அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை

14th Feb 2019 06:46 PM

ADVERTISEMENT

 

ஐவகைத் தரிசனங்கள் எனப்படும் சாங்கியம், ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை என்பன இந்தியத் தத்துவ இயல் சார்ந்தனவே. அவற்றைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

 

சாங்கியம்‎ (Sankiyam)

ADVERTISEMENT

சாங்கிய தத்துவத்தை நிறுவியவர் கபிலர் . கி.மு. 400க்கும் 200க்கும் இடையில் இறைவழிபாட்டில்  'சாங்கியத் தத்துவம்' என்ற ஓர் அணுகுமுறை உருவானது.  பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திற்கும் அப்பாலுள்ள தூயவெளி ஆரம்பமும் முடிவும் இல்லாதது என்னும், அதுவே காரணப்பொருள் எனவும், அதனைப் புருடன் அல்லது 'புருஷார்த்தம்' என்றும் மற்ற பிரபஞ்ச தோற்றங்கள் அனைத்தும் 'பிரகிருதி' என்றும் பிரித்துப் பேசப்பட்டது. புருஷாத்தம் எல்லாம் வல்லது, இயக்கமற்றது, அறிவாது எனவும், பிரகிரதி என்பது இயக்கம் உடையது, தோற்றங்கள் பெற்றது எனவும் பகுக்கப்பட்டது. பிரகிருதியை இயற்கையாக உணர்ந்து, அதனை பெண்பாலாக உணர்த்தினர். இயக்கத்தில், அதற்கு அமைதி (சத்துவ), இன்பம் (ராஜசம்), துன்பம் (தமோ) ஆகிய மூன்று குணங்களை உடையதாகப் பிரித்தனர். குணப்பாடுகளைப் பின்னர் வந்த உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் சேர்ந்து விளக்கலாயினர். சத்துவ குணம் மேலோங்கி இருக்கும் போது அமைதி, மகிழ்ச்சி, இனிமை சார்ந்த எண்ணமும், செயல்பாடுகளும் அமையும். ராஜச குணம் இச்சைகளைச் சார்ந்த ஈடுபாடுகளுக்கு உள்ளாக்கும். இதன் மூலமாக பொருட்பற்று, அதிகாரப்பற்ற மேலோங்க வாய்ப்பு உண்டாகும். தமோகுணம் என்பது மனத்திற்கு மந்தத் தன்மையும் எச்செயலிலும் ஈடுபாடு காட்டாத விருப்பமற்ற ஒரு சோம்பல் தன்மையை உருவாக்கும். பிரகிருதியே, பேரண்டத் தொடக்கத்துக்கு மூலகாரணம். இந்தப் பிரகிருதியில் இருந்து மஹத் தொடங்கி மண் ஈறாக மேலும் 23 படைப்புகள் வெளிப்படுகின்றன. இந்த இருபத்திநான்கோடு புருஷனையும் சேர்த்தால் 25 தத்துவங்களாகும். இனி, அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

 

1. பிரகிருதி

மூலப் பிரகிருதி அல்லது பிரதானம் எனப்படும் வெளிப்படா பேரியற்கையின் வெளிப்பட்ட தோற்றமே பிரகிருதி ஆகும். பிரதானத்துக்குத் தோற்றுவாய் இல்லை. அதுவே தோற்றுவாய். இயற்கை என்பது இயல்பாக உள்ளது, இருப்பது என்று பொருள்படும். ஆகையால், பிரகிருதி இல்லாமல் இருந்து திடீரென தோன்றவில்லை. அது ஏற்கெனவே இருக்கிறது. ஒரு பிரளயத்தின்போது ஒடுங்கியிருந்து மீண்டும் வெளிப்படுகிறது. இவ்வாறான மூலப்பிரகிருதி எனப்படும் இருப்பே உலகின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுவதால், சாங்கியம் சத்காரியவாதம் எனப்படுகிறது.

