வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

மத அரசியல்-32: சமணத் திருப்பதிகள்-1

By C.P.சரவணன்| DIN | Published: 18th November 2018 02:44 PM

 

தமிழ்நாட்டிலே சமண சமயம் பண்டைக் காலத்திலே நன்கு செல்வாக்குப் பெற்றுப் பரவியிருந்தது. கிராமங்களிலும் நகரங்களிலும் சமணக் கோயில்கள் இருந்தன. இப்போது, சமண சமயம் பெரிதும் மறைந்துவிட்டது. ஆகவே, அக்கோயில்களும் கிராமங்களும் இப்போது பெரிதும் மறைந்துவிட்டன. மறைந்துபோனவையும் மறையாமல் உள்ளவையும் ஆன சமணக் கோயில்களையும் ஊர்களையும் பற்றிப்  பார்போம். 

1. சென்னை மாவட்டம்

மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக் காலத்தில் சமணக்கோயில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக் கோயிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோயிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பது. திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். 

2. செங்கற்பட்டு மாவட்டம்

உத்தரமேரூர்: இந்த ஊர் சுந்தரவரதப்பெருமாள் கோயிலில் ஆதிநாதர் (இருஷபதேவர்) திருவுருவம் இருக்கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.

ஆநந்தமங்கலம்: ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைலில் உள்ளது. இங்குக் கற்பாறையில் சமணத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது ஆனந்த தீர்த்தங்கரரின் உருவம். இத் தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறது. ஆனந்த தீர்த்தங்கரருக்கு ஒரு யக்ஷ¤குடை பிடிப்பது போன்றும் மற்றொரு யக்ஷ¤ சாமரை வீசுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மதிரை கொண்ட பரகேசரிவர் மனுடைய (பராந்தகன் 1) 38 ஆவது ஆண்டில் (கி.பி. 945 இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உளது. இங்கு ஜினகிரிப்பள்ளி இருந்ததென்றும் வினபாசுரகுருவடிகள் மாணவர் வர்த்தமானப் பெரியடிகள் என்பவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவு கொடுக்கும்பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம், செய்ததையும் இச்சாசனம் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது சமணர் இலர். சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத்திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.38

சிறுவாக்கம்: இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள சாசனத்தினால், இச் சினகரத்துக்கு ஸ்ரீகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும், தெரிகின்றன39.

பெரிய காஞ்சிபுரம்: இங்குள்ள ஒரு தோட்டத்தில் சமணத் திருவுருவம் ஒன்று இருக்கிறது.40 பெரிய காஞ்சி புரத்துக்குப் போகும் பாதையில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது41 காமாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது42 யதோத்காரிபெருமாள் கோயில் அருகில் ஒரு சமண வுருவம் இருக்கிறது43.

மாகறல்: இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோயில் ஒன்று உளது. இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன44. இவ்வூர் திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது45. இங்குள்ள ஆதிபட்டாரகர் கோயில் இப்போது கிலமாய்க் கிடக்கிறது. இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று என் நண்பர் ஒருவர்க்குக் கிடைத்திருக்கிறது.

ஆர்ப்பாக்கம்: மாகறலுக்கு ஒரு மைலில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோயில் உள்ளது46.

விஷார்: இதுவும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

குன்னத்தூதர் (ஸ்ரீபெரும்பூதூர்த் தாலுகா): இங்குள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனம் பெரிய நாட்டுப் பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப் பள்ளியாக இருக்கக்கூடும். இந்தத் தாலுகாவில் அம்மணப்பாக்கம் என்னும் இனாம் கிராமம் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்குச் சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.

கீரைப்பாக்கம் (செங்கல்பட்டுத் தாலுகா): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே தேசவல்லப ஜினாலயம் என்னும் சமணக் கோயிலைக் குமிழிகணத்து யாபனீய சங்கத்தைச் சேர்ந்த மகாவீரகுருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும், சமண சங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம் கூறுகின்றது.47

திருப்பருத்திக்குன்றம்: ஜினகாஞ்சி என்பது இதுவே. இங்கு எழுந்தருளியுள்ள அருகக் கடவுளுக்குத் திரை லோக்கியநாதர் என்றும், திருப்பருத்திக்குன்றாழ்வார் என்றும் சாசனங்களில் பெயர் கூறப்படுகின்றன. மல்லிசேன வாமனாசாரியார் மாணவர் பரவாதிமல்லர் புஷ்ப சேனவாமனார்யர் என்னும் முனிவர் இக்கோயில் கோபுரத்தைக் கட்டினார் என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகின்றது.48 வாமனாசாரியார் மல்லிசேனாசாரியாரை இன்னொரு சாசனம் குறிக்கின்றது.49 இக்கோயிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. மல்லிசேனவாமனாசாரியார் ‘மேருமந்தர புராணத்’ தையும் நீலகேசி என்னும் நூலுக்குச் சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றியுள்ளார். (இந் நூல்கள் இரண்டும் பிரபல சமணப் பெரியாராகிய ராவ்சாகிப் அ சக்கரவர்த்தி நயினார் க.மு., இ.கல்.ஆ.பெ. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன.) 2000 குழிநிலம் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகின்றது.50 விஷார் என்னும் கிராமத்தார் விக்கிரம சோழதேவரது 13 ஆவது ஆண்டில் இக்கோயிலுக்கு நிலம் விற்ற செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது.51 கைதடுப்பூர் கிராமச் சபையார் ‘திருப்பருத்திக்குன்றத்து ரிஷிசமுதாயத்தாருக்கு’க் கிணறு தோண்டிக்கொள்ள நிலம் தானம் செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறுகின்றது. 

சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது. இத்தாலுகா திருஆலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்படுகிறது.54 இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும். செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம் பாக்கம் என்னும் கிராமமும், பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமணஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர்த் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இங்குச் சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.

புழல்: சென்னைக்கு வடமேற்கே 9 மைலில் புழல் என்னும் கிராமம் உண்டு. இங்கு ரிஷப தேவருக்கு (ஆதிநாதபகவானுக்கு) ஒரு கோயில் உண்டு. இதனால் புழல் கிராமம் பண்டைக்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டுச் சிற்ப முறையில் அமைந்திருந்த இந்தக் கோயிலின் கோபுரம் பழுதாய்விட்டபடியால், சென்னையிலுள்ள சில வடநாட்டுச் சமணர் இக்கோயிலை வடநாட்டுச் சிற்ப முறையில் புதுப்பித்துள்ளனர். இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

வில்லிவாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு அருகில் உள்ள இரயில் நிலையம் இவ்வூர். இவ்வூர்த் தெருவில், வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத்திருவுருவம் உண்டு.56

பெருநகர்: (பென்னகர்) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா, மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குக் கிழக்கே சமணக் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள் கோயிலைக் கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.57

3. வடஆர்க்காடு மாவட்டம்

கச்சூர்: காளாஸ்தி ஜமீன், திருவள்ளூருக்கு வடக்கே 12 மைலில் உள்ளது. கச்சூர் மாதரபாக்கம், இங்கு ஒரு சமண பஸ்தி உண்டு.58

நம்பாக்கம்: காளாஸ்தி ஜமீன். திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 9 மைலில் உள்ளது. இங்கு முன்பு, ஒரு சமணக் கோயில் இருந்ததென்றும், பிற்காலத்தில் அக்கோயில் சைவக் கோயிலாக மாற்றப்பட்ட தென்றும் கூறப்படுகிறது. இச் சைவக் கோயிலுக்கு மண்டீஸ்வர சுவாமி கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.59

காவனூரு: குடியாத்தம் தாலுகா, குடியாத்தத்திலிருந்து கிழக்கே 8 மைல். இந்தக் கிராமத்தில் சமணத் திருவுருவங்கள் உள்ளன.60

குகைநல்லூர்: குடியாத்தம் தாலுகா. திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 மைல். இங்குச் சமண உருவங்கள் உள்ளன.61

கோழமூர்: குடியாத்தம் தாலுகா குடியாத்தத்திலிருந்து கிழக்கே 3 மைல் விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு 3 மைல். இங்குச் சமணச்சின்னங்கள் காணப்படுகின்றன.62

சென்னம்பட்டு: குடியாத்தம் தாலுகா. ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 5 மைல். இக்கிராமத்தின் தெற்கே 100 கெஜ தூரத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஓர் உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக் கோயிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.63

திருமணி: விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல். இங்குச் சமண உருவங்கள் காணப்படுகின்றன.64

பெருங்கங்கி: வாலாஜாபேட்டை தாலுகா. வாலாஜா பேட்டைக்கு வடக்கே 9 மைல். முன்பு இது சமணரின் முக்கிய கிராமம். இங்கு ஏரிக்கரையிலும், கலிங்கின் அருகிலும், கிராமத்தில் பெரிய மரத்தடியிலும் சமண உருவங்கள் உள்ளன.65

சேவூர்: ஆரணி ஜாகீர். ஆரணியிலிருந்து வடமேற்கு 2 மைல். இங்கு ஒரு பழைய சமணக் கோயில் உண்டு.66

திருமலை: (வைகாவூர் திருமலை) போளூர் தாலுகா. போளூரிலிருந்து வடகிழக்கே 6 மைல். வடமாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல். இங்குள்ள குன்றின்மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாறையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு மிகக் கம்பீரமாகக் காணப்படுகின்றது. 161/2 அடி உயரம். குந்தவை ஜினாலயம் என்று சாசனங்களில் இதற்குப் பழைய பெயர் கூறப்படுகின்றது. சோழ அரசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்குன்றில், இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர் காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றில் சமவசரணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்படுகிறது. பிற்காலத்து. ஓவியங்களும் இங்குக் காணப்படுகின்றன. பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

விடால்: வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குகைகளின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும், மற்றொன்றை இராசகேசரி வர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியாதாக இங்குள்ள கல் எழுத்துக்கள் கூறுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கியிருந்தனர். ‘குணகீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கனக வீரக் குரத்தியாரையும் அவர் வழிமாணாக்கியாரையும்’ பாதுகாத்த செய்தி இங்குள்ள கல் எழுத்துக் கூறுகின்றது. இவ்வூருக்குச் ‘சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்திமங்கலம்’ என்று கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது67

புனதாகை: (பூனாவதி அல்லது திருவத்தூர்) வட ஆர்க்காடு ஜில்லா செய்யாறு தாலுகாவில் ஆனக்காவூருக்கு ஒரு கல் தொலைவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக் கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக் கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறாத சைவர் அக்காலத்தில் ஆங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற. அவர் பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக் கோயில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டுங் காணப்படுகிறது. இக் கோயிற் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவக் கோயிலைக் கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது68 இவ்வூர்ச் சமணக்கோயில் பாழ்படவே, இக்கோயிலைச் சேர்ந்த இரண்டு சமணத் திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும், இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டையில் இக்கோயில் செம்புக் கதவுகளும் ஏனைய பொருள்களும் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகின்றன.69 இவ்வூர் வயலில் கிடந்த ஒரு சமணத் திருவுருவத்தை அரசாங்கத்தார் கொண்டுபோய்ச் செய்யாறு தாலுகா ஆபீசில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தல புராணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படுகிறது.

திருவோத்தூர்: இது முற்காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்த நகரம். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இங்குச் சைவசமணர் கலகம் ஏற்பட்டு, சமணர் துரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த் தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயிலில் சமணர் துரத்தப்பட்ட செய்தி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பர்.71 இவ்வூருக்கு அருகில் உள்ள புனாவதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோயில் இருந்ததென்றும் அக்கோயில்களைக் கொண்டுவந்து திருவோத்தூர்ச் சிவன்கோயில் கட்டப்பட்டதென்றும் கூறுகின்றனர். புனாவதி கிராமத்தின் வெட்டவெளியில் இரண்டு சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதற் கருகில் உள்ள குட்டையில் சமணக் கோயிலின் செப்புக் கதவுகள் முதலியன புதைந்துகிடக்கின்றன என்று கூறப்படுகிறது.72

திருப்பனம்பூர்: காஞ்சிபுரத்துக்குப் பத்து மைலில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இமசீதளமகாராசன் அவையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வெற்றிபெற்ற அகளங்க ஆசாரியார் என்னும் சமணசமயகுரு இக்கிராமத்தில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக் கோயிலுக்கு முனிகிரி ஆலயம் என்றும் பெயர். இது இம் முனிவரை ஞாபகப்படுத்தும் பொருட்டு ஏற்பட்ட பெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில் இவ்வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக் கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு. இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவருகிறது. இக்கிராமத்தில் பழைமையும் புதுமையுமான இரண்டு சமணக்கோயில்கள் உண்டு. இங்குச் சமணர் இப்போதும் உள்ளனர். இதற்குக் கரந்தை என்றும் பெயர் வழங்கப் படுகிறது. இக்கரந்தைக் கோயிலில் இடிந்து சிதைந்து போன பழைய கோயில் ஒன்றிருக்கிறது இக்கோயில் கட்டிடம் சமவசரணம் போன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. 

பூண்டி: வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டைத் தாலுகாவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான இவ்வூரில் பொன்னிவன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டு. இக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டெழுத்து அழகிய ஆசிரியப்பாவினால் அமைந்தது. இக்கோயில் வரலாற்றினைக் கூறுகின்றது. அதில், ‘செயங்கொண்ட சோழ மண்டலந்தன்னில், பயன்படுசோலைப் பல்குன்றக் கோட்டத்து’ வேண்டிய சுரக்கும் மேயூர் நாட்டுப், பூண்டி என்பது காண்டகு திருநகர்’ என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப் பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோயிலை அமைத்து, வீரவீரசினாலயம் என்னும் பெயரிட்டு, கிராமங்களையும் இறையிலியாகக் கொடுத்தான் என்று மேற்படி ஆசிரியப்பா கூறுகின்றது.

வள்ளிமலை: வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம் இக் கிராமத்தில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாயமைந்த ஒரு குகை உண்டு. இதன் பக்கத்தில் கற்பாறையில் இரண்டு. தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக்களினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகின்றது. மேல் கூறப்பட்ட சமண உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, ‘அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார்’ என்றும், இன்னோர் எழுத்து, ‘ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம்’ என்றும், மற்றோர் எழுத்து ‘பால சந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை; கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே’ என்றும் கூறுகின்றன.

இங்குள்ள சமண உருவங்களைக்கொண்டும் கல்லெழுத்தினால் அறியப்படும் பெயர்களைக் கொண்டும் இது சமணர்களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் இந்த மலையும் இந்தக் கிராமமும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது துணியப்படும்.74

பஞ்சபாண்டவ மலை: ஆர்க்காடு நகரத்துக்குத் தென் மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவ மலை என்னும் பெயருள்ள கற்பாறையான ஒரு குன்று உளது. இக்குன்றுக்குப் பஞ்சபாண்டவ மலை என்று பெயர் கூறப்பட்ட போதிலும் உண்மையில் பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதற்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் திருப்பாமலை என்பது. இப் பெயர் திருப்பான்மலை என்பதின் திரிபு. இந்த மலையின் கிழக்குப் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக் குகையில் ஏழு அறைகள் பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்கு மேலே ஒரு கற்பாறையில் சமண உருவம் ஒன்று தியானத்தில் அமர்ந்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. தென்புறத்தில் இயற்கையாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறு சுனையும் காணப்படுகின்றன. இக் குகையினுள் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடது கையில் சாமரை பிடித்துப் பீடத்தில் அமர்ந்திருப்பது போன்றும் இதன் வலது பக்கத்தில் ஓர் ஆண் உருவம் நின்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் அமர்ந்திருக்கும் பீடத்தின் முன் புறத்தில் குதிரைமேல் ஓர் ஆள் இருப்பது போன்றும், ஓர் ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிருப்பது போன்றும் காணப்படுகின்றன. இக் குகையின் வாயிற் புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.

‘நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது: நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்.’’

எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் ‘பொன் இயக்கி’ என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண் உருவம் இதில் குறிப்பிட்ட ‘பொன் இயக்கி’ யின உருவம் என்றும், அதன் பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப்படுகின்றன.

இந்த மலையில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத்தும் உண்டு. அது, கி.பி. 984இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட லாடராசன் வீர சோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில், இந்த மலை, ‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான் மலை’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த லாடராசன் வீரசோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோயிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக் கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு அவ்வரசன் ‘கூறகன்பாடி கற்பூர விலை’ யாயும், ‘அந்நியாயவால தண்ட இறையையும்’ இக் கோயிலுக்குப் ‘‘பள்ளிச் சந்தமாகக்’’ கொடுத்தான். இக் கல் எழுத்தின் கடைப்பகுதி, ‘இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார். இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்.................இத் தர்மத்தை ரக்ஷ¤ப்பான் பாத துளி என் தலை மேலன. அற மறவற்க. அறமல்லது துணையில்லை’ என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கூறகன்பாடி கிராமம் என்பது, பஞ்ச பாண்டவ மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள ‘கூறாம்பாடி’ என்னும் கிராமம் என்று கருதப்படுகின்றது.

இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக் குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச் சந்தம் என்னும் பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்ததென்பதை அணுவளவும் ஐயமின்றித் தெரிவிக்கின்றன. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமண முனிவர் தவம் புரிந்திருந்தனர் என்பதற்கு இங்குள்ள குகை சான்று பகர்கின்றது.75

பொன்னூர்: இது வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஊர். இதற்கு அழகிய சோழ நல்லூர் என்னும் பெயரும் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்போதுள்ள சமணர்களின் முக்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூரில் ஆதிநாதர் கோயில் இருக்கின்றது. இக் கோயிலில் உள்ள ஜ்வாலாமாலினி அம்மன் (இயக்கி) பேர்போனது.- இவ்வூருக்கு 2 மைல் தூரத்தில் உள்ள பொன்னூர் மலை என்னும் ஒரு குன்றில் ஏலாசாரியார் என்பவரின் திருப்பாதம் இருக்கின்றது. இந்த ஏலாசாரியார் என்பவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று சமணர்கள் கூறுகிறார்கள். இந்த மலையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள ஏலாசாரியரின் திருப்பாதத்திற்கு ஆண்டுதோறும் சமணர்கள் பூசை முதலிய சிறப்புச் செய்து வருகிறார்கள். பொன்னூரைச் சுவர்ணபுரி என்றும் கூறுகிறார்கள்.

தேசூர்: வந்தவாசி தாலுகா. வந்தவாசிக்குத் தென் மேற்கு 10 மைல். இங்குச் சமணர் உள்ளனர். 

தெள்ளாறு: வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணக் கோயில் உண்டு. 
திரக்கோல்: வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 81/2 மைல். இங்குள்ள குன்றின்மேலே மூன்று சமணக்கோயில்களும் மூன்று குகைகளும் உள்ளன. 

வெண்குன்றம்: வந்தவாசிக்கு வடக்கே மூன்று மைல். இங்குச் சமணக் கோயில் உண்டு. 

4.தென்ஆர்க்காடு மாவட்டம்

கீழ்க்குப்பம்: (கீழருங்குணம்) கூடலூர் நெல்லிக் குப்பம் சாலைகள் சேரும் இடத்தில் உள்ள இவ்வூரில், கிராமதேவதை அம்மன் கோயிலின் மேற்புறம் ஒரு சமணர் திருவுருவம் காணப்படுகின்றது. செங்கற் சூளைக்காக மண்ணைத் தோண்டியபோது இது கிடைத்தது. வீற்றிருக்கும் கோலத்துடன் உள்ள இந்த உருவத்தின் தலைக்கு மேல் குடையும், இரு பக்கங்களிலும் சாமரை வீசுவது போன்ற இரண்டு உருவங்களும் உள்ளன.76

திருவதிகை: தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப் போகும் சாலையில் 14 மைலில் உள்ள ஊர். ‘திருவதி’ என்றும் ‘திருவீதி’ என்றும் வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக் கோயில் இங்கு உள்ளது. சமணராக இருந்த தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலைநோய் தீரப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை இடித்து அக் கற்களைக் கொண்டுவந்து ‘குணபரன்’ என்னும் அரசன் (மகேந்திரவர்மன்) இவ்வூரில் ‘குணதர வீச்சுரம்’ என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது.

இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று 41/2 அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இஃது இவ்வூர்ச்சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, குமரப்பநாயகன் பேட்டையில் உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது 31/2 அடி உயரம் உள்ளது.77 ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13 + 13 -ஆவது ஆண்டில், நால்முக நாயனார் முனையதீச்சுரம் உடைய நாயனார் கோயில் நிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர்= சமணக் கடவுள்) கோயில் நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த சாசனத்தினால் தெரிய வருகிறது.78 இதனால், இங்குச் சமணக் கோயில்களும் அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட (மேலே கூறப்பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படுகிற ‘நால்முகநாயனார் கோயில்’ என்பதும் சமணக்கோயிலாக இருக்கக்கூடும். ஏனென்றால், அருகக் கடவுளுக்கு ‘நான்முகன்’ (நான்கு அதிசய முகங்களையுடையவர்) என்று பெயர் கூறப்படுகிறது.

திருப்பாதிரிப்புலியூர்: (பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழங்கப்படும். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்பதும் இதுவே. இது பண்டைக் காலத்தில் பாடலிபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமண மடமும் சமணக் கோயிலும் இருந்தன. இந்தப் பாடலிபுரத்துச் சமண மடம் மிகப் பழமை வாய்ந்தது. சர்வநந்தி என்னும் சமண முனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதி யிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார். இது, சக ஆண்டு 380 இல் (கி.பி 458 இல்) காஞ்சியில் அரசாண்ட சிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந்நூல் கூறுகிறது (Mysore Archaeological Report 1909-10. Page 45, 46) இப் பாடலிபுரச் சமண மடத்தில் கல்விகற்றுப் பின்னர் இம் மடத்தின் தலைவராக விளங்கியவர் தருமசேனர் என்பவர். இவர், பிறகு சைவ மதத்தில் சேர்ந்து அப்பர் எனப் பெயர் பெற்றார்.79 இங்கிருந்த சமண மடத்தை இடித்து அக்கற்களைக் கொண்டுபோய், திருவதிகையில் ‘குணதரவீச்சுரம்’ என்னும் கோயிலைக் ‘குணபரன்’ என்னும் அரசன் கட்டினான் என்பர்.80 இங்குச் சமணர் கோயில் இருந்த தென்பதை உறுதிப்படுத்த, மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.81 இது 4 அடி உயரம் உள்ளது.

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமணவுருவம் காணப்படுகிறது. இதன் இருபுறத்திலும் இயக்கிகள் சாமரை வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டது.82

சிறுகடம்பூர்: திண்டிவனம் தாலுகாவில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே 1 மைல். இங்குள்ள ஏரிக்கரையின் மேல் உள்ள பாறையில் 41/2 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் இருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதற்கருகில் மற்றொரு கற்பாறையின்மேல், நின்ற கோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திரு உருவமும், வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக்கப் பட்டுள்ளன.83 இவை, நல்ல நிலையில் இப்போதும் புத்தம் புதிதாகக் காணப்படுகின்றன.84 இப்பாறைக்குத் திருநாதர் குன்று என்று பெயர் கூறப்படுகிறது. இங்கு, சந்திரநந்தி ஆசிரியரும், இளையபடாரர் என்பவரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ணா நோன்பிருந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.85 இங்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி.பி 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றும், தமிழ்நாட்டில் காணப்படும் வட்டெழுத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர்.

மேல்சித்தாமூர்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள மல்லிநாதர் கோயிலில் மல்லிநாதர், பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் இவர்களின் திருவுருவங்கள் உள்ளன. இவை வெகு அழகாக அமைந்துள்ளன. இங்கு ஒரு சமண மடம் உண்டு. இதுவே தமிழ்நாட்டுச் சமணமடம். இம்மடத்தில் ஏட்டுச் சுவடிகளும் உண்டு. சென்னை மயிலாப்பூரில் இருந்த நேமிநாதர் கோவில் கடலில் முழுகிய போது அங்கிருந்த நேமிநாதர் திருவுருவத்தை இங்குள்ள கோயிலில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.

தொண்டூர்: திண்டிவனம் தாலுகா. திண்டிவனத்திற்கு மேற்கே 6 மைலில் உள்ளது. செஞ்சியில் இருந்து 8 மைலில் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே ஒரு மைலில் ஒரு குன்று, ‘பஞ்சபாண்டவ மலை’ என்னும் பெயருடன் உள்ளது. இதில், இரண்டு குகைகளும், சில கற்படுக்கைகளும் உள்ளன. குகைக்குள் 2 அடி உயரமுள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது.

இவ்வூரில், வழுவாமொழிப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயில் இருந்ததாகச் சாசனத்தினால் தெரிகிறது. இந்த வழுவாமொழிப் பெரும்பள்ளி விளாகத்திற்கு, இவ்வூரைச் சேர்ந்த குணனேரிமங்கலம் என்னும் வழுவாமொழி ஆராந்தமங்கலத்தையும் தோட்டங்களையும் கிணறுகளையும் விண்ணவகோவரையன் வைரிமலையன் என்னும் சிற்றரசன் பள்ளிச்சந்தமாகத் தானம் செய்தான் என்றும், இந்தத் தானத்தைப் பாம்பூர் வச்சிர சிங்க இளம்பெருமானடிகளும் அவர்வழி மாணவரும் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்றும் இச்சாசனம் கூறுகின்றது.

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகாவின் தலைநகரம். இங்கு யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் உள்ள ‘பட்டா நிலம்’ என்னும் இடத்தில் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது இக்கோயில் இல்லை. இங்கு இருந்து சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் (Tate Park) என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.

அரியாங்குப்பம்: புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு 4 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் உள்ளது. இதனை ஓர் ஆண்டி, ‘பிரமா’ என்னும் பெயருடன் பூசைசெய்து வருகிறார்.88 அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பம் என்பதன் மரூஉ போலும்.

பாவண்டூர்: திருக்கோயிலூருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி சாலையில் உள்ளது. இவ்வூரில், பண்டைக்காலத்தில் சமணரும் சமணக் கோயிலும் இருந்திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங்கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது.

திருநறுங்கொண்டை: (திருநறுங்குன்றம் - திருநறுங்குணம்.) திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.89 குலோத்துங்கச் சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச தேவரது 13 ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்கு வைகாசித்திருநாள் சிறப்பு நடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. ‘திருநறுங்கொண்டை பெரியபாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர்ச் சமணரிடம் உண்டு.

ஒலக்கூர்: திண்டிவனம் தாலுகா, பிராமண வீதியில் உள்ள சிதைந்து தேய்ந்துபோன கல்சாசனம், ‘பிருதிவி விடங்க குரத்தி’ என்னும் சமண ஆரியாங்கனையைக் குறிப்பிடுகிறது.

திருக்கோயிலூர்: திருக்கோவலூர் என்பது இதன் சரியான பெயர். இங்குள்ள பெருமாள் கோயிலிலுள்ள கொடிமரம் சமணருடைய மானஸ்தாம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணர் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று ஐயுறுகின்றனர்.92 இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கது.

தாதாபுரம்: இதன் பழைய பெயர் இராசராசபுரம் (திண்டிவனம் தாலுகா.) இவ்வூர்ப் பெருமாள் கோவிலின் வடக்கு, மேற்குச் சுவர்களில் உள்ள சாசனங்களினால் இங்குச் சமணக் கோயில்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. இச்சாசனம் இராசகேசரிவர்

மரான இராசராச தேவரது 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ‘குந்தவை ஜினாலயம்’ என்னும் சமணக் கோயிலைப் பராந்தக குந்தவைப் பிராட்டியார் என்னும் சோழ அரசியார் (இவர் பொன் மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகளார்.) கட்டி, அக்கோயிலுக்குப் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், முத்துக்களையும் தானம் செய்ததை இச்சாசனம் கூறுகின்றது.93 வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா திருமலையில் உள்ள சமணக் கோயிலையும், திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக் கோயிலையும் இந்த அம்மையார் கட்டினார்.(S.I. Vol. No. 67,68.)

வேலூர்: (திண்டிவனம் தாலுகா). இங்கிருந்த சமணக் கோயிலை ஜயசேனர் என்பவர் பழுதுதீர்த்துப் புதுப்பித்தார் என்று ஒரு சாசனம் கூறுகிறது.

வீரசேகரப் பெரும்பள்ளி: இது, வந்தவாசி தாலுகாவில் உள்ள சளுக்கி என்னும் ஊரில் இருந்த குகைக் கோயில் என்பது சாசனங்களால் அறியப்படுகிறது.

பெருமண்டூர்: (திண்டிவனம் தாலுகா.) இங்குள்ள சந்திரநாதர் கோயில் மண்டபத்தூணில் உள்ள சாசனம், ‘பெருமாண்டை நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி’யைக் கூறுகிறது.96 இன்னொரு சாசனம் பெரும்பள்ளியைக் குறிக்கிறது.

திட்டைக்குடி: (விருத்தாசலம் தாலுகா.) இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில் சாசனங்கள், ‘மகதை மண்டலத்துத் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர் பள்ளிச்சந்தத்தையும்’,98 இடைச் சிறுவாய் அமணன்பட்டு99 என்னும் ஊரையும் குறிப்பிடுகின்றன. இதனால், பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

கீழுர்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள சாசனம்,

‘...................கண்ணெனக்
காவியர் கயல்பயி லாவியூ ரதனில்
திக்குடை யிவரும் முக்குடையவர்தம்
அறப்புற மான திறப்பட நீக்கி’

என்று கூறுகின்றது. எனவே, இங்கு முக்குடையவர்க்கு (அருகக் கடவுளுக்கு) உரிய நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது.

பள்ளிச்சந்தல்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள ஒரு சிறு குன்றின்மேல் சிதைந்துபோன சென்னியம்மன் கோயில் என்னும் சமணக் கோயில் இருக்கிறது. பாகுபலியின் திருமேனியும் சிதைந்து காணப்படுகிறது. இங்குள்ள சாசனம் சகம் 1452 (கி.பி. 1530) இல் விஜய நகர அரசர் அச்சுததேவ மகாராயர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், ‘ஜோடிவரி,’ ‘சூலவரி’ என்னும் வரிப்பணத்தை, ஜம்பையிலிருந்த நாயனார் விஜயநாயகர் கோயிலுக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.101 இதில் கூறப்படுகிற ஜம்பை என்னும் ஊர் பள்ளிச்சந்தலுக்கு ஒருமைலில் உள்ளது. ஜம்பையில் உள்ள சாசனம் ஒன்று, பரகேசரி வர்மன் (பராந்தகன் 1) உடைய 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ‘வாலையூர் நாட்டுப் பெரும்பள்ளி’ என்னும் சமணக் கோயிலுக்கு உரிய ஏரியைப் பராமரிக்கும்பொருட்டு நிலம் (ஏரிப்பட்டி) தானம் செய்ததை இது கூறுகிறது.102 இதற்கு அப்பால் ஒரு மைலில் உள்ள ஒரு வயலில் இராசராச சோழன் III உடைய சாசனம் ஒன்று காணப்படுகிறது. இதில், ‘கண்டராதித்தப் பெரும்பள்ளி’ என்னும் சமணக் கோயில் குறிப்பிடப்படுகிறது.103 அன்றியும், கண்டராதித்தப் பெரும்பள்ளியின் தலைவரான நேமிநாதர் என்பவரின் உத்தரவை (கட்டளையை) இச்சாசனம் கூறுகின்றது. அக்கட்டளை என்னவென்றால், ஜம்பை என்று கூறப்படும் வீரராசேந்திரபுரத்தின் ஒரு பகுதி ‘சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம்’ என்னும் பெயர் உடையது என்பதும், இவ்விடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காத்து ஆதரிக்கவேண்டும் என்பதும் ஆகும்.

(குறிப்பு: ‘அஞ்சினான் புகலிடம்’ என்பது அடைக்கல தானத்தைக் குறிக்கும். சமணர் அகாரதானம், ஒளடததானம், சாஸ்திரதானம், அடைக்கலதானம், என்னும் இந்நான்கு தானங்களைச் சிறப்பாகக் கொள்வர். இந்தத் தானங்களைப் பற்றிச் சமண நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அடைக்கல தானத்தைத்தான் அஞ்சினான் புகலிடம் என்று இந்தச் சாசனம் கூறுகின்றது.)

சோழவாண்டிபுரம்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்கே கீரனூர் என்னும் கிராமத்தில் ‘பஞ்சனாம் பாறை’ எனப்படும் கற்பாறைகளில் கோமடீஸ்வரர், பார்சுவநாதர் திருவுருவங்களும் கற்படுக்கைகளும் உள்ளன. இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் சிறப்புற்றிருந்தனர்.104 சோழ வாண்டிபுரத்தில் உள்ள ‘ஆண்டி மலையில்’ 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. வேலி கொங்கரையர் புத்தடிகள் என்பவர் இங்குள்ள. ‘தேவாரத்தை’ (கோயிலை) அமைத்ததாக இவை கூறுகின்றன. மலைப் பாறையில், பத்மாவதி அம்மன், கோமடீஸ்வரர், பார்சுவநாதர், மகாவீரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. பத்மாவதி அம்மனைக் காளியம்மன் என்று இவ்வூரார் கூறுகின்றனர்.105 இங்குள்ள மற்றொரு சாசனம், சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊரை இங்குள்ள பிண்டிக் கடவுளுக்கும் (அருகக்கடவுளுக்கும்), மாதவருக்கும் தானம் செய்ததைக் கூறுகின்றது. தானம் கொடுக்கப் பட்ட இவ்வூரைக் குரந்திகுணவீரபடாரரும் அவர் வழிமாணாக்கரும் மேற்பார்வை பார்த்துவந்ததாக இச்சாசனம் கூறுகிறது.106

இதில், தானம் செய்த சித்தவடவன் என்பவர் வேலி கொங்கராயர் புத்தடிகள் என்று பெயர் பெறுவார். கோவல் நாட்டரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மலைய குலோத்பவன் என்று கூறப்படுபவனும் இவரே என்பர். இவரே, வேளிர் கொங்கராயர் என்றும் கூறப்படுகிறார். அன்றியும் இவர், சேதிநாட்டு ஓரி குடும்பத்தவர் என்றும், பாரி குடும்பத்தில் பெண் கொண்டவர் என்றும் கூறப்படுகிறார். (ஓரி, பாரி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசர் சங்க நூல்களில் கூறப்படுகின்றனர். இவர்கள் கடை ஏழு வள்ளல்களைச் சேர்ந்தவர்.) இராஷ்ட்ரகூட அரசன் கன்னர தேவர் காலத்தில் (10 ஆம் நூற்றாண்டின் இறுதியில்), இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திருக்கோவலூரை அரசாண்ட மலாட அரசன் சத்திநாதன் என்றும் சித்தவடவன் என்றும் பெயருள்ள நரசிம்மவர்மன்தான் இவன் என்றும் சிலர் கருதுகின்றனர்.

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

More from the section

மத அரசியல்-57: சிவன்
மத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை
மத அரசியல்-55: அய்யாவழி
மத அரசியல்-54: விசிஸ்டாத்வைதம்
மத அரசியல்-53: துவைதம்