வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

மத அரசியல்-33: சமண திருப்பதிகள்-2

By C.P.சரவணன்| DIN | Published: 26th November 2018 07:29 PM

 

கொலியனூர்: (கோய்லனூர் என வழங்கும்) விழுப்புரம் தாலுகாவில் விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே 4 மைலில் உள்ளது. கிலமாய்ப்போன சமணக் கோயில் இங்கு உண்டு. இங்குச் சாசனங்களும் காணப்படுகின்றன.114 கோலியபுரநல்லூர் என்பது இதன் பழைய பெயர். ‘ஸ்வஸ்தி ஸ்ரீ நயினார் தேவர் பெருமானார் ஸ்ரீ கோயில் திருவிருப்புக் கல்பணி இடையாறன் திருமறுமார்பன் வணிகபுரந்தரன் திருப்பணி’ என்று ஒரு சாசனம் காணப்படுகின்றது, ‘‘காளயுக்திu ஆனிமீ 10உ ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர ஆருவ அசுரநாராயண தியாக சமுத்திர இம்மடி தொராத வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான நல்ல தம்பி முதலியார் பெரிய தம்பியார் கொலியாபுர நல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் பூசைத் திருப்பணிக்குப் பூருவமாக வடக்கு வாசலில் மேற்கு உள்ள விசயராசபுரத்து எல்லைக்கு இப்பால் உள்ள நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் தடவிட்டுச் சந்திராதித்த வரையும் நடத்த சீமை பல பட்டடையும் கல்வெட்டிக் குடுத்த தன்மத்துக்கு அகுதம் நினைத்தவன் கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திலும் பிராமணரைக் கொன்ற பாவத்திலும் போகக்கடவன்,’ என்று ஒரு சாசனம் கூறுகிறது.

ஜினசிந்தாமணி நல்லூர்: விருத்தாசலம் தாலுகா. இவ்வூர்ப் பெயரே இது ஒரு சமண ஊர் என்பதைச் தெரிவிக்கிறது.

வேடூர்: விழுப்புரத்திற்குக் கிழக்கே 11 மைலில் உள்ளது இங்குள்ள சமணக் கோயில் இப்போதும் பூசிக்கப்படுகிறது.118

எள்ளானாசூர்: திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்குத் தெற்கே 161/2 மைலில் உள்ளது. ஒரு பழைய சமணர் கோயில் இங்கு உள்ளது.

செஞ்சி: செஞ்சிக் கோட்டைக்கு அருகில் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. (Annual Report of Arch Dept. Southern Circle Madras. 1912-13. P.7)

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

உறையூர்: இதனை ‘உறந்தை’, ‘கோழியூர்’ என்றும் கூறுவர். இது சோழ அரசரின் தலை நகரமாக இருந்தது. இவ்வூரில் அருகக்கடவுளின் கோயிலும் சமண முனிவர்களும் இருந்தனர் என்றும், கோவலன் கண்ணகியருடன் மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி, இவ்வூரில் தங்கி அருகக்கடவுளையும் முனிவரையும் வணங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது120. இதனால், கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படுகிறது. நீலகேசி என்னும் நூலிலும், இவ்வூரில் சமணக் கோயில் இருந்த செய்தி கூறப்படுகின்றது. உறையூரிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். இவ்வூரைச் சமணர் தமது மந்திர வலிமையினால் அழித்துவிட்டார்கள் என்று சைவ சமய நூலாகிய தக்கயாகப்பரணி உரையில் கூறப்பட்டுள்ளது122. சோழ அரசன்மேல் சினங் கொண்ட சிவ்பெருமான், மண் மழை பொழியச் செய்து உறையூரை அழித்தார் என்று பிற்காலத்தில் எழுதப்பட்ட செவ்வந்திப் புராணம் என்னும் மற்றொரு சைவ நூல் கூறுகிறது123. இதனை அழித்தது சமணர் ஆயினும் ஆகுக; சைவர் ஆயினும் ஆகுக; இவ்வூர் பிற்காலத்தில் மண்மாரியால் அழிக்கப்பட்டதென்பது தெரிகிறது. இவ்வூர் அழிந்தபிறகு, திருச்சிராபள்ளி சோழரின் தலைநகராயிற்று என்பர்.

வெள்ளனூர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வயலில் கல்லினால் அமைக்கப்பட்ட சமணத் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன; (Arch. Rep. 1909-1910).

பழநாகப்பள்ளி: கரூர் தாலுகா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழ வேந்தர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், பழநாகப்பள்ளிக் கோயிலுக்குத் திருவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில் குறிக்கப்பட்ட பழநாகப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

அமுதமொழிப் பெரும்பள்ளி: திருச்சி தாலுகா அன்பில் என்னும் ஊரில் உள்ள சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசசோழ தேவரது 19 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், ‘திருவிடைக்குடி அமுது மொழிப் பெரும்பள்ளி’ என்னும் சமணக் கோவில் குறிப்பிடப்பட்டள்ளது.

புலிவல்லம்: திருச்சி தாலுகா திருப்பாலைத் துறை தாருகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனங்களில், ‘புலிவல்லத்து ஊரிடைப் பள்ளிச்சந்தம்’ கூறப்படுகிறது126. இதனால், சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இங்கிருந்தது அறியப்படும்.

அமண்குடி: திருச்சி தாலுகா திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் சாசனம், மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், அமண்குடி குறிக்கப்பட்டுள்ளது. ஷ அரசனது 23 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் ‘உறையூர் கூற்றத்து அமண்குடி’ யைக் கூறுகின்றது. இப்பெயரினால் இங்குச் சமணர் இருந்தது அறியப்படும். அமணர் எனினும் சமணர் எனினும் ஒன்றே.

பழைய சங்கடம்: குளித்தலை தாலுகாவில் உள்ள இப் பழைய சங்கடம், மகாதானபுரத்தின் ஒரு பகுதி. இங்குச் சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன. இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர்.

சீயாலம்: குளித்தலை தாலுகா சீயாலத்தில் ‘சுண்டக்காபாறை’ என்னும் குன்றில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

குத்தாலம்: தென்காசி தாலுகாவில் உள்ள குத்தாலம் என்னும் இடத்தில் ‘பரதேசிப் பொடவு’ என்னும் குன்றும் குகையும் உள்ளன. இங்கும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன.

வீரப்பட்டி: திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குப் போகிற பாதையின் இடதுபுறத்தில் உள்ள இந்த ஊருக்கருகில் அன்னவாசல் என்னும் இடத்தில் ஒரு வயலில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் காணப்படுகிறது.

ஜம்புகேஸ்வரம்: திருச்சி தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள, இராச கேசரிவர்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனத்தில், ‘கவிராஜப் பெரும்பள்ளி,’ என்னும் சமணக் கோயில் கூறப்படுகிறது.

திருமலைவாடி: இங்குக் குந்தவைப் பிராட்டியார், ஒரு சமணக் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது. (S.I.I. Vol.I.67&68) இந்த அரசியார் வடஆர்க்காடு மாவட்டம் போளூரிலும், தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் சமணக் கோயில்களைக் கட்டியுள்ளார்.

பெரியம்மா பாளையம்: பெரம்பலூர் தாலுகா பெரம்பலூருக்கு வடகிழக்கே 14 மைல். இக் கிராமத்தின் அருகில் பெரிய சாலை வெள்ளாற்றைக் கடக்கிற இடத்தில் ஒரு சமணத் திருவுருவம் ஆற்றங்கரை மணலினால் மூடுண்டு கிடக்கிறது. இவ் வுருவத்தின் தலையும் தோள்களும் வெளியே தெரிகின்றன.

அம்பாபுரம்: இக் கிராமத்துக்கு விக்ரமம் என்னும் பெயரும் உண்டு. உடையார் பாளையம் தாலுகாவில் உடையார் பாளையத்திலிருந்து தென்மேற்கில் 11 மைலில் உள்ளது. இங்குச் சில சமண உருவங்கள் இருக்கின்றன.

ஜயங்கொண்ட சோழபுரம்: உடையார் பாளையம் தாலுகா உடையார் பாளையத்திலிருந்து வடமேற்கே 5 மைலில் உள்ளது. இங்கு ஏரிக்கரையில் ஒன்றும், ஒரு தெருவில் ஒன்றும் ஆக இரண்டு சமணத் திருவுருங்கள் உள்ளன. ஏரிக்கரையிலிருக்கிற திருவுருத் திற்கு இந் நகர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பூசை செய்கிறார்கள்.

வண்ணம்: உண்ணம் என்றும் கூறுவர். உடையார் பாளையத்துக்குத் தென்மேற்கில் 19 மைலில் உள்ளது. கீழ்ப்பளூருக்குத் தெற்கில் 2 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.

லால்குடி: திருச்சி தாலுகா திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே 11 மைல். இவ்வூருக்கருகில், புள்ளம்பாடிக்குப் போகிற சாலையில் இடது பக்கத்தில் ஒரு வயலியே ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.

மகாதானபுரம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்கு மேற்கே 13 மைலில் உள்ளது. இது கங்கைகொண்ட சோழபுரத்தின் (இதற்குப் பழைய செங்கடம் என்றும் பெயர்.) ஒரு பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் பல சமண உருவங்கள் காணப்படுகின்றன.

சிவாயம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்குத் தெற்கே 5 மைல். இங்கு ஒரு சமண உருவம் காணப்படுகிறது.

சுண்டைக்காப்பாறை: குளித்தலைக்குத் தெற்கே 3 மைல். இக்கிராமத்தில் ஒரு பாறையின் மேல் ஒரு சமணத் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.

வெட்டுவாந்தலை: குளித்தலைக்கு வடமேற்கே 9 மைல். இங்கே மூன்று சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன.

புதுக்கோட்டை

அம்மா சத்திரம்: அம்மா சத்திரத்துக்கு மேற்கே பள்ளிக்குளம் என்னும் ஒரு குளம் உண்டு. பள்ளிக்குளம் என்றால், சமணப்பள்ளிக்குரிய குளம் என்பது பொருள். இக் குளத்திற்கு மேற்கே 25 அடி உயரமுள்ள கற்பாறை மீது அருகக் கடவுளின் திருவுருவம் முக்குடையுடன் காணப்படுகிறது. இங்கு இரண்டு கல்வெட்டுச் சாசனகள் உள்ளன. இவற்றிலிருந்து இக் கற்பாறைக்குத் திருப்பள்ளிமலை என்னும் பெயர் உண்டென்று தெரிகிறது. இத்திருப்பள்ளி மலைக்குரிய குளந்தான் மேற்கூறிய பள்ளிக்குளம். இப் பள்ளிக்குளத்துக்கருகில் வேறு சில சமணத் திருவுருவங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

ஆளுருட்டி மலை: அம்மா சத்திரத்துக்கு அருகில் உள்ளது இங்குள்ள குன்றின்மேல் இரண்டு சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இம் மலையின் குடகுக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சாசனத்தினால், இம் மலைக்குத் திருமான் மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறது. ‘சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு..........குலோத்துங்க சோழ பட்டணத்து பள்ளிச் சந்த.......உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார் பாரிசை........பெரியபள்ளி வயலில் நாயனார் திருமான்மலை யாழ்வார் பள்ளிச் சந்தமாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா,’ என்பது இச் சாசனத்தின் வாசகம்143. சிதைந்துள்ள வேறு சமணத் திருவுருவங் களும் இங்கு உள்ளன.

நாரத்தமலை: இப் பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைபாடி கொண்ட குலோத்துங்க சோழ நகரத்து மலை என்று பழைய சாசனம் கூறுகின்றது. பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குள்ள சமணக் கடவுளைத் திருமான்மலை அருகத் தேவர் என்று கூறுகின்றது144. இந்த மலையின் ஒரு பகுதிக்குத் திருப்பள்ளி மலை என்றும் மற்றொரு பகுதிக்குத் தென்திருப்பள்ளி மலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப்பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் இருந்தன. இம் மடங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மடத்துக்கு இரண்டு பங்கும் சிறிய மடத்துக்கு ஒரு பங்கும் வழங்கப்பட்டன. இச்செய்திகள் பொம்மைப்பாறையின் மேற்புரத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின்றன. இந்தச் சாசனம் சகம் 675 இல் (கி.பி. 753 இல்) எழுதப்பட்டது. அது வருமாறு:

”ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் தென் திருப்பள்ளிமலை உடையார்களுக்கும் திருப்பள்ளி மலை நாயகர்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்ட நித்த நிபந்தங்களுக்குத் தென் சிறுவாயில் நாட்டுக் கொற்றமங்கலம் நான்கெல்லைக் குட்பட்ட நீர் நிலமும் நஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்டமுங் குளமும் தருவதான அச்சும் காரிய வாராட்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சுபிலி சந்திவிக்கிரணப் பேறு வாசற் பேறு இலாஞ்சினைப்பேறு தறியிறை செக்கிறைத் தட்டொலிப் பாட்டமும் இடையவர் வரியும் இன வரியும் பொன் வரியும் மற்றுமெப் பெயர்ப் பட்டனவும் உட்பட ஆறாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாகத் திருப்பள்ளிமலையாழ்வார்க்கு இருகூறும் தென் திருப்பள்ளிமலை நாயகர்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ் வோலை பிடிபாடாக் கொண்டு புரவிலும் வரியிலும் கழிப்பித்துச் சந்திராதித்தவற் செல்வதாக. இரண்டு திருமலையிலும் கல்லிலும் வெட்டி நான்கெல்லையிலும் ஸ்ரீ முக்குடைக் கல்லும் நாட்டிக்கொள்க - இவை பழந்திபராய னெழுத்து - ஆண்டு 6075. இவை வில்வவராயனெழுத்து - இவை தென்னவதரையனெழுத்து.

பள்ளிவயல்: நார்த்தலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள சாசனம், ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 27 ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. இதில், ‘இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல்’ நிலம் குறிக்கப்பட்டுள்ளது. அன்றியும், ‘இவ்வூர்த் திருமானைமலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா’ என்றும் கூறுகின்றது. இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353 இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், ‘கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம்பூருடைய நயினார்’ பள்ளிவயல்நிலம் இரண்டுமா’ என்று கூறுகிறது. இவற்றால் இங்குப் பண்டைக் காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப் படுகிறது.

சமணர்திடல்: இதற்குச் சமணர் குண்டு என்றும் வேறு பெயர் உண்டு. காயாப்பட்டியில் உள்ள வெண்ணாவிக்குளத்தின் புறகரையில் உள்ளது. இங்குள்ள கல் ஒன்றில், ‘ஸ்வஸ்திஸ்ரீ. திருவெண்ணாயில் ஐஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளித் திருவாய்த்தல் மாடம் சயவீரப் பேரிளமையான்’என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளி என்னும் சமண மடமும் கோயிலும் இங்கு இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

சடையாபாறை: இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது. இச் சாசனத்திலிருந்து, பெருநற்கிள்ளி சோழப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இங்கு இருந்த செய்தி அறியப்படுகிறது. ‘‘கோனேரின்மை கொண்டான் தென்கவி நாட்டாற்குத் தங்கள் நாட்டுக் கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளியாழ்வாற்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இவ்வூர்ப்பள்ளி உடையார்கள் காணியான நிலம் முக்கால் குடுத்தோம். இந்நாட்டுச் சடையார்மலைமேல் தென்கவி நாட்டுப் பெரும்பள்ளி ஆழ்வாற்கு இவ்வூர்.............’’ என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது.

தேனிமலை: இதற்குத் தேனூர்மலை என்றும் பெயர் உண்டு. இங்குச் சில சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன. இம்மலையில் மலையத்துவஜன் என்னும் சமணத் துறவி தவம் செய்வதைக் கண்டு இருக்குவேள் என்னும் கொடும்பாளூர்ச் சிற்றரசன் நிலம் தானம் செய்த செய்தியை இங்குள்ள சாசனம் கூறுகின்றது. அது கீழ்வருமாறு:- ‘ஸ்வஸ்திஸ்ரீ மலயத்துவஜன் தேனூர் மலையில் தவஞ் செய்யக் கண்டு இருக்குவேள் சந்தித்து அவிப்புறஞ் செய்த பள்ளிச்சந்தம் நாலேகால். இவ்வறங்காத்தான் அடி நீளென் சென்னியன.’

இங்குள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்றின்கீழ், ‘ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீவல்ல உதன செருவொட்டி செய்வித்த திருமேனி’ என்று எழுதப்பட்டுள்ளது.

மலையகோயில்: இங்குள்ள இடதுபுறப் பாறையில் உள்ள ஒரு சாசனம் குணசேனர் என்னும் சமணப் பெரியாரைக் குறிக்கிறது. கற்பாறையில் குடைந்தமைக்கப்பட்ட இரண்டு கோயில்கள் இங்கு உள்ளன.


தஞ்சாவூர் மாவட்டம்

திருவாரூர்: இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அக்காலத்தில் இவ்வூர்த்திருக்குளம் மிகச் சிறியதாக இருந்தது. அச்சிறு குளத்தைச் சூழ்ந்து சமணர்களின் பள்ளிகளும், மடங்களும், நிலங்களும் இருந்தன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் (அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர்) இவ்வூரில் சைவச் சமணர் கலகம் உண்டாகி இங்கிருந்த சமணர்களைச் சைவர் துரத்தினர். தண்டி அடிகள், நமிநந்தியடிகள் என்னும் சைவநாயன்மார்கள் காலத்தில் இக்கலகம் நிகழ்ந்ததாகப் பெரிய புராணம் கூறுகின்றது.161 இக்கலகத்தின் பயனாக இச்சிறு குளத்தைச் சூழ்ந்திருந்த சமணர்களின் கட்டிடங்களும் நிலங்களும் இடித்துப் பறிக்கப்பட்டுப் பெரிய குளமாகத் தோண்டப்பட்டது. இப்போது இக்குளம் பதினெட்டு ஏக்கர் உள்ள பெரிய இடப்பரப்பைக் கொண்டுள்ளது. இக் குளத்தின் பெரும்பகுதி பண்டைக் காலத்தில் சமணரின் நிலமாக இருந்தது என்பது அறியத் தக்கது.

செந்தலை: தஞ்சைத் தாலுகாவில் உள்ள இவ்வூர் சந்திரலேகை என்று பண்டைக் காலத்தில் பேர் பெற்றிருந்தது. இங்குள்ள சுந்தரேச்சரர் என்னும் சிவன் கோயில் வெளிக் கோபுர வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள சாசனத்தால் இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும். அச் சாசனப் பகுதி இது: ‘கோப்பர கேசரி பன்மர்க்கு யாண்டு 12-வது கா...................ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்து. வடகவிர................. பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான் கொண்டு கடவ.’162 மற்றொரு சாசனம், ‘நங்கை ஒளி மாதியார் தாயார் நக்க நீலி’163 என்பவர் பொன் தானம் செய்ததைக் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது இடிந்து கிடக்கும் ஒரு கோயிலின் கற்றூண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின் சிறிய திருவுருவம் இருந்ததைப் பார்த்ததாக என் நண்பர் ஒருவர் கூறுகின்றார்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் மருந்தீச்சுரர் கோயிலின் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவர் 3-உடைய II-ஆவது ஆண்டில் (கி.பி. 1227. மே. 15). எழுதப்பட்ட சாசனத்தில், சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ‘பள்ளிச்சந்தம்’. குறிக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வூருக்கருகில் இருந்த சாத்தமங்கலத்தில் சமணக் கோயிலுக் குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது. ஆதலால், பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும்.

திருநாகேச்சுரம்: கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம். ‘தென்கரைத் திரைமூர் நாட்டில்,’ இருந்த ‘மிலாடுடையார் பள்ளி,’ என்னும் சமணக் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்த மிலாடுடையார் பள்ளி, திருக்கோவலூரில் இருந்த மிலாட அரசனால் கட்டப் பட்டிருக்க வேண்டும். முற்காலத்தில் இங்கு ஒரு சமணக் கோயில் இடிந்து கிடந்ததென்றும், அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேச்சுரத்துச் சைவக்கோயில் கட்டப்பட்ட தென்றும் இவ்வூரார் கூறுவர். அம்மன் கோயில் மண்டபத் தூண்களில் இப்போதும் சமண உருவங்கள் காணப்படுகின்றன. இவை, இவ்வூரார் கூறுவதை உறுதிப் படுத்துகின்றன. இவ்வூருக்கு அருகில் உள்ள வயல்களில் சமண உருவங்கள் காணப் படுகின்றன.165 திருநாகேச்சுரத்திற்குப் பண்டைக்காலத்தில் ‘குமார மார்த்தாண்ட புரம்,’ என்று பெயர் வழங்கியதென்றும், இங்கிருந்த மிலாடுடையார் பள்ளியில் மண்டபத்தையும் கோபுரத்தையும் ஒரு வணிகர் கட்டினார் என்றும் இராஜகேசரி வர்மன் என்னும் சோழனது 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகின்றது.

திருப்புகலூர் (வர்த்தமானீச்சுரம்): இவ்வூர் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. இங்கு வர்த்த மானீச்சுரர் கோயில் உண்டு. இக் கோயில் இப்போது சைவக் கோயிலாக உள்ளது. ஆனால், இக்கோயிலின் பெயரைக்கொண்ட இது பண்டைக் காலத்தில் சமணக் கோயிலாக இருந்தது என்பதை அறியலாம். ஸ்ரீவர்த்தமானர் (மகா வீரர்) இருபத்து நான்காவது தீர்த்தங்கரராவர். இச் சமணக் கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்டுச் சைவக் கோயிலாக்கப் பட்டது. அப்பரும் சம்பந்தரும் இக்கோயிலைப் பாடியுள்ளனர். இங்குச் சமணர் பண்டைக் காலத்தில் இருந்தனர்.

பழையாறை: இதனைப் ‘பழையாறு,’ ‘பழசை’, என்றுங் கூறுவர். பட்டீச்சுரத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. சோழ அரசர்களின் உறவினர் இங்கு வாழ்ந்திருந்தனர். இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், அப்பர் சுவாமி காலத்தில், இங்கே கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப்பட்ட செய்தியைப் பெரிய புராணம் கூறுகின்றது.166 167 கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலும் இங்குச் சமணரும் சமணக் கோயிலும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்கிருந்த சமணக் கோயிலில் எழுந்தருளியிருந்த அருகக்கடவுள்மீது இயற்றப்பட்ட இரண்டு செய்யுள்கள் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்திருந்த சோழ அரசன் இக் கோயிலுக்குச் சிறப்புச் செய்தான் என்பதும் விளங்குகின்றது. அச் செய்யுள் வருமாறு:

‘தாழி யோங்கு மலர்க் கண்ணவர் தண்ணடி
பாழி யோங்கு புனலார் பழை யாற்றுள்
காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
வாழி என்று வணங்க வினை சேரா.’

‘முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்

வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல்

விண்ணன்
செழுந் தண்பூம் பழசையுட் சிறந்தது நாளுஞ் செய
வெழுந்த சேதிகத் துள்ளிருந்த வண்ணலடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்து நாளுந் தொழத்
தொடர்ந்து நின்ற வல்வினை துறந்துபோ மாலரோ’

மருத்துவக்குடி: இவ்வூர், பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஐராவதீஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் 3 உடைய 16 ஆவது ஆண்டில் (கி.பி. 1194 இல்) எழுதப்பட்ட சாசனத்தில், ஜனநாதபுரம் என்னும் ஊரில் இருந்த சேதிகுல மாணிக்கப் பெரும்பள்ளி, கங்கருள சுந்தரப்பெரும்பள்ளி என்னும் இரண்டு சமணக் கோயில்கள் கூறப்படுகின்றன. இதனால், இவ்வூருக்கருகில் சமணரும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி அறியப்படும்.

திருவலஞ்சுழி: இது கும்பகோணம் தாலுகாவினுல் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலுக்கருகில் சில சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதனால், இவ்வூரில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

மன்னார்குடி: மன்னார்குடித் தாலுகாவின் தலைநகர். பண்டைக் காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருந்தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர். ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது. இங்குள்ள ராஜகோபால சுவாமி கோயில் துவஜஸ்தம்பம், ஜைனருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறபடியால் இஃது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.

தீபங்குடி: நன்னிலம் தாலுகாவில் உள்ளது. நன்னிலத்திற்குத் தென்மேற்கு 7 மைலில் உள்ளது. இதுவும் பழைய சமண ஊர். இங்கிருந்த ஜயங்கொண்டார் என்னும் சமணர் ‘தீபங்குடிப் பத்து,’ என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே ‘கலிங்கத்துப் பரணி,’ என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத் தீபங்குடியில் இப்போதும் சமணர் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகிறது. ‘அருமொழி தேவ வளநாட்டு இங்களநாட்டுப் பாலையூர்ப் பள்ளி,’ ‘அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்ட வளநாட்டுத் திரைமூர்நாட்டுப் பள்ளிச்சந்தம்,’ ‘திருவாலி நாட்டுக் குறுவாணியக்குடி பள்ளி,’ ‘உய்யக் கொண்ட வளநாட்டு அமண்குடி’என வரும் சாசனப் பகுதிகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

அமண்குடி: ‘சோழ மண்டலத்து உய்யக் கொண்ட வளநாட்டை’ச் சேர்ந்த வெண்ணாடில் அமண்குடி என்னும் ஊர் இருந்ததென்றும் இவ்வூர் பிற்காலத்தில் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றப்பட்டதென்றும் ஸ்ரீ இராசராச சோழரது சேனாபதியான கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம்மராயன் என்பவர் இவ்வூரில் வாழ்ந்திருந்தார் என்றும், தஞ்சை இராச ராசேச்சுரக் கோயில் கல்வெட் டெழுத்துக்கள் கூறுகின்றன.  இவ்வூர்ப் பெயரே இங்குச் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது.

கருந்திட்டைக் குடி: (கருந்தட்டான்குடி என்று வழங்குவர்) அங்குச் சமணர் முன்னாளில் சிறப்புற்றிருந்தனர். இப்போதும் இங்குச் சமணர் உள்ளனர். சமண ஆலயமும் உண்டு.

குகூர்: இங்குக் குலோத்துங்கன் I காலத்தில் குலோத்துங்கன் பெயரால் பெரும் பள்ளி கட்டப்பட்டது.

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

More from the section

மத அரசியல்-57: சிவன்
மத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை
மத அரசியல்-55: அய்யாவழி
மத அரசியல்-54: விசிஸ்டாத்வைதம்
மத அரசியல்-53: துவைதம்