உலகின் தோற்றமும் ஒடுக்கமும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒடுங்கியிருக்கும் பேரியற்கை மூலப் பிரகிருதி அல்லது பிரதானம் எனப்படுகிறது. அது வெளிப்படுகையில், பிரகிருதி அதாவது பிரசவிக்கும் நிலையைப் பெறுகிறது. தான்தோன்றியாக உள்ள இந்தப் பிரகிருதி, தான் தோற்றுவாயாக இருந்து மஹத் உள்ளிட்டவற்றைத் தோற்றுவிக்கிறது.

இந்தப் பிரகிருதியானது முக்குணக் கூட்டாகும். சத்வம், ரஜஸ், தமஸ் என்பவையே அந்த முக்குணங்கள். சத்வம் என்பது நடுநிலை வகிப்பது. ரஜஸ் என்பது விரிவடைவது, செயல்படுவது. தமஸ் என்பது அதற்கு எதிரிடையான சுருங்குவது, முடங்குவது. புருஷன் (ஆன்மா) எனப்படும் பிரக்ஞையின் சேர்க்கையால் இந்தப் பிரகிருதி சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுதான் சிருஷ்டி, அதாவது படைப்பு. பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. அதேநேரத்தில் அனுபவத்துக்காக பிரகிருதியுடன் இணையும் புருஷன் (ஆன்மா), பின்னர் அந்தப் பிரகிருதியின் துணைகொண்டே முக்தியையும் (விடுதலையையும்) பெறுகிறது.

 

2. பேருணர்வு / மஹத்

பிரகிருதியில் இருந்து முதலில் வெளிப்படுவது மஹத். இதற்குப் பெரியது, மான் என்றும் பெயர். உயிரினங்களில் இதுவே புத்தியாக விளங்குகிறது. இதனைத் தமிழில் பேருணர்வு என்றும் கூறலாம். பிரகிருதியோடு புருஷனைத் தொடர்புபடுத்துவது இதுவே. இந்திரியங்கள் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் இதிலிருந்தே பிறக்கின்றன. உறுதி, அறிவு, ஆற்றல், பண்புகள் இவையெல்லாம் மஹத்தின் தன்மையே. மகிழ்ச்சி, வேதனை, மயக்கம் (மாயை) ஆகியவை மஹத் எனப்படும் புத்தியோடு தொடர்புடையவை. இவை முறையே ஒளியூட்டுதல், செயல்படவைத்தல், தடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ளன. மகிழ்ச்சி அல்லது ஒளியூட்டுதல், சத்வமாகவும்; வேதனை அல்லது செயல்படவைத்தல், ரஜஸாகவும்; மாயை அல்லது தடுத்தல், தமஸாகவும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் உயிரினங்களில் தோன்றுகின்றன. சத்வ குணம், புருஷன் விடுதலை (முக்தி) பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது. தமோ குணம், அறியாமையைத் தருகிறது; ரஜோ குணம், இவை இரண்டின் மேலீட்டால் செயல்படுகிறது.

 

3. அகங்காரம்

பிரகிருதியின் பரிணாம வளர்ச்சியில் தோன்றும் இரண்டாவது விஷயம் அகங்காரம். இதற்குத் தன்னுணர்வு என்று பொருள். அகம் என்றால் நான் என்று பொருள், கார என்றால் தன்மை என்று பொருள். ஆக, அகங்காரம் என்பது எல்லா உயிரினங்களிலும் உள்ள நான் என்ற சுய உணர்வைக் குறிக்கிறது. வெளி உலகத்தில் இருந்தும், பிற விஷயங்களில் இருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக் காட்டும் உணர்வுதான் அகங்காரம். நான் இப்படிப்பட்டவன்/ள், என்னால் இதனைச் செய்ய முடியும், எல்லாமே எனக்காக இருக்கின்றன, என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற எண்ணம் இருக்கிறதே அதுதான் அகங்காரம். இந்த அகங்காரமானது, சுய அபிமானம் கொண்டது. தான் என்ற பற்று உடையது. இந்த அகங்காரத்தில் இருந்தே மனம், 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5 தன்மாத்திரைகள் என 16 விஷயங்கள் தோன்றுகின்றன.

