அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-53: துவைதம்

4th Feb 2019 03:30 PM | C.P.சரவணன்

ADVERTISEMENT

 

துவைதம் (Dvaita)

பிரம்மம், பிரபஞ்சம், ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். பிரம்மமே பிற அனைத்தும் என்ற சங்கரவேதாந்தத்தை துவைதம் முற்றிலுமாக மறுக்கிறது. இறுதி நிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைதக் கொள்கையையும் அது ஏற்பதில்லை. பிரம்மம் நாம் காணும், அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிரிருப்பு என்பது துவைதத்தின் கொள்கை.

மத்வர் (Madhvacharya) (1238 – 1317)

ADVERTISEMENT

துவைத மதத்தின் நிறுவனர் மத்வர். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில், பட்டராகப் பணி புரிந்த நத்தந்தில்லயா (Naddantillaya), வேதவதி தம்பதியருக்கு மகனாக 1239-ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் வாசுதேவன். அற்புதங்கள் செய்த வாசுதேவன் தமது பத்தாம் வயதில் துறவறம் மேற்கொள்ள எண்ணினார். இதனை விரும்பாத பெற்றோருக்கு வேறு ஒரு மகன் பிறக்கும் வரை துறவறம் பூணும் திட்டத்தை ஒத்தி வைப்பதாக வாக்களித்தார் வாசுதேவன். அவருக்குத் தம்பி பிறந்தவுடன் துறவறம் மேற்கொண்டார். 

உடுப்பியில் அச்யுத பிரேக்ஷாக்சாரியார் என்ற குருவிடம் சந்நியாச தீட்சை பெற்று, ஆனந்த தீர்த்தர் என்ற நாமத்துடன் வேத, உபநிஷத்துக்களைக் கற்றுத் தேர்ந்தார் வாசுதேவன். பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்ட ஆனந்தத் தீர்த்தர், பத்ரி ஷேத்திரத்தில் பகவத் கீதைக்குக் கீதாபாஷ்யம் விளக்கவுரை எழுதினார். இந்த உரையை குருவியாசரிடம் சமர்ப்பித்தபோது, ஒரே ஒரு திருத்தம் மட்டுமே செய்து அந்த விளக்க உரையை ஆமோதித்ததாக மத்வ விஜயம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தம் என்னவென்றால், உரையின் ஆரம்பத்தில் ஆனந்த தீர்த்தர் தன் `சக்திக்குத் தகுந்த` என்று குறிப்பிட்டிருந்த சொற்களுக்குப் பதிலாகப் பூரணமாக என மெருகேற்றினாராம் குருவியாசர்.

ஆனந்த தீர்த்தரின் முதல் படைப்பான கீதாபாஷ்யத்தைத் தொடர்ந்து, பிரம்ம சூத்திரம் என்ற வியாசரின் படைப்புக்கு முற்றிலும் புதிய உரை எழுதினார். பத்ரி ஸ்ரீத்திரத்தில் வேத வியாசரை மறுபடியும் கண்டு வணங்கித் தன் பாஷ்யத்திற்கான ஒப்புதலையும் பெற்றார். பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் செய்த ஸ்ரீமத்வாச்சாரியாரிடம், பல பண்டிதர்கள் வாதப் பிரதிவாதங்கள் செய்து, தோல்வியுற்றதால், அவரது சீடர்களானார்கள். முப்பத்திரண்டு லட்சணங்கள் கொண்ட ஸ்ரீமத்வரிடம் சோபனபட்டர், சாமாசாஸ்திரி ஆகிய அத்வைத பண்டிதர்கள் சரணடைந்து, முறையே பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர் என்ற பெயர்களுடன் சீடர்கள் ஆனார்கள்.

