அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-55: அய்யாவழி

11th Feb 2019 03:51 PM

ADVERTISEMENT

 

அய்யாவழி (Ayyavazhi )

அய்யாவழியை தனி சமயமாக ஏற்றுள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்ற போதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்றாக விளங்குகிறது. 

 

ADVERTISEMENT

முடிசூடும் பெருமாள் (Mudisoodum Perumal)

கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என மாற்றப்பட்டது.

முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக அகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தேவனைச் சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள். பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.

 

வைகுண்ட அவதாரம்

தெட்சணம் எனப்படும் பூவண்டன் தோப்பை,தற்போதய சுவாமி தோப்பு அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை, மிகக் குறைவாகப் பேசினார்.

அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல்படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.

பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

 

அய்யா பயன்படுத்திய பிரம்பும், சுரைகுடுவும்

வைகுண்டர் 1851-ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதிரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பர்.

 

சீடர்கள்

அய்யா வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் உண்டு.
தர்ம சீடர்
வீமன் சீடர்
அர்ச்சுணன் சீடர்
சகாதேவன் சீடர்
நகுலன் சீடர்

 

நீதம்

அய்யாவழி சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது. அன்றைய சமுதாயம், அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள், தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது.

மனு நீதம் – சமுதாயத்தில் தனிமனிதனின் கடமைகள்.
ராச நீதம் - ஆட்சி புரியும் மன்னனுக்கான கடமைகள்.
தெய்வ நீதம் – இறையியல் சட்டங்கள் மற்றும் கடமைகள்.

 

அய்யாவழி கோட்பாடுகள்

அய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வருணாஸ்ரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாமார மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அய்யாவழியில் இறைவன் அமர்வதற்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில் அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது. அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வகையில் அய்யாவழி அத்வைதம் மற்றும் சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம் ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன. மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது.

அய்யாவழி தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட குறோணி, பின்வரும் ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான். அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில் ராமன், கிருஷ்ணன் மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார்.

தற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன் வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி தற்பொது அழிந்துகொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது. அன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள்.

 

சின்னம்

அய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அகிலத்தின் கருத்தோட்டத்தின் கருவை ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து அய்யாவழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது.

அய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு(மேல்) + ஏழு(கீழ்) என பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.

 

புனித நூல்

இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை/திரு ஏடு (Akilathirattu Ammanai/ Thiru Edu), அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.

அகிலம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் தோன்றியது முதல் வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு வரையிலான சம்பவங்கள் முதல் பகுதியாகவும், வைகுண்ட அவதாரம் முதல் வைகுண்டர் துதி சிங்காசனத்தில் இருந்து ஈரேழுலகையும் ஆளும் தர்ம யுகம் வரையுலான நிகழ்வுகள் இரண்டாம் பகுதியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அகிலம் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டிருக்கிறது. இதில், அம்மானை முறையில் அதிகமாக கையாளாப்படும் இரு எழுத்து முறைகளான விருத்தம் மற்றும் நடை பெரும்பாலான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வெண்பா, முதலிய பல இலக்கண முறைகள் அகிலத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

அகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களை கதை ரூபத்தில் வளிப்படுத்தியிருக்கும் நூல் என்னும் கருத்தும் உள்ளது. அகிலத்திரட்டு முழுவதையும் - குறோணி முதல் தர்மயுகம் வரை அனைத்தையும், மனித உடலுக்குள்ளேயே விளக்கி அதை, யோக சித்தி அடையச் செய்யும் நூல் என்பது சில கல்வியாளர்கள் கணிப்பு. மேலும் அகிலம் சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். அகிலத்திரட்டில் காணப்படும் 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும்.

ஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யாவழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலம் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலம் மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது.

Reference:
அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும்_ நெல்லை விவேகநந்தா

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

ADVERTISEMENT
ADVERTISEMENT