 

4. மனம்

எண்ணம், சிந்தனை ஆகியவற்றை உருவாக்குவதாகவும், அவற்றின் தொகுப்பாகவும் இந்த மனம் உள்ளது. மனம் என்பது ஒரு சிந்தனைக் கருவி. எந்த உயிரினத்திலும் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் இது இருப்பதால், இதற்கு அந்தகரணம் அதாவது உட்கருவி என்றும் பெயர் உண்டு. புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்றும் ஒரே அந்தகரணத்தின் மூன்று வடிவங்கள் என்றும் கூறப்படுவதுண்டு. அகங்காரத்தின் ஒட்டுமொத்த சத்வ குணத்தில் இருந்து மனம் தோன்றுகிறது. இது ஒரே நேரத்தில் உணர்வுக் கருவியாகவும், செயல் கருவியாகவும் விளங்குகிறது. உணர்வுக் கருவி என்றால் ஒன்றை உணர்ந்துகொள்வதற்கு மட்டுமே பயன்படுவது. உதாரணத்துக்கு, கேட்கப் பயன்படும் செவியும், பார்க்கப் பயன்படும் கண்ணும் உணர்வுக் கருவிகள். பொருள்களைக் கையாளப் பயன்படும் கரங்களும், நடக்கப் பயன்படும் கால்களும் செயல் கருவிகள். உணர்வுக் கருவிகளைக் கொண்டு உணர்ந்துகொள்வதாலும், செயல் கருவிகளைத் தூண்டி செயல்படச் செய்வதாலும் மனம் ஒருசேர உணர்வு-செயல் கருவியாக விளங்குகிறது.

 

5 – 9. பஞ்ச ஞானேந்திரியங்கள்

அகங்காரத்தின் சத்வ குணத்தில் இருந்து மனம் தவிர மேலும் 10 இந்திரியங்களும் தோன்றுகின்றன. இவை பஞ்ச ஞானேந்திரியங்களும் (ஐந்து உணர்வுக் கருவிகளும்) பஞ்ச கர்மேந்திரியங்களும் (ஐந்து செயல் கருவிகளும்) ஆகும். அகங்காரத்தின் சத்வ குணமானது, செயல்படும் வடிவமான ரஜோ குணத்தின் கூட்டால் இவற்றைத் தோற்றுவிப்பதாக சாங்கிய காரிகை (சாங்கிய காரிகா) கூறுகிறது. ஏனெனில் சத்வமும், தமஸும் தனியாக இயங்க இயலாது. செயல்படும் ரஜோ குணத்தின் கூட்டின் மூலமே இரண்டும் இயங்கி பரிணமிப்பதாக சாங்கிய காரிகை விளக்கம் தருகிறது. இனி, பஞ்ச ஞானேந்திரியங்கள் எவை என்று பார்ப்போம். ஐம்புலன்கள் என்று சொல்கிறோம் அல்லவா? அவைதாம் பஞ்ச ஞானந்திரியங்கள். இவை ஒவ்வொன்றும் ஓர் உணர்வை நமக்குத் தருகின்றன. அவை - காண்பதற்குப் பயன்படும் கண் (சக்ஷு), கேட்பதற்குப் பயன்படும் செவி (ஸ்ரோத்ரம்), முகர்வதற்குப் பயன்படும் மூக்கு (க்ராண), சுவை அறியப் பயன்படும் நாக்கு (ரஸனா), தொடு உணர்வை அறியப் பயன்படும் தோல் (த்வக்) ஆகியவை ஆகும்.

 