ஸ்ரீமத்வர் ஒரு முறை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தபொழுது பெரும் புயல் வீசியதாம். அப்போது கரை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல் கடல் நீரினால் அலைக்கழிக்கப்பட்டு மூழ்க இருந்தது. அதில் உள்ளப் பயணிகளின் கூக்குரலைக் கேட்டு தியானம் கலைந்த மத்வர், அவர்களைக் காக்கக் கோரித் தனது குருவை மனதால் வணங்கினார். குருவருளும் இவரது தவ வலிமையும் சேர்ந்து கப்பலில் இருந்த வியாபாரிகள் காப்பாற்றப்பட்டனராம்.

வியாபாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீமத்வருக்கு விலை மதிப்பில்லாத பொன்னும் பொருளும் வழங்க முன்வந்தனர். அவற்றை வாங்க மறுத்த ஸ்ரீமத்வர், அக்கப்பலில் இருந்த பாறை போன்ற பொருளை மட்டுமே கேட்டுப் பெற்றார். அப்பாறையில் கோபி சந்தனத்தால் மறைக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தை வெளிக்கொணர்ந்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார்.

துவைதம் என்று பரவலாக அழைக்கப்படும் ஸ்ரீமத்வ மத சித்தாந்தம், உலகம் யாவையும் உண்மையானது; மாயத் தோற்றம் அல்ல என்கிறது. பக்தியால் மோட்ச நிலையை அடைய முடியும் என இம்மதக் கோட்பாடு தெரிவிக்கிறது. மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது. உடுப்பி பகுதியும் அனந்தாஸனா திருக்கோயிலின் கருவறையில் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்தான் தனது 79-வது வயதில் மத்வர் மறைந்தார்.

மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீவிஜயீந்திரர். கி.பி. 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இந்த பீடத்தை அலங்கரித்தவர். இவரும், அடையபலம் மகான் அப்பய்ய தீட்சிதரும் சமகாலத்தவரே. சிற்சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் வாத- பிரதிவாதங்கள் புரிந்தாலும் இவர்களிடையே ஒருவித சிநேக மனப்பான்மை இருந்தது. விஜயீந்திரரின் வாதத் திறனை பிறரிடம் மனம் திறந்து பாராட்டுவார் அப்பய்ய தீட்சிதர்.

ஸ்ரீராகவேந்திரரின் பரமகுருவாக விளங்கியவர் இவர். அதாவது, குருவின் குரு. ஸ்ரீராகவேந்திரரின் குருநாதர் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர். இவரின் குருநாதரே ஸ்ரீவிஜயீந்திரர் (ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தரை இனி ஸ்ரீவிஜயீந்திரர் என்றே பார்ப்போம்). விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர் இவர். 'ரத்தினத்தைப் போல் ஜொலிக்கக் கூடிய 104 நூல்களை எழுதியவர். அபாரமான ஞானம் மற்றும் அசாத்தியமான திறமையைத் தன்னகத்தே கொண்டவர். ஜெயதீர்த்தர், ஸ்ரீராகவேந்திரர் ஆகியோர் ஸ்ரீமத்வாச்சாரியாரின் வழியில் தோன்றிய மகான்கள்.

மத்வ மடங்கள்

ஸ்ரீமத்வர் தன் வாழ்நாளில் எட்டு மடங்களை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மடத்தின் அதிபதி, அலை மீது ஆடி வந்த கப்பலில் இருந்த உடுப்பி கிருஷ்ணனுக்கு ஆராதனை செய்யும் `பர்யாய` முறையைக் கொண்டுவந்தார். உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

நூல்கள்

மத்வர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய மத்வ பாஷ்யம் முக்கியமான நூலாகும். கீதாபாஷ்யம், பாகவத தால்பரிய நிர்ணயம், பாரத தால்பரிய நிர்ணயம் ஆகியவை முக்கிய நூல்கள். ஜய தீர்த்தர், வியாசதீர்த்தர் ஆகிய சீடர்கள் மத்வ தத்துவத்தை விளக்கியுள்ளார்கள். மத்வரும் அத்வைதம் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து தன் தத்துவத்தை  அமைத்துள்ளார்.

