காண்க.) பிறகு கற்களைப் படிமானம் செய்து கட்டடமாகக் கட்டினார்கள். (மல்லைச் சலசயனப் பெருமாள் கோவில்,திருத்தணிகை வீரட்டானேசர்கோவில்) இம்மூன்றுவகைக் கோவில்களும் பல்லவர்கள் கட்டினவையே. இவற்றைப் பின்பற்றியே சோழர்கள் பெருங் கோவில்களை எழுப்பினார்கள். ஆகவே, பல்லவர்களே கோவில் அமைப்பிற்கு மூல புருடர் என்று கூறல்வேண்டும்.

அவை ஒற்றைக் கல் கோவில்கள் எனப்படும். அவற்றின் பின்னரே செங்கற்களைப் போலக் கருங்கற்களை உடைத்து அவற்றைக் கொண்டு சுவர் எழுப்பிக் கோவில் கட்டத் தொடங்கினர். இங்ஙனம் அமைக்கப்பட்ட முதற்கோவிலே காஞ்சி கையிலாசநாதர் கோவில். பல்லவ மன்னர் இவ்வாறு கோவில்கள் அமைப்பதிலும் சிற்பங்களையும் ஓவியங்களையும் அமைப்பதிலும் கோவில் ஆட்சியிலும் கருத்தைச் செலுத்தினமையால், சைவ வைணவ சமயங்கள் நன்கு வளர்ச்சி பெறலாயின. நாயன்மார்கள் நூற்றுக்கணக்கான சிவன்கோவில்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினர். பண்ணோடு பாடப்பட்ட அப்பாடல்கள் மக்கள் உள்ளங்களை இழுத்தன. அக்காலத்தில் சைவத்தில் சாதிவேறுபாடுகள் கவனிக்கப்படவில்லை.

நரசிம்மவர்மன் மாமல்லபுரத்தில் அர்சுனன் ரதம், தர்மராசா ரதம் என சொல்லப்படும் சிவன் கோவில்களைத் தொடங்கினான். முதலாம் பரமேசுவரனின் மகன் இராகசிம்மம் சிம்ம பல்லவேஸ்வரம், இராஜசிம்ம பல்லவேஸ்வரம் என்ற இரண்டு சிவன் கோவில்களைக் கட்டினான். உலகப் புகழ்பெற்ற காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவன் இவனே. பூசலார் நாயனார் வரலாற்றோடு தொடர்புடையவன்.

இரண்டாம் பரமேஸ்வரன் திருவதிகைச் சிவன் கோவிலை கற்றளியாக்கினான். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன. மூன்றாம் நந்திவர்மன், பொன்னேரிக்கு அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் புதிதாய் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அச்சிற்றூரையே தானமாக அளித்தான். இவன் சுந்தரர் காலத்தவன். இவன் மனைவியான மாறன்பாவை பல திருப்பணிகளைச் செய்தவள்.

 

சோழர் ஆட்சியில்  சைவ சமயம் (கி.பி.900-1300)

சோழர் காலத்தில் கோவில்கள் பெருகின. வழிபாட்டு முறைகள் பெருகின.வழிவழிச் சைவரான சோழ மன்னர் எல்லாக் கோவில்களிலும் திருமுறை ஓதுவார்களை நியமிக்க ஏற்பாடு செய்தனர். இராச ராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் பண்பட்ட ஓதுவார் 48 பேர் அமர்த்தப்பட்டனர். ஆடல் பாடல்களுக்காக நானூறு பதியிலார் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு கோவிலிலும் விழாக்கள் நடைபெற்றன. சைவ சமய நூல்கள் படித்துப் பொதுமக்களுக்கு விளக்கப் பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களான சிவஞான போதம் முதலிய நூல்கள் தோன்றின.

காஷ்மீர் நேபாள நாடுகளிம் சிவன் கோவில்களும், அதனை ஒட்டி மடங்களும் தோன்றி வளர்ந்தன. கோவில்களை அடுத்து மடங்கள் இருந்து சமயக் கல்வியை வளர்த்து வந்தன. அம்மடங்களில் யாத்திரிகர் உண்பிக்கப்பட்டனர். பெரிய கோவில்களில் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலையங்கள் இருந்தன. பெரிய கோவில்களில் மருத்துவ மனைகளும் அமைந்திருந்தன. அவற்றில் அறுவை மருத்துவரும் (Surgeon), நோய் மருத்துவரும் (Physician), தாதிமாரும் (Nurses) இருந்தனர். மருந்து வகைகளைக் கொண்டுவருவோரும், அவைகளைப் பக்குவம் செய்வோரும் இருந்தனர். கோவில் மண்டபங்களில் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் வளர்க்கப்பட்டன. சிற்ப ஓவியக் கலைகள் கோவில்களில் வளர்ச்சி பெற்றன. கோவிலுக்குள்ளேயே ஊராட்சி மன்றமும் நடை பெற்றது. ஊரில் பஞ்சம் ஏற்பட்டு நாட்டு மக்கள் நலியும்பொழுது கோவிலில் உள்ள பொன் வெள்ளி நகைகளும் பாத்திரங்களும் உருக்கி ஊரார்க்குக் கடனாகத் தரப்பட்டது என்று ஆலங்குடிக் கல்வெட்டுக் கூறுகின்றது. இத்தகைய முறைகளால் கோவில் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலைக்களனாய் இருந்து வந்தது. அரசன் முதல் ஆண்டி ஈறாக அனைவரும் கோவிலைத் தம் உயிராக மதித்தனர். கோவில் ஊர் நடுவிலே அமைந்து மக்களைத் தன்வயப்படுத்திவந்தது. 