10 – 14. பஞ்ச கர்மேந்திரியங்கள்

அகங்காரம் ஒன்றாக இருப்பினும், சத்வம் உள்ளிட்ட முக்குணங்களின் மாறுபாடு காரணமாக, வெவ்வேறு விதமான விஷயங்களை அது பிரசவிக்கிறது. அந்த வகையில், இரண்டு விதமான பரிணாமங்கள் தோன்றுவதாக சாங்கிய காரிகை கூறுகிறது. ஒன்று வைக்ருத பரிணாமம், மற்றொன்று பூதாதி பரிணாமம். வைக்ருதம் என்பது அகங்காரத்தின் சத்வ குண மேலீட்டால் ஏற்படுகின்ற மாற்றம் அல்லது வளர்ச்சி. பூதாதி என்பது அகங்காரத்தின் தமோ குண மேலீட்டால் ஏற்படுகின்ற மாற்றம் அல்லது வளர்ச்சி. இவை இரண்டுமே அகங்காரத்தின் ரஜோ குண மேலீட்டால் ஏற்படும் தைஜஸம் என்ற வடிவின் காரணமாகப் பரிணமிக்கின்றன என்று விளக்கம் தருகிறது. அந்தவகையில், வைக்ருத பரிணாமத்தில் அகங்காரத்தில் இருந்து மனம் உள்ளிட்ட பதினொன்றும், பூதாதி பரிணாமத்தில் 5 தன்மைத்திரைகளும் தோன்றுகின்றன.
இதில் வைக்ருத பரிணாமத்தில் தோன்றும் மனம் மற்றும் 5 ஞானேந்திரியங்களைப் பற்றி ஏற்கெனவே கண்டோம். இனி, மீதமுள்ள பஞ்ச கர்மேந்திரியங்களைக் காண்போம். கர்மேந்திரியங்கள் என்பவை செயல் கருவிகள். அவை - பேச உதவும் வாய் (வாக்), பொருள்களைக் கையாள உதவும் கை (பாணி), நடமாட உதவும் கால் (பாத), மலஜலம் வெளியேற்ற உதவும் அங்கம் (பாயு), உற்பத்திக் கருவி அதாவது பிறப்புறுப்பு (உபஸ்த) ஆகியவையாம்.

 

15 - 19. ஐந்து தன்மாத்திரைகள்

அகங்காரத்தின் தமோ குணத்தில் இருந்து பூதாதி பரிணாமத்தால் ஏற்படுபவை ஐந்து தன்மாத்திரைகள்(பஞ்ச தன்மாத்ரா). தன்மாத்திரை என்றால் உட்பொருள், உணர்வுக்கூறு, அடிப்படைக்கூறு என்று பொருள். அதனால், தமிழில் இதனை அடிப்படை ஐங்கூறுகள் எனலாம். பூதாதி என்றால் பூதங்களுக்கு முதன்மையானது என்று பொருள். ஆகையால், 5 தன்மாத்திரைகளும் ஐம்பெரும்பூதங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக விளங்குகின்றன. அந்த 5 தன்மாத்திரைகள், முறையே சப்தம் (ஓசை), ஸ்பரிசம் (ஊறு அல்லது தொடு உணர்வு), ரூபம் (வடிவம்), ரஸம் (சுவை), கந்தம் (வாசனை) ஆகியவையாம். இந்த 5 தன்மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் உள்ளன.

 

20 – 24. ஐந்தாற்றல்கள்

“பிரகிருதி பஞ்சபூதானி” என்ற வாக்கியம் உண்டு. பிரகிருதி எனப்படும் பேரியற்கையானது பஞ்ச பூதங்களின் வடிவில் உள்ளது என்று இதற்குப் பொருள். வெளிப்பட்டுள்ள இயற்கை, நமக்கு வெளிப்படையாகத் தெரிவது இந்தப் பஞ்ச பூதங்களின் வடிவில்தான். தமிழில் இதனை ஐம்பெரும் பூதங்கள் என்றழைப்பர். அடிப்படை ஐங்கூறுகள் எனப்படும் பஞ்ச தன்மாத்திரைகளில் இருந்துதான் இந்த ஐந்து பூதங்களும், அதாவது ஐவகை இயற்கை வடிவங்களும் தோன்றின. ஓசை எனப்படும் சப்தத்தில் (நாதத்தில்) இருந்து வெளி எனப்படும் ஆகாயம் தோன்றியது. ஆகாயமே மற்ற பூதங்களுக்கான இருப்பிடமாக விரிந்து பொருள் சார்ந்த உலகம் தோன்றியது. இதனை ஆன்மிகவாதிகள் நாதத்தில் இருந்து உலகம் தோன்றியதாகக் கூறுவர். சிவபெருமானை ‘நாத பிந்து கலாதி நமோநமோ’ என்று வழிபடுவதும் இதன் அடிப்படையில்தான். இன்றைய விஞ்ஞானிகளும் ”Bigbang” எனப்படும் பெருவெடிப்பின் மூலமே பேரண்டம் தோன்றியதாகக் கூறுகின்றனர். இதைத்தான், இந்திய ஆன்மிகத்தின் ஆதித் தத்துவமான சாங்கியம் அன்றே மொழிந்திருக்கிறது.