அவர் இயற்றிய பன்னிரு அத்தியாயங்கள் கொண்ட `த்வாதஸ ஸ்தோத்திரம்` இன்றளவும் ஓதப்படுகிறது. முப்பத்தேழு கிரந்தங்களை இயற்றியுள்ளார். `மகாபாரத தாத்பரிய நிர்ணயம்` என்னும் பெயரில் மகாபாரத உரையும், `பாகவத தாத்பரிய நிர்ணயம்` என்ற பெயரில் ஸ்ரீமத் பாகவத புராண உரை, பத்து உபநிஷத்துகளின் விளக்கங்கள், பகவத் கீதைக்கு இரண்டு உரைகள், ரிக் வேத பாஷ்யம், பிரம்ம சூத்ரம் தொடர்பான நான்கு நூல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் திருப்தியின்றி தத்துவக் கொள்கையை நிறுவினார். அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டது. அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1,600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் இன்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.

ருக்வேதத்திலிருந்து 32 நூற்பக்கங்களுக்கு பொருளுரை எழுதியுள்ளார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், சாயனரிடமிருந்து மாறுபட்டு, ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது, இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், புராணங்கள் இவற்றிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார். 

மத்வ கோட்பாட்டுக்கு அடிப்படை

1. வேதாந்தி சூத்திரம் என்ற பிரம்ம சூத்திரா’
2. மூல இராமாயணம், மகாபாரதம்
3.புராணங்கள்
4. பஞ்சராத்ரா ஆகமங்கள்

துவைதக் கோட்பாடுகள் 

சங்கரரின் அத்வைதத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட மெய்யியலாகவே அமைத்துள்ளார். நாகார்ச்சுனர் என்ற பௌத்தரின் சூனியவாதத்தையே சங்கரர் அத்வைதமாக்கியுள்ளார் என்பதே மத்வரின் குற்றச்சாட்டு. 

1] பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றல்ல. பிரம்மம் அறிபடுபொருள், ஆத்மா அறிவது. அவை இரண்டாக இருப்பதனாலேயெ      ஞானம் உருவாகிறது .
2] பிரம்மம் அனைத்தையும் படைத்து காத்து அழிக்கும் சக்தி. ஆகவே அது அனைத்துமறிந்தது, அனைத்து வல்லமையும் கொண்டது. ஆனால் அது பிரபஞ்சத்தை கடந்த பெரும் சக்தி
3] ஞானம் பிரம்மத்தை அறியும் வழியாக உள்ளது. புறவுலகு புலன்களில் பதிவதனால் மட்டுமே ஞானம் உருவாகும். ஞானம் உண்மையாக இருக்கவேண்டுமென்றால் புறவுலகும் புலன்களும் உண்மையாக இருந்தாகவேண்டும்.
4] புறவுலகு என்பது மூலஇயற்கையின் வளர்ச்சி நிலையாக உருவாகியுள்ள உண்மை வடிவமே.
5] புறவுலகு உருவாக ஆதிஇயற்கையே வேர்நிலைக் காரணம், பிரம்மம் தூண்டுகை காரணம்.
6] ஆகவே பிரம்மம் தன்னை மூலப்பொருளாக அல்லது மூலக்காரணமாக ஆக்கி பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை. பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் உள்ளன. அக்குணங்கள் பிரம்மத்தில் இருக்க நியாயமில்லை.
7] எல்லா உயிர்களும் சமமல்ல. ஆத்மாக்களின் படிநிலைகள் வேறுபட்டவை. ஆத்மாக்கள் படிப்படியாக தங்களை மேம்படுத்திக் கொண்டு முத்தி நோக்கி செல்கின்றன
8] முத்தி என்பது இயற்கை உருவாக்கும் அலைகள் அடங்கி பிரம்மத்தை உணர்ந்து அதற்கு முழுமையாக ஆட்பட்டு நிற்கும் நிலையேயாகும்.
மத்வ தரிசனத்தின் அடிப்படை இதுவே. ஒருமையால் அல்ல பிரிவுகளால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது. ஞானம், கருமம் , முத்தி ஆகியவை அப்பிரிவிலிருந்து உருவாகின்றவை. ஒருமையே உண்மையென்றால் இவை தேவையே இல்லை. மத்வர் ஐவகை பிளவுகளை முன்வைத்து பிரபஞ்ச இயக்கத்தை விள்க்குகிறார். முக்தி என்பது அப்பிளவு இல்லாமலாகும் நிலையல்ல, அவற்றை தாண்டி பிரம்மத்தை அறியும்நிலையே. அதற்கு மத்வ மதம் முன்வைக்கும் வழி உணர்ச்சிகரமான தூய பக்தியேயாகும்