ஆதித்த சோழன்( கி.பி,871-907) செய்த திருப்பணிகளுள் சிறந்தது காவிரியின் இருகரைகளிலும் இருந்த பாடல்பெற்ற கோவில்களைப் புதுப்பித்தமையாகும். ஆதித்தன் மகனான முதற்பராந்தகன் (கி.பி.907-953) தில்லை சிற்றம்பலத்தில் பொன் வேய்ந்தான். பராந்தகனின் மூத்த மகன் இராசாதித்தன் திருநாவலூர்க் கோவிலில் ஒரு புதிய கோவிலைக் கட்டினான். 

இராசாதித்தன் தம்பியான கண்டராதித்தர் (கி.பி.947-957) திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவர். அவர் திருப்பழனத்துக்கு பக்கத்தில் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரை உண்டாக்கி அங்கு சிவன் கோவிலைக் கட்டினார். இவர் மனைவி செம்பியன் மாதேவியார் திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவக்கரை, திருமுதுகுன்றம் , தென்குரங்காடுதுறை முதலிய கோவில்களை கற்றளியாக்கினார். ஐயாறு, தலைச்சங்காடு, ஆரூர், திருப்புறம்பியம், திருவெண்காடு முதலிய கோவில்களுக்கு நிலதானமும், பொன் தானமும் செய்துள்ளார்.

முதலாம் ராஜராஜன் (கி.பி.985-1014) தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டி அவருடைய பெயரையே சூட்டினார். அக்கோவில் “ராஜராஜேஸ்வரம்” என்று அழைக்கப்பட்டது. இன்று அதை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் கட்டும் பணி ஆறு ஆண்டுகள் அரும்பாடுபட்டு நடைபெற்றது. 

முதலாம் இராசேந்திரன் (கி.பி.1012-1044) உடையார் பாளையத்தில் நகரை நிறுவி, தஞ்சை கோவிலைப் போல் பெரிய சிவன் கோவிலக் கட்டினான்.

சைவ நெறிக்கருவூலம் எனப்படும் பன்னிருதிருமுறைகளை, இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். பல நூறு தலங்களில் எழுச்சி பெற்ற சைவப் பண்பாட்டு அசைவுகள் திருமுறைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் மாபெரும் ஒருமைக்குள் கொண்டுவரப்பட்டன.

முதல் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தில் திராட்சாரமம்-பீமேஸ்வரர் கோவில் சிறப்படைந்தது. தில்லை கூத்தபெருமான் கோவில் ஊர்வலம் நடைபெற ஏற்பாடு செய்தான் என “தில்லையுலா” நூல் குறிப்பிடுகிறது.

விக்கிரம சோழன் (கி.பி1120-1135) வரியிஉல் பெரும்பங்கு தில்லை கோவிலைப் புதுப்பிக்கவே செலவு செய்தான். இரண்டாம் குலோத்துங்கள் (கி.பி,1133-1150) தில்லையில் எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான். அம்மனுக்கு திருமாளிகை அமைத்தான். பேரம்பலத்தை பொன் வேய்தான்.

இரண்டாம் இராசராஜன் (கி.பி.1146-1173) கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் பெரிய சிவன் கோவிலைக் கட்டினான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1218) திருவிடைமருதூருக்கருகில் திருபுவன வீரேசுரம் என்னும் பெரிய சிவன் கோவிலைக் கட்டினான்.

 

சிற்றரசரும் திருப்பணிகளும்

சோழப் பேரரசருக்கடங்கிய நுளம்பாதிராசர், யாதவராயர், சாம்புவராயர், வாணகோவரையர், பொத்தப்பிச்சோழர், மிழலை நாட்டுத் தலைவர், வைதும்ப மகாராசர், சேதிராயர், மழவராயர், காடவராயர், முத்தரையர், முனையதரையர் போன்ற சிற்றரசர்கள் தில்லை, திருநாவலூர், திருக்காளத்தி முதலிய ஊர்க்கோவில்களில் திருப்பணிகளைச் செய்தனர்.

சேந்தமங்கலத்தை ஆண்டுவந்த பல்லவ மரபு கோப்பெருங்சிங்கன் தில்லைக் கோவில் தெற்கு கோபுரத்தினைக் கட்டினான்.. திருவண்ணாமலை கோவிலுக்கு தானங்கள் வழங்கினான். இவன் மகனான மகாராச சிம்மன் தில்லையில் கிழக்கு கோபுரத்தைக் கட்டினான்.

இவ்வாறு சைவ சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்-காபூர் படையெடுப்புத் தென்னாட்டில் நடந்தது. புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் கருவறை மட்டும் தப்பியது. எஞ்சிய கோபுரங்களும் திருச்சுற்றுக்களும் தரைமட்டமாக்கப்பட்டன. பெருங்கோவில்களில் இருந்த நகைகளும் பிறவும் கொண்டு செல்லப்பட்டன. பல கோவில்கள் தாக்கப்பட்டன. விக்கிரகங்களின் கைகால்கள் ஒடிக்கப்பட்டன. ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 

 

சைவசமய உட்பிரிவுகள்

1) ஊர்த்த சைவம் 2) அநாதி சைவம் 3) ஆதி சைவம் 4)மகா சைவம் 5) பேத சைவம் 6) அபேத சைவம் 7) அந்தர சைவம் 8) குணசைவம் 9) நிர்குண சைவம் 10 அத்துவா சைவம் 11) யோக சைவம் 12) ஞான சைவம்13) அணு சைவம் 14) கிரியா சைவம் 15) நாலுபாத சைவம் 16) வீர சவம் 17) சுத்த சைவம்  சைவ அறநெறி.
ஆகியவை பற்றி திருவேட்டீசுவரர் புராணம் ஆறு பாடல்களில் குறிப்பிடுகிறது.

 

ஊர்த்துவ சைவம்

சிவனுக்கும், சக்திக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு காலை தலைக்கு மேல் தூக்கி நடமாடினார் சிவன். அதைப் போல சக்தியால் நடனமாட இயலவில்லை. இந்த தாண்டவத்தை ஊர்த்துவ தாண்டவம் என்கின்றனர். இந்த ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டில் காணலாம். சிவ தாண்டவம் பஞ்ச குணம் – சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழ்ந்தார்கள் சைவர்கள். இவர்கள் ஊர்த்துவ சைவர்கள். ஊர்த்வ சைவம் என்பது சிவன் ஒருவன் உண்டெனவும் அவன் தத்வாதீனன் என்றும், சடை, விபூதி, ருத்திராட்ச தாரணத்துடன் சிவபூஜை செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவவேடம் பொருளாகக் கொண்டு சிவத்தை தியானிப்பதே மூர்த்தி என்றும் சொல்லப்படும் சைவம்.

 

அநாதி சைவம் 

சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

 

அனந்த சைவம் 

அனந்த அல்லது அநாதி சைவமாவது, பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி நித்யம் எனவும், விபூதி, ருத்ராக்ஷ, சிவ வேடப் பொருளாகக் கொண்டு சிவத் தியானம் செய்து பாசம் நீங்கிச் சிவனை அடைவதே முக்தி என்பதாகும்.

 

மகா சைவம் 

மகா சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவ மூர்த்தியை சகுணமாகவும், நிர்க்குணமாகவும் தியானம் செய்து முக்தி  பெறுவதேயாகும்.

 

பேத சைவம் 

பேத சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து சிவனடியார் ஆசாரியார், சிவலிங்கம் ஆகிய் இவைகளை பூஜித்து முக்திஅடைதல் என்பதாகும்.

 

அபேத சைவம் 

அபேத சைவமாவது,  விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷர ஜெபம் செய்து சிவ பாவனை (சிவோஹம்) செய்து சிவம் ஆதல் என்பதாகும்.

 

அந்தர சைவம் 

அந்தர சைவமாவது, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளாயிருத்தலால் சிவன் அந்தப்படியிருத்தலை ஆராய்ந்து நாடுதல் முக்தி எனக் கூறும் சைவமாகும்.

 

எண்குணச் சைவம் 

இறைவன் எண்குணத்தான் எனக்கூறும் சைவம் இது.

 

நிற்குண சைவம்

பூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து நிர்குணனான சிவமூர்த்தியை அருவமாகத் தியானித்தல் நிற்குண சைவம் ஆகும்

 

வீர சைவம் 

வீர சைவர்கள் லிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை  உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும், சடங்கு சம்பிரதாயம் மற்றும் சாதி முறைகளையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. ஒவ்வொரு லிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். கர்நாடக வீர சைவம் பசவண்ணரால் உருவாக்கப்பட்ட வீரசைவத்தின் பிரிவு. ஆனால் அதற்கு முன்னரே வீரசைவத்தின் சில வகைகள் தமிழகத்தில் இருந்து வந்தன. வீரசைவமானது 1.சாமானிய வீரசைவம்,2.விசேட வீரசைவம்,3.நிராபரா வீரசைவம் என  மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருந்தென நா ஞானகுமாரன் குறிப்பிடுகிறார். 