பின்னர் ஓசை என்ற தன்மாத்திரையோடு, ஊறு அதாவது தொடு உணர்வு என்ற தன்மாத்திரையும் இணைந்து காற்று எனப்படும் வாயு தோன்றியது. பின்னர், இவை இரண்டுடன் வடிவம் என்ற மூன்றாவது தன்மாத்திரையும் இணைந்து தீ (அக்னி) எனப்படும் தேயு தோன்றியது. இந்த மூன்றுடன் சுவை எனப்படும் நான்காவது தன்மாத்திரையும் சேர்ந்து நீர் எனப்படும் ஆப உருவானது. இறுதியில் ஓசை, ஊறு, வடிவம், சுவை ஆகிய நான்கு தன்மாத்திரைகளுடன் மணம் என்ற ஐந்தாவது தன்மாத்திரையும் சேர்ந்து மண், நிலம் எனப்படும் பிருத்வி உருவானது.

 

நியாயம் (Nyaya)

இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதம ரிஷி அல்லது அட்சபாதர் என்பவரால் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும். இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நியாயம் தத்துவப் பிரிவு நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும். தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின. நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை:

பிரத்தியட்சம் - நேரடிக்காட்சி
அனுமானம் - உய்த்துணர்வு
உபமானம் - ஒப்பீடு
சப்தம் - உரைச்சான்று என்பனவாகும்

 

மீமாஞ்சம் (Mīmāṃsā)

மீமாம்சா சாத்திரங்கள் மனித வாழ்க்கைக்கு நான்கு இலட்சியங்கள் வழியுறுத்துகிறது. அவைகள் அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்), வீடு (மோட்சம்) ஆகும். அறவழியில் பொருளை ஈட்டி, அவற்றை அனுபவித்து, அந்த அனுபவ நிறைவாக வீடு பேற்றிற்கு வழி காண வேண்டும். இதற்கான வழிமுறைகளை மீமாம்சை தத்துவம் விளக்குகிறது.

 

ஜைமினி (Jaimini)

ஜைமினி  பண்டைய இந்தியாவின் முனிவர்களுள் ஒருவர். இவர் இந்திய மெய்யியலாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இவர் வியாசரின் மாணவர் ஆவார். மீமாம்சகக் கோட்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பது ஜைமினி எழுதிய மீமாம்சக சூத்திரம். இவரது காலம் கிமு 200 க்கும் கிபி 200 கும் இடையே இருக்கலாம். இவர் எழுதிய மீமாம்சக சூத்திரம் 2500 பாடல்களைக் கொண்டது. மீமாம்ச சூத்திரங்களுக்கு சபர சுவாமி (கி. மு. 57) விளக்க உரை எழுதியுள்ளார். இதை பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம்) என்றும் உத்தர மீமாம்சம் (ஞான காண்டம்) என்று இரு காண்டங்களாக பிரித்துள்ளனர்.

 

பூர்வ மீமாம்சம்

ஜைமினி  தொகுத்த பூர்வ மீமாம்சை எனும் கர்ம காண்டத்தை பனிரெண்டு காண்டங்களாகவும், அறுபது அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுப் பல சூத்திரங்களாகச் செய்யப்பட்டுள்ளது. பூர்வமீமாம்சைக்கு, சபரர், குமரிலபட்டர், பிரபாகரர் மற்றும் சாயனர் ஆகியவர்கள் மீமாம்சா சூத்திரங்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளனர். பூர்வ மீமாம்சையில், பிரம்மம், படைப்பு, மோட்சம் குறித்த விசாரணைகள் இல்லை. இதில் குறித்த யாகங்கள், பலி கொடுத்தல், யக்ஞங்கள் மற்றும் அக்னி ஹோத்திரம், விரதங்கள், சந்தியாவந்தணம் மற்றும் பூசை புனஸ்காரங்களை செய்வதன் மூலம் ஒரு மனிதன் எளிதாக நேரடியாக சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