ஐம்பெரும்பிளவு 

மத்வரின் வேதாந்தத்தின்படி பிரம்மத்துக்கும் ஆத்மா மற்றும் இயற்கைக்கும் இடையே ஐந்து முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

1]பிரம்மமும், ஆத்மாவுக்கும் கொள்ளும் வேறுபாடு. ஆத்மாவுக்கு காம, குரோத, மோகங்கள் உள்ளன. அது மும்மலங்களால் மூடப்பட்டுள்ளது. அது குறைவும் முழுமையும் கொண்டது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்றால் அந்த் இயல்புகள் பிரம்மத்துக்கும் உரியன என்றகிறது. அப்படி அல்ல, பிரம்மம் தூயது, எந்நிலையிலும் முழுமை குறையாதது.
2] பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்துக்கு குணம், கருமம், தர்மம் ஆகியவை உள்ளன. அவ்வியல்புகளுக்கு அது கட்டுப்பட்டது. பிரம்மம் அத்தகைய அறியப்படும் இயல்புகள் கொண்ட ஒன்று அல்ல. அது நிர்ணயிக்க முடியாதது.
3] ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்தின் இயல்புகளான குணம், கருமம் ஆகியவற்றுடன் ஆத்மா இணைவதில்லை. ஆத்மா அதன் சாட்சியாகவே உள்ளது, அதன் பகுதியாக அல்ல. ஆகவே பருப்பொருள் ஆத்மாவுக்கு தொடர்பில்லாமல் வெளியே தனித்தியங்குகிறது.
4] ஒரு ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு. ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் நன்மை தீமை என்பதற்கு வேறுபாடே இல்லாமலாகிவிடும்
5] ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. எல்லா பருப்பொருட்களும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே குணம்-கருமம் ஆகியவைதானே இருக்கும்? ஆனால் இங்கே ஒவ்வொரு பருப்பொருளுக்கும் அதற்கான குணமும் செயலும் உள்ளது.

ஆத்மா என்பதை இன்றைய நவீன உளவியல் மற்றும் மொழியியல் பேசும் தன்னிலை [subjectivity] அல்லது சுயம் [self] அல்லது தன்னுணர்வு [Ego] எனப் பொருள்கொள்ளலாம். பருப்பிரபஞ்சம் என்பது புற எதார்த்தம் [ External reality] அல்லது பொருள் [Matter]. பிரம்மம் என்பது பிரபஞ்ச ஒழுங்கு [cosmic order]அல்லது பிரபஞ்ச மையக்கருத்து [cosmic idea] அல்லது பிரபஞ்ச மனம் [cosmic mind]

பரம்பொருளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவு என்ன?பரமாத்மா என்பதும் ஜீவாத்மா என்பதும் வேறு வேறு என துவைதம் கூறுகிறது. இரண்டும் வேறல்ல, ஒன்றுதான் என்கிறது அத்வைதம்.

References
Introduction of Vedanta by P.Nagarajrao, 1960

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

ADVERTISEMENT
ADVERTISEMENT