 

காஷ்மீர சைவம்

காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.உடல் வேறு, மனம் வேறு என்பதை ஒத்துக் கொள்ளாத கோட்பாடான பொருண்மை வாதத்துடன், காஷ்மீர சைவத்தை வகைப்படுத்துகிறார்கள்.அனைத்துயிர்களின் உணர்வுகளுக்கு ஆதாரமான சிவனைத் தான் என உணர்வதே காஷ்மீர சைவத்தின் நோக்கமாகும்.பொதுவாக காஷ்மீர சைவ சமயம் ஆகம சாஸ்திரம், ஸ்பந்த சாஸ்திரம் மற்றும் பிரத்தியவிஞ்ஞான சாஸ்திரம் எனும் மூன்று அடிப்படைப் பகுதிகளில் அடங்கும்.

 

காபாலிகம்

இந்தியாவின் வடப்பகுதியில் வளர்ந்த நெறியாக கருதப்படும் காபாலிகம் தென்னகமான தமிழகத்திலும் வளர்ந்திருந்தது. சோழர்கள் காலத்தில் மற்ற சைவப்பிரிவுகளோடு காபாலிகளர்களும் தமிழகத்தில் இருந்துள்ளமைக்கான சான்றுகள் பாடல்களில் காணப்படுகின்றன.

சைவசமயத்தின் ஒரு பிரிவான காபாலிக சைவநெறியை பின்பற்றுகின்றவர்கள் காபாலிகர் ஆவார்கள். கபாலிகர் என்றும் அழைப்பதுண்டு. இவர்கள் சைவச்சின்னங்களை அணிவதோடு, மண்டையோடு மற்றும் சூலம் ஆகியவர்களை தாங்கியவர்களாக இருப்பர்

 

பாசுபதம்

பாசுபதர்கள் முதன்மையான ஆதிமார்க்கிகளாக அறியப்படுகின்றனர். பாசுபதர்களில் முக்கியமானவரான இலகுலீசர், பாசுபதம் வளர்ச்சி கண்டு, இலாகுல பாசுபதம் உருவாகக் காரணமானார். இலாகுலத்திலிருந்து சோம சித்தாந்தம் என அறியப்பட்ட காபாலிகம் வளர்ச்சியடைந்தது. இவை மூன்றினதும் உச்சக்கட்ட வளர்ச்சி, கி.பி 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 5ஆம் நூற்றாண்டுக்கிடையே இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான உறுதியான சான்றாதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

லகுலீச பாசுபதம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் பாசுபதத்தின் பிரிவாகும். இந்த சைவப் பிரிவானது நகுலீச பாசுபதம் என்றும், நகுலீச தத்துவம் என்றும் அறியப்படுகிறது. இப்பிரிவினை அமைத்தவர் நகலீசர் ஆவார். இவர் பசுபத்தினை தோற்றுவித்த கண்டரின் சீடர். அதனால் இப்பிரிவு அவருடைய பெயரினையும் இணைத்தே அழைக்கப்பெறுகிறது. காரியம், காரணம், சமய நடத்தை, யோகம், துன்ப நீக்கம் என்ற பஞ்ச அர்த்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரிவு செயல்படுகிறது

 

காளாமுகம்

காளாமுகம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவநெறியின் ஒரு பிரிவாகும். இந்த காளாமுக நெறியை பின்பற்றுகின்றவர்கள் காளாமுகர் என்று அழைக்கப்பெற்றனர். இப்பிரிவு வேதத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும். காளாமுகர்கள் பின்பற்றுகின்ற ஆகமங்கள் காளாமுக ஆகமங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன


References:
1.    இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடையங்களும், ந.முத்துமோகன் 2016
2.    சமயமும் தமிழும், ம.ந.திருஞானசம்மந்தன் 2011
3.    சைவ சித்தாந்த அகராதி    பேரா. அ. கி. மூர்த்தி 1998
4.    The World's Religions. Routledge.. Clarke, P., Hardy, F., Houlden, 2004  
5.    நயன்தரும் சைவசித்தாந்தம் நா ஞானகுமாரன் 
6.    "Kashmir Shaivism: The Secret Supreme"–John Hughes 2007
7.    பல்லவர் வரலாறு டாக்டர். மா. இராசமாணிக்கனார்
8.    சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும்_ T.B. சித்தலிங்கையா

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

ADVERTISEMENT
ADVERTISEMENT