 

உத்தர மீமாம்சை

வேதங்களின் இறுதிப் பகுதியில் வரும் உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்றும் ஞான காண்டம் என்றும் அழைப்பர்.உத்தர மீமாம்சகர்கள் வேதங்களில் சொல்லிய வேள்விகளுக்கும், சடங்குகளுக்கு முக்கியத்தவம் தராமல் உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம், பகவத் கீதை போன்ற வேதாந்தங்களில் சொல்லியுள்ள கருத்துக்களின் கொள்கை உடையவர்கள். உத்தர மீமாம்சகர்கள், உருவமற்ற மற்றும் உருவுடைய பிரம்மத்தையும் மற்றும் ஈஸ்வரனையும் தியானித்து வணங்குபவர்கள்.ஞானயோகத்தினால் மட்டுமே நிர்குணபிரம்மத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையாளர்கள். பரமாத்மாவும் சீவாத்மாவும் இரண்டல்ல; ஒன்றே எனும் கொள்கையுடைய வேதாந்திகள்

 

ஒகா/ யோகா (Yoga)

சிந்துசமவெளி ஓகக் குறிகள்

யோகம் என்ற சொல் ஓகம் என்ற தமிழ் சொல்லிலிருந்து திரிந்த வடசொல். யோகா நெறியைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த முதல் மனித இனம் தமிழினம் தான். சிந்துவெளிப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடையே யோகம் இருந்துள்ளது. இன்று யோகத்திற்குக் கூறும் எட்டுறுப்புகளையும் தொல்காப்பியர் கூறி இருக்கிறார். 5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழகத்தில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை ஓகக் (யோக) கலை ஆகும். அதில் ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். ஓகம் என்ற சொல் தமிழ்ச் சொல் ஆகும். "ஓகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.
ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

தமிழ் சொல் வடமொழி
தீதகற்றல் இயமம்
நன்றாற்றல் நியமம்
இருக்கை ஆசனம்
உயிர்வளிநிலை பிராணாயாமம்
தொகைநிலை பிரத்தியாகாரம்
பொறைநிலை தாரணை
உள்குதல் தியானம்
நொசிப்பு சமாதி

ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம். “யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம்.. ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.
தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த “ஓகக்கலை”. 

 

ஓக வழிபாடு

உலகு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே ஓகம் எனும் சொல்லாகும். ஒன்றித்தல் - ஒன்றுதல், ஒருக்குதல் எனபதுதான் அதன் கருத்து மூலம்.
உகு > ஒகு > ஒக்கு
ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல், ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.
உகு > ஒகு > ஓகு > ஓகம் = பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம்.

ஓகம் எனும் கருத்தைச் சற்றும் மாறாமல் கொண்டுள்ளதைக் காண்க. இந்த ஓகு > யோகு எனவும் சொல்லப்படும். வடவர் நூள்களில் இந்த செந்தமிழ்ச் சொல்லை யோகம் > யோகா எனக் கூறுவர்.
ஓகப்பயிற்சியை இருந்துசெய்யும் இருப்புநிலைகள் உள்ளன. அவற்றை இருக்கை, ஆதனம் (அ) ஆசனம் என்பர். ஆசனங்களைக் கொண்டமையும் பயிற்சி என்பதால் அதனை ஓகாசனம் ( யோகாசனம்) என்பர். அது எட்டுவகைப் பயில்வு முறைகளைக் கொண்டது. ஆகையால், எட்டங்க ஓகம் எனப்பெறும். அது வடநூல் புணர்ச்சியில் அஷ்டாங்க யோகம் எனப்படும்.

 

பதஞ்சலி எழுதிய “யோக சூத்திரம் கி.மு.2 ஆம் நூற்றாண்டச் சேர்ந்தது. இயற்கைச் சக்திகளுக்கும் மனித உடலில் உள்ள சக்திகளுக்கும் உள்ள உறவுகளை அறிந்து சில நடைமுறைகளை உருவாக்கிக் கட்டுப்படுத்த உதவும் செய்முறைகள்தாம் தந்திர சாதனை என்கிறார்கள்.. தேக தத்துவம் அல்லது உடலைப் போற்றுதல் என்பதே பொருளாகும். எல்லா உளப் பயிற்சிகளுக்கும் அடித்தளம் உடலே என்பது வலியுறுத்தப்படுகிறது. உடம்பு அழிந்தால், உயிர் அழியும். எனவே உடம்பைப் பேணுதல் உயிரை வளர்க்கும் முறை என்கிறார்கள். பதஞ்சலிகூட, யோக சூத்திரத்தில் யோகா எட்டு அம்சங்கள் உண்டு என்கிறார். அவற்றில் எதுவும் மனிதர்களைக் கடவுளிடத்தில் அழைத்துப் போகும் வண்டிகள் அல்ல.

1. எம (அடக்கம்), 2. நியம (கட்டுப்பாடு), 3. ஆசன (யோக முறையில் உட்காருதல்), 4. பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்), 5. பிரத்தியாகார (புலனறிவை மறக்கடித்தல்), 6. தாரண (கவன ஈர்ப்பு), 7. தியான (தியானம்), 8. சமாதி (சமாதி)தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தல். சமாதி என்பது புலன்களை அடக்கி ஒருவழியிருத்தல். பதஞ்சலி இவ்வளவு எளிதாக யோகாவை விட்டுவிட விரும்பவில்லை. ஆசன முறைகளைப் பயில்பவர்க்கு விபூதி எனும் அமானுஷ்ய சக்தி பிறக்கும். இந்தச் சக்தி கைவரப் பெற்றுவிட்டால் இயற்கையை வெல்லலாம். 

 

வைசேடிகம் (Vaiśedika)

கணாதன் என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்கு அதன் சிறப்புத் தன்மையே இதன் அடிப்படை. அதன் சிறப்புத் தன்மையை ஆராய்வதால் இதற்கு வைசேடிகம் அல்லது வைசேஷிகம் என்று பெயர் பெற்றது. அறுவடை முடிந்த நிலங்களில் சிதறிக்கிடக்கும் நெல், கோதுமை மற்றும் இதர தாணியங்களை பொறுக்கி அதனை சமைத்து உண்பவராம். தற்கால இந்தியத் தத்துவவியல் அறிஞர்களான குப்புசாமி சாத்திரி மற்றும் கார்பே இருவரும், கணாதரரை நாத்திகவாதி என்று கருதுகின்றனர்.

இந்த துறை ஆறு முக்கிய தலைப்புகளை விவாதிக்கின்றது. முக்கிய கருத்து, பண்பு, செயல், பொதுத்தன்னை, தனித்தன்மை, இயல்பு, இல்லாமை போன்றன. இந்த கல்வித்துறை வைசேடிகம் அழைக்கக் காரணம், இது தனித்தன்மை, உண்மையின் பண்பு என்பதை நம்புவதோடு அதை ஒரு தனிப்பகுதியாக நிற்கிறது. முக்கிய கருத்து என்ற தலைப்பில், இது பரு உடல், இராசாயன உடல் மற்றும் பிரபஞ்சம் பற்றி அலசுகிறது. அணுக்கொள்கை முறையும் இந்தத் துறையால் நிறுவப்பட்டதாகும். இதன் செய்முறை கற்பித்தல் தர்மத்தை வலியுறுத்துகிறது. இந்த தர்மம், வாழ்க்கை நெறியின் சட்ட ஒழுங்கு. இது மனிதனை உலக நலனுக்கும் வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளுக்கும் வழி கோலுகிறது. வைசேடிக தத்துவத்தில், வார்த்தை என்பது ஒழுக்க நிலை. இதில் தான் வாழ்க்கையும், உயிரினங்களின் விதியும் ஆட்சிசெய்யப்படுகிறது. இந்த ஆட்சி இயற்கை சட்டமான காலம் இடத்தாலும் மட்டுமல்ல, முன்வினை பயன்களாலும் நடத்தப்படுகிறது. நிகழ்கால வினையில் செயல்பாடுகளால் தனிமனிதன் விடுதலை அடைகிறான். எனவே தன் விதிக்கு படைப்பாளயாகிறான் ஆனால் பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் முடிவுவரை. அது ஆக்கம் அல்லது அழித்தல் என்ற செயலுக்கு பரம்பொருளையே நம்பியிருக்கிறது. இயற்கை நீதி (அத்ர்ஸ்தம்) யின் ஆக்கம் அழித்தல் என்ற நடைமுறை, தனிமனிதர்கள் இயங்குவதையம் அல்லது ஆக்கத்தை நோக்கி செயல்படுவதையும் பாதிக்கிறது. அத்ர்ஸ்தம் என்றும் அறியாத ஆற்றலால் நடத்தப்பட்ட ஆன்மா காற்று அணுக்களோடு தொடர்பு கொண்டு, முதல் அசைவு வர ஆரம்பிக்கினறது. இந்த காற்று அணுக்களிலுள்ள முதல் செயல்பாடு ஒன்றுக்கொன்று இணைப்புடைய இரண்டு, மூன்று பொருட்களாகவும், பின்னர் மொத்த பொருள்களாக வெளிப்பட்டு மூலகங்கள் (மகாபூதங்கள்) இவற்றை உருவாக்குகின்றது. இவ்வாறே, நெருப்பு, நீர், நிலம் இவற்றிலுள்ள அணுக்களிலும் அசைவு உண்டாகி, பிறகு மொத்த மூலகமான நெருப்பு, நீர், நிலம் போன்றவையாக உருவாக்கப்படுகிறது. இவ்வாறுதான் இந்த மிகப்பெரிய பரு உலகம் இருப்பாக அமைந்தது.  

 

வைசேடிகத்தின் உரைநூல்கள்

இராவண பாஷ்யம் எனும் உரைநூல் வைசேடிக தத்துவத்திற்கு இருப்பதாக தெரிகிறது. கி. பி. 5ஆம் நூற்றாண்டில், `பிரசஸ்பாதர்` என்பவர் எழுதிய `பதார்த்த-தர்ம-சங்கிரகம்` என்ற நூல் வைசேடிக தத்துவத்தை விளக்குவதாக உள்ளது. இதனை `பிரசஸ்பாத பாஷ்யம்` என்பர். இந்த பிரசஸ்பாத பாஷ்ய நூலைப் பற்றி பின்னர் பலர் எழுதிய நூல்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது. `வயோமசிவன்` என்பவர் எழுதிய (கி.பி.,8ஆம் நூற்றாண்டு) `வயோம சதி` , சீதரா எழுதிய கந்தலி என்ற நூல் (கி. பி. 10ஆம் நூற்றாண்டு), உதயணர் எழுதிய கிரணாவளி (கி. பி.,10ஆம் நூற்றாண்டு), ஆகிய நூல்களில் வைசேடிக தத்துவ விளக்க நூல்கள் பற்றிய விமர்சன குறிப்புகள் உள்ளது. நியாயம் (இந்து தத்துவம்) சூத்திரத்திற்கு வாத்சாயனர் கி. பி.4 ஆம் நூற்றாண்டில் வாத்ஸ்சாயன பாஷ்யம் எனும் நூலில் விமர்சனம் எழுதியுள்ளார்.


References:
இந்தியச் சமயங்களும் தத்துவங்களும் துரை.சீனிச்சாமி
இந்தியத் தத்துவ இயலின் வரலாறு_எஸ். என். தாஸ்குப்தா
இந்தியத் தத்துவ இயல், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா 
இந்தியத் தத்துவக் களஞ்சியம், முனைவர். சோ. ந. கந்தசாமி
திருமந்திர மூன்றாம் தந்திரசாரம்_முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

ADVERTISEMENT
ADVERTISEMENT