சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மத அரசியல்-36: ஆசீவகம்–ஆசீவர்களின் கடுந்தவம்

By C.P.சரவணன்| DIN | Published: 06th December 2018 03:20 PM

 

காமம் எப்படித் தோன்றுகிறது?

இந்தியாவில் வைதிக நெறி பரவலாக்கம் பெற்றபோது ஓரணியில் நின்று அதனைக் கடுமையாக எதிர்த்தவை இம்மூன்று சமயங்களுமே.

ஏனெனில் இம்மூன்று சமயக் கொள்கைகளிடையே சில ஒற்றுமைகள் இருந்தன. இவை மூன்றும் வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வருணாச்சிர தர்மங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன.

வேள்விகள், அதில் உயிர்ப்பலியிடுதல் போன்றவற்றை இம்மூன்று சமயங்களுமே எதிர்த்தன. வேதத்தினை ஏற்காமை கருதி இவை அவைதிக சமயங்கள் என அழைக்கப்பட்டன. பள்ளிகளில் சமண பௌத்த வரலாறு குறித்துக் கற்பிக்கப்படும் அளவிற்கு ஆசீவகம் குறித்து கற்பிக்கப்படுவதில்லை. ஏனெனில் ஆசீவகம் குறித்தோ அதன் கொள்கைகள் குறித்தோ பேசும் நூல்கள் இன்று நம்மிடையே இல்லை.

ஆனால், அப்படி அவர்கள் கொள்கைகளை விளக்கும் நூல் இருந்திருக்கிறது என்பதற்கும், அவர்களால் முதல்வராகக் கருதப்பட்ட மக்கலி கோசாலர் என்பார் இருந்திருக்கிறார் என்பதற்கும் வரலாற்றில் ஆதாரஙகள் உள்ளன. இதில் வியக்கத்தகுந்த செய்தி என்னவென்றால், ஆசீவகர் குறித்தும் அவர்தம் கொள்கைகள் குறித்தும் பெரிதும் பேசும் நூல்கள் சமண பௌத்த நூல்களே!

தம் கொள்கைகளை வலியுறுத்த முயன்ற இச்சமயங்கள், மாற்றுச் சமயத்தினரின் கொள்கையை எடுத்துக்காட்டித் தக்க காரணங்களுடன் பிற சமயக்கொள்கைகள் தவறு என்பதை நிறுவவும் தம் சமயக் கொள்கையே சரி என நிலைநாட்டவும் போராடின. அந்நூல்கள் மறுப்பதற்காகக் காட்டும் செய்திகளில் இருந்துதான் நாம் இன்று ஆசீவகம் அதன் கொள்கைகள்  பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையின் மகாவம்சம், அசோகனின் கல்வெட்டுக்கள் போன்றவற்றிலும் ஆசீவகம், ஆசீவகப் பள்ளி போன்றன பற்றிச் சிறுகுறிப்புகள் வருகின்றனவேனும் அவை இச்சமயிகளின் கொள்கைகள் குறித்து அறிந்திடப்போதுமானவையாய் இல்லை. இந்நிலையில், தமிழகம் பெற்ற நற்பேறென்னவெனில் இந்தியாவில் வேறெந்த மொழியிலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகம் பற்றிய செய்திகள் தமிழிலக்கியங்களில் உள்ளன என்பதுதான்.

முதலில் இந்த ஆசீவகம் என்ற சொல், ஆய்வு நிலையில் எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

சமண இலக்கியமான நீலகேசியில்,
“அருகிருந்தார் தாமறிய ஆசீவகனை ” என்ற தொடர்வருகிறது.
அதற்குப் பொருளுரைக்கும், நீலகேசியின் உரையாசிரியரான, சமயதிவாகரர்,
ஆசீவகன் என்பதற்கு  ஜீவிக்கிறவன் எனப் பொருள் காண்கிறார்.

அயல்நாட்டு அறிஞர்கள் இச்சொல்லுக்கு மூன்றுவிதமான பொருள்களைக் காண்கிறார்கள்.,

ஐீவன் – அஜீவன் எனச் சீவனுக்கு அசீவன் என்பது எதிர்ச்சொல். எனவே வாழ்தல் ஜீவனெனில் அஜீவன் என்பது வாழாமை. எனவே வாழ்வதற்கு வேண்டிய எதையும் செய்யாமல் பிறரை நம்பி இரந்து தம் வாழ்நாளைக் கழித்தவர் ஆசீவகர் என்பது ஒரு கருத்து.

ஆஜீவன் என்பது உயிரற்றது. எனவே உயிருள்ளவற்றைக் கொன்று உண்ணாமல், உயிரில்லாதவற்றை உணவாக உட்கொள்பவர்கள் அசீவகர் என்பது மற்றொரு கருத்து.

ஆசீவ என்ற சொல் வாழ்க்கைமுறை என்ற பொருளுடையது. மனிதர்கள் வாழும் முறை என்பதே இச்சொல்லின் விளக்கம் என்பது மூன்றாவது கருத்து.

ஆசீவகம் என்ற பெயருக்கான காரணத்தை விளக்கும் இக்கருத்துக்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் பொருத்தமுடையனவே. ஏனெனில், ஆசீவகம் உயிர் வாழ்க்கை பற்றி பேசுகிறது.

அது, வாழ்க்கையை அதன்போக்கில் விட்டுவிடுதல் என்பதைத் தன் அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்தது. கொல்லாமையை வலியுறுத்தியது. 

ஆசை அல்லது ஒன்றன்மேல் உள்ள காமம் துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர். இந்தக் காமம் ஒருவனது உள்மனதில் தோன்றும் விகாரங்களால் ஏற்படுகிறது என்பது பௌத்தர் கொள்கை. எனவே காமத்திற்குக் காரணம் மனம்தான் என்கிறது பௌத்தம்.

ஆசீவகம், காமத்திற்குக் காரணம் மனம் இல்லை. அதற்குக் காரணம் வெளியில் இருந்து மனதைப் பாதிக்கும் புறப்பொருட்கள்தான் என்கிறது. அப்படித்தோன்றும் காமத்தைத் தடுக்க ஆசீவகர் தேர்ந்தெடுத்த வழிமுறை அதிர்ச்சியானது.

 

தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்

வெளியில் உள்ள பொருட்களின் தூண்டுதலே காமத்தை விளைவிக்கும் எனக் கருதிய ஆசீவகர் அதனைத் தவிர்க்கும் முயற்சியாக வெளியுலகிற்கும் தமக்கும் உள்ள தொடர்பினை நீக்கிக்கொள்ள முயன்றனர். மலையிலோ காட்டிலோ குகைகளிலோ இருப்பினும் வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று கூற முடியாது. அதற்கென அவர்கள் கண்ட வழிமுறைதான், தாழிகள். நாம் முதுமக்கட்தாழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

பொதுவாக அவை இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பண்டைக்காலத்தில் பயன்பட்டது என்பதை அறிந்திருப்போம். கொஞ்சம் கூடுதலாக, உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களையும் இப்படித் தாழியுள் இட்டு, தானியங்களையும் சிறு விளக்கொன்றையும் உள் வைத்துப் புதைக்கும் முறை இருந்ததையும்  சிலர் அறிந்திருக்கலாம்.

ஆனால் வாயகன்ற பெரிய தாழிகளுள், சம்மணமிட்ட நிலையில் அமர்ந்து இவ்வுலக தொடர்புகளைத் துண்டித்துத் தவம் இயற்றும் முறையை ஆசீவகர் கையாண்டனர். சங்க இலக்கியத்தில் ஆசீவகர்களின் கொள்கைகள் குறித்தும், தாழிகள் குறித்தும் குறிப்புகள் இருப்பினும் அதில் ஆசீவகர் என்ற சொல் இல்லை.

ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணியில் இத்தாழியில் ஆசீவகர