அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-59: சிவமதம்

சி.பி.சரவணன்

சிவமதம் (Siva)

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்திலும், விடுதலை பெற்ற இந்தியாவின் 1960ஆம் ஆண்டு வரை தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுகளான பத்திரப்பதிவு சொத்து ஆவணங்களில் 'விவசாயம் சிவமதம் போன்ற சொல்லாட்சிகள் விரவிக் கிடக்கின்றன, தமிழரின் மதமாக 'சிவமதம்', என்று குறிப்பிடப்படும் வழக்கம் அண்மைக்காலம் வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமைக்கு வரலாற்றுச் சான்றாவணங்கள் உள்ளன. சிவமத அறிமுகத்தைப் பார்ப்போம்.

சிவம் பொருள் விளக்கம்

சிவம் என்ற சொல் தமிழ்ச் சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகின்றார் –“The term’ Siva is Tamil in its origin; the conception of Rudra-Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought.” வேத இந்தியா (Vedic India) என்னும் நூலில் ரகோசின் என்பவர் சிவ வழிபாடு,  இந்த நாட்டில் வாழ்ந்த ஆதிமக்களில் ஒரு வகையாளர் வழிபாடென்று குறிப்பிட்டுள்ளார். சிவ என்ற சொல்லிலுள்ள சகர ஓசை ஆதியில், கபால ஒலி (Cerebral) எனப்படும். அத்தகைய ஒலிகள் தமிழ்ச் சார்பு என்று ஆசிரியர் ராப்சன் கூறுகின்றார். சிவ என்ற சொல் செம்மை என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்களம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக் கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித் தோலாடையும் பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியன வாயின என கா. சு. பிள்ளை விளக்குவதினின்று சிவம், ஆதிதிராவிட பழங்குடியினரின் வழிபாட்டில் இருந்தாகவும் அது மொழி வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் தமிழர்க்கு உரியதென விளங்குகிறது. 

இறைவன் பெயர்

சேயோன், சிவன் என்னும் இரு சொற்களும், ஒரே மூலத்தினின்று தோன்றிச் சிவந்தவன் என்னும் பொருளைக் கொண்டன.
சுல் - சுள், சுல் - சுல்லி = அடுப்பு, அடுக்களை. சுள் - சுள்ளை -கலமுஞ் செங்கலும் சுடும் அடுப்புப் போன்ற காளவாய்.
சுல் - செல் - சேல் = செந்நிறக் கெண்டைமீன்.
சேல்விழி = சேல் மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண்.
நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்பின் பெயர் செந் நிறத்தைக் குறித்தது.
 ஒ.நோ: எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = 1. சிவந்த முருக்க மலர். "எரிமலர்ப் பவளச் செவ்வாய்" (சீவக. 602). 2. செந்தாமரை.    
"செல்வ னெரிமலர்ச் சேவடியை" (சீவக. 2741).
செல் - செள் - செட்டு - செட்டி  =  1. சிவந்த அடியை யுடைய வெட்சிச் செடி. "செங்கால் வெட்சி" (திருமுருகு. 21). 2. முருகன்.
செள் - செய் - செய்யவன் = 1. சிவந்தவன். 2. கதிரவன். 3. செவ்வாய். செய்யன் = முருகன்.
செய்யாள் (செய்யவள்) = செங்கோலத் திருமகள்.

சிவன் மாலை

குறிஞ்சி நிலத்திற்குரிய கொன்றை மாலை. கொன்றை வேய்ந்தோன் - கொன்றை வேந்தன்.

சிவனூர்தி

குறிஞ்சி நிலத்திற்குரிய (வெண்) காளை. அதன் வெண்ணிறம் தூய்மை குறித்தது.

சிவன் படைக்கலம்

முக்கவர்ச் சூலம். அதனாற் சிவனுக்குச் சூலி என்று ஒரு பெயர். கணிச்சியும்(மழுவும்) சிவன் படை. அதனால் அவனுக்குக் கணிச்சியான்(மழுவாளி) என்றும் பெயர்.

சிவனிருக்கை

வீட்டுலகமும் வெள்ளிமலையும் திருக்கோவில்களும் தொண்டருள்ளமும்.

சிவன் குணம்

தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என்னும் எட்டு.

     "பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
      உவமை யின்மை யொருவினை யின்மை
      குறைவி லறிவுடைமை கோத்திர மின்மையென்
      றிறைவ னிடத்தி லெண்குண மிவையே"

என்பது பிங்கலம்(2 : 6). பவம் (வ.) = பிறப்பு.

சிவன் தொழில்

படைப்பு, காப்பு, அழிப்பு என்னும் மூன்று.

சிவன் வடிவம் ஐவகை

(1)கொன்றைமாலை அணிந்து சூல மேந்திக் காளை யூர்ந்து செல்லும் செம்மேனியன்.

(2)அம்மையப்பன்

எல்லா உயிர்கட்கும் தாய்தந்தை போன்றவன். வலப்புறம் தந்தைகூறும் இடப்புறம் தாய்கூறும் கொண்டதனால், மங்கை பங்கன் அல்லது மாதொருபாகன் என்று சொல்லப்படுபவன்.

தந்தை கூற்றுப்பெயர்தாய் கூற்றுப்பெயர்
சிவன்சிவை
இறைவன்இறைவி
தேவன்தேவி
பரன்பரை
அப்பன்அம்மை
ஐயன்ஐயை
மலைமகன்மலைமகள்
சூலிசூலினி
மலைமகன்மலைமகள்

என்னும் இருபெயரும், மலைவாழ் தெய்வம் என்றே பொருள்படுவன.

அம்மையப்பன் வடிவம், இலங்கம் (லிங்கம்) என்னும் உருவடிவிலும், ஓம் என்னும் ஒலிவடிவிலும், பிள்ளையார் சுழி யென்னும் உகர வரிவடிவிலும் குறிக்கப்பெறும்.

இலக்கு = குறி. இலக்கு - இலக்கம் - இலங்கம்.

அம்மையப்பன் வடிவு, இறைவனின் உண்மை வடிவைக் காணமுடியாத இல்லறவானரான பொதுமக்கட்கே. உயர்ந்த அறிவு படைத்த சித்தரும் முனிவரும், இறைவனின் ஆற்றலையே பெண் கூறாக உருவகிப்பர். இலங்க வடிவு நிலையில், இறைவனாற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள் என்றும், மேல் நிற்கும் இலங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும், பெயர். ஆவுடையாள் என்பது ஆவுடையம்மை, ஆவுடையாச்சி என்றும் வழங்கும்.

(3)குரவன்

தகுதியுள்ளவர்க்கு, அந்தண (அருள் முனிவன்) வடிவில் வந்து உயரறிவுறுத்தும் பரம ஆசிரியன்.  முனிவன் கோலத்திற் சடையுடைமையால், சிவன் சடையன், சடையப்பன் என்றும் பெயர் பெற்றான். புரம் = உயர்நிலைக் கட்டடம், அஃதுள்ளவூர். புரம் - பரம் = மேலுலகம், வீட்டுலகம். பரம் - பரமன் = மேலோன், இறைவன். பரம் - வரம் - வரன் (குறள். 24).

(4)எண் வடிவன் (அட்டமூர்த்தி)

நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் (ஆன்மா) என்னும் எண்பொருள் வடிவினன். எங்கும் நிறைந் திருப்பதுபற்றி எண்டிசையும் சிவனுக்கு எண் கையாகச் சொல்லப் படும். அதனால் எண்டோளன் பிங்.) என்று பெயர். கதிரவன் திங்கள் தீ என்னும் முச்சுடரும் சிவனுக்கு முக்கண்ணாகக் கூறப்படும். அதனால் அவனுக்கு முக்கண்ணன் என்று ஒரு பெயர்.

(5)நடவரசன்

உயிரானது நினைவுச் செயல் என்னும் முத்தொழிற் படுமாறு, உடம்பின் நடுவுள் தொங்கி நின்று இயங்கும் நெஞ்சத் துடிப்பை நடமாக உருவகித்து, அதுபோன்று எல்லா உயிரினங்களும் (படைப்பு காப்பு அழிப்பு என்னும்) தோன்றல் வாழ்தல் மறைதல் ஆகிய முத்தொழிற் படுமாறு, பேருலகப் பரவெளியுடம்பின் நடுவில் நின்று இறைவன் நெஞ்சம் இயங்குவதாகக் கோடித்து (பாவித்து), அவன் முத்தொழிலையும் இன்ப நடமாக வுருவகித்து, அவனை நடருள் தலைவனாக்கி, நடவரசன்(நட நாயகன், ஆடவல்லான்) என்று குறித்தனர். இவ்வுருவகம், "அண்டத்திற் கொத்தது பிண்டத்திற்கும்" என்னும் உண்மையை, பிண்டத்திற் கொத்தது அண்டத்திற்கும்  எனக் காட்டியவாறாம்.

குமரிநாடிருந்த பண்டைக் காலத்தில், குமரிமலைக்கும் பனிமலைக்கும் நடுவிடத்திலிருந்த தில்லைநகரைப் பாண்டியன் பாருக்கு நெஞ்சத் தாவாகக் கொண்டு, அங்கு நடவரசன் திருப்படிமை நிற்க அம்பலம் அமைத்தான். நடவரசப் படிமைகள் நிற்கும் கோவில்களெல்லாம், அம்பலமென்று பெயர் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அம்பலம் ஆடரங்கு. அம்பலக் கூத்தன், மன்றாடி என்பன தில்லைச் சிவன் பெயர்கள். பேரம்பலம் ஏற்பட்ட பின், ஆடம்பலம் சிற்றம்பலம் எனப்பட்டது. அப் பெயரே இன்று சிதம்பரம் எனத் திரிந்து வழங்குகின்றது. சிற்றம்பலம் பொன்னால் வேயப்பட்டபின், பொன்னம்பலம் எனப்பட்டது. அதன் பின்னரே மணியம்பலம் வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலியவை தோன்றின.

கட்புலனாகக் காணும் நடவரசன் படிமை, அகக்கரண வளர்ச்சி யடையாத பொதுமக்கட் குரியதே. சிறந்த அறிவரான அடியார், திறந்த வெளியையே அம்பலமாகக் கருதுவர். அப் பரவெளியம்பலமே திரை நீக்கிக் காட்டப்படும். அதுவே சிற்றம்பலமருமம் (சிதம்பர ரகசியம்) என வழங்குவது.

நளி - நடி - நடம், நடனம். நடம் - நட்டம் - நட்டுவன். நட்டம் - வ. ந்ருத்த, நாட்ய.

அரசன் என்னும் தென்சொல் வரலாற்றைத் தமிழர் வரலாறு  என்னும் நூலிற் காண்க.

உம்முதல் = கூடுதல். உம் - அம் - அமை. அமைதல் = 1.நெருங்குதல், அடர்தல். "வழையமை சாரல்" (மலைபடு. 181). 2. கூடுதல். அமை-அவை = கூட்டம், குழாம். 3.பொருந்துதல். "பாங்கமை பதலை" (கந்த பு. திருப்பர. 9). 4. நிறைதல். "உறுப்பமைந்து" (குறள். 761).

அம் - அம்பு - அம்பல் = 1. கூடுதல், கூட்டம். ஒ.நோ: உம் - கும் - கும்பு - கும்பல். அம்பல் - அம்பலம் = கூட்டம், அவை, கூடுமிடம், மன்றம். 2. குவிதல், குவிந்த அரும்பு அல்லது மொட்டு. "அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்." (இறை. 22, உரை). ஒ.நோ: கும் - கும்பு -கூம்பு.  கும் - குமி - குவி.    3.  அரும்பு போன்ற சிலருரை பழி. "அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின்" (தொல். கள. 48). "அம்பலும் அலரும் களவு." (இறை. 22).

ம. அம்பலம், க. அம்பல, து. அம்பில, வ. அம்பர.

வடசொல்லில் லகரம் ரகரமாகத் திரிந்திருத்தல் காண்க. அத் திரிசொல்லையே அம்பலம் என்னும் இயற்சொல்லிற்கு மூல மாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியிற் காட்டியிருப்பது, இற்றைத் தமிழரின் இழிவான அடிமைத்தனத்தையே காட்டும்.

சிவ வழிபாட்டு வடிவம்

சிவனுடைய ஐவகை வடிவுகளுள்ளும், பொதுமக்கள் வழிபாட்டிற்கேற்றது அம்மையப்ப வடிவமே.

சிவ வழிபாட்டு முறை

காலையிற் குளித்து, உண்ணுமுன், தீய நினைவின்றி அமைந்தவுள்ளத்துடன் அக்கமாலையணிந்து திருநீறு பூசிச் சிவப் படிமை முன் நின்று, இயலும்போதெல்லாம் தேங்காயுடைத்து வாழைப்பழத்துடன் படைத்து, நறும்புகை காட்டிப் பூச்சாத்திக் கைகுவித்து, (ஓம் என்னும் முளை மந்திரத்தை முன்னிட்ட) சிவ போற்றி என்னுந் திருவைந்தெழுத்தை ஓதி, பல்வேறு போற்றித் தொடர்களால் வழுத்தி, நெடுஞ்சாண்கிடை வணக்கஞ் செய்து எழுந்திருப்பதே சிறந்த முறைப்பட்ட சிவ வழிபாடாகக் கொள்ளப் பட்டது.

உழவரும் உழைப்பாளிகளும் தொழிலாளரும் காலையில் சிவ வணக்கம் மட்டும் செய்ய முடியும். திருநாள்களிலும் திருவிழாக் காலத்திலும் எல்லாரும் கோவில் வழிபாடு செய்வர்.

அஃகு - அக்கு = கூர் அல்லது முள்ளுள்ள காய்மணி. அக்கு -அக்கம். முள்ளுண்மையால், அக்கத்திற்குக் கண்மணி முண்மணி யென்றும் பெயர்.  கள் = முள். கள்ளி = முள்ளி, முட்செடி. கள் + மணி = கண்மணி. முதற்காலத்திற் பனிமலையும் பாண்டியன் ஆட்சிக்குட்பட்டிருந்ததனால், ஆரியர் வருமுன்னரே, தென்னாட்டுச் சிவநெறியாரும் வடநாட்டு நேபாள அக்கமணியைத் தொன்று தொட்டு அணிந்து வந்தனர்.

     "வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு     
      தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" 
   (11 : 21-2)

சிவனையடைந்தவரின் மும்மாசும் எரிந்து சாம்பலாய் விடுகின்றன என்பதை உணர்த்தற்கே, திருநீறு பூசப்பட்டது. அது பூதி (பிங்.) என்றும் சொல்லப்படும். புழுதி -  பூதி  =  தூள், நீறு, திருநீறு.

தேங்காயுடைத்து அதன் நீரைச் சிந்தி முறியைப் படைப்பது, வழிபடுவோன் தன் தீவினை நினைந்து மனமுடைந்து கண்ணீர் சிந்தித் தூய்மைப்பட வேண்டு மென்பதையும்; வாழைப்பழத்தைப் படைப்பது, அதன் சதைபோல உள்ளம் கனிந்து மென்மையும் இனிமையும் பெற வேண்டுமென்பதையும், குறிப்பாக வுணர்த்தும்.    சிவன்கோவிற் பூசகர், குருக்கள், பண்டாரம், ஓதுவார், புலவர், போற்றி எனப் பல பெயர் பெற்றனர்.

மூவேந்தரும் முதற்கண் சிவனடியாராயிருந்து, பின்னர் முத்திருமேனிக் கொள்கைப் புகுத்திய பின், இடையிடை ஒரோவொருவர் மாலியத்தையும் (வைணவத்தையும்) தழுவினர். தம்மைப் போன்றே தாம் வழிபடு தெய்வமும் ஏற்றமாக இருந்து இன்புற வேண்டுமென்று, தமக்குரிய சிறப்பை யெல்லாம் தம் தெய்வத்திற்கும் செய்தனர். அச் சிறப்புகள் தெய்வத்தின் ஒப்பிலாவுயர்வு நோக்கிப் பன்மடியுயர்வாகச் செய்யப்பட்டன.

வானளாவும் எழுநிலைக் கூடகோபுரமும் மாடமண்டபங்களும் சுற்றுமதிலும் கொண்ட திருவுண்ணாழிகைத் திருக்கோவில், ஊர்வலத்திற்குச் சிறந்த யானை குதிரையொட்டக வெண்காளைகள், குடை கொடி முதலிய சின்னங்கள், கருவூல களஞ்சிய பண்ட சாலைகள், பல்வகை அணிகங்கள்(வாகனங்கள்), சப்பரங்கள், விலையுயர்வும் ஓவிய வேலைப்பாட்டுச் சிறப்புமுள்ள பொன்னாடை பொன்மணியணிகள், திருக்குளம், பூங்கா, திருப்பள்ளி யெழுச்சி யின்னியம், திருமுழுக்காட்டு, திருவின்னமுது படைப்பு, திருநாள் ஆரவார ஊர்வல உலாக்கள், ஆண்டுதோறும் (முத்தட்டு முதல் எழு தட்டுவரை கொண்ட) தேரோட்ட தெப்பத் தேர்த்திருவிழாக்கள்,  நில மானியங்கள், இயவர், காவலர், ஏவலர் மேற் பார்வலராகிய பணிமக்கள் முதலிய பலவகைச் சிறப்பும் வேந்தராலும் மன்னராலும் பெருஞ்செல்வராலும் செய்யப்பட்டன. இசையாலும் நடத்தாலும் இறைவனை இன்புறுத்த நால்வகைப் பட்ட எல்லாக் கருவியிசையும் ஆட்டும் பாட்டும் கோவில்களிலும் திருவுலாக்களிலும் நிகழ்ந்தன. இதற்கென்றே பாடகரும் கணிகையரும் நட்டுவரும் முட்டுவரும் அமர்த்தப்பட்டனர்.

கொண்முடிபு(சித்தாந்தம்)

தலைவன் தளையன் தளை என்னும் மூன்றும் தொடக்கமிலா முப்பொருள்கள். காமம்(காமியம்) வெகுளி(ஆணவம்) மயக்கம் (மாயை) எனத் தளை மூவகைத்து. தெரிந்தும் தெரியாமலும் செய்யும்

சிவமத விரிவளர்ச்சி

சிவமதம், நாளடைவிற் பல்வேறு வணக்கங்களையும், இறுதி யில் திருமாலியத்தையும் தன்னுட் கொண்டது.    நாக வணக்கத்தார் நாக வுருவைத் தம் தலையுச்சியில் அணிந்திருந்தனர். அவரைச் சிவனியராக்கற்கு, சிவன் முடிமீதும் நாகவுரு விருப்பதாகப் படிமையமைத்துவிட்டனர். அதோடு, சிவன் பாம்புகளையே பல்வேறு அணிகளாக அணிந்திருப்பதாகவும் காட்டி விட்டனர். அதனால், நாகப்பன், பாம்பணியன் முதலிய பெயர்களும் தோன்றின.

"பாம்பலங் காரப் பரன்" (திருக்கோ. 11)

தமிழகம் முழுதும் வேந்தராலும் தொழப்பட்ட காளி, சிவன் தேவியாக்கப்பட்டாள். அது திருவாலங்காட்டுத் திருநடப் போரில் அவள் தோல்வியுற்றதன் விளைவாகக் காட்டப்பட்டது. ஆண்பாற் கேற்ற ஊர்த்த நடனம் பெண்பாற் கேற்காமையால், காளியடியாரும் அதை ஒத்துக்கொள்ள வேண்டிய தாயிற்று.

உவர் - இவர். உவர் - ஊர். ஊர்தல் = ஏறி நடத்துதல் அல்லது செல்லுதல், உயர்தல். ஊர் - ஊர்த்தம் - வ. ஊர்த்வம் (urdhva).

சிவையுங் காளியும் ஒன்றானதினால், சிவை நீலி(கருப்பி) யெனவும், காளி இறைவி(இறைவன் தேவி) யெனவும், பெயர் பெற்றனர். அம்மை ஐயை என்பன இருவருக்கும் பொதுப் பெயர் கள். அம்மை - அம்மா - வ. அம்பா.    காளி சிவன் தேவியான பின், காளியப்பன், பேய்ச்சியப்பன் முதலிய பெயர்கள் சிவனுக்குத் தோன்றின. விண்ணக வாழ்வு நிலையற்றதாய் எழுபிறவியுள் அடங்கினதினாலும், விண்ணக வேந்தனுக்கு மழை பெய்விக்கும் அதிகாரமே யிருந்ததனாலும், நிலையான வீட்டுலகத் தலைவனும் எல்லாம் வல்லவனுமான சிவனை வழிபடும் வழிபாட்டுள், வேந்தன் வணக்கம் மறைந்தொழிந்தது.

இறுதியில், திருமாலும் பெண்ணாக மாறிச் சிவபெருமானின் இடப்பாகத் தமர்ந்தான் என்னும் கதையெழுந்தது. அரி என்னும் திருமால் பெயர் இதனால் தோன்றியிருக்கலாம். அரம் = சிவப்பு. அரன் = சிவன். அரன் - அரி(பெண்பால்). பச்சையன் என்னும் பொருள் பிற்காலத்தது.

திருமால் மதமும் ஒரு தனி மதமாகத் தொன்றுதொட்டு இருந்து வந்திருப்பினும், சிவனுக்கே இறைவன் என்னும் பெயருண்மையும், "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்"

சிலப்பதிகாரக் கூற்றும்(5 : 169), சிவமதத்தின் தலைமையை யுணர்த் தும். உலக மெல்லாம் உடையவர் என்பதுபற்றி, சிவனுக்குப் பெருவுடையார் என்றும் பெயர். "ஏழுடையான் பொழில்" (திருக்கோ. 7).

Reference:
தமிழர் மதம்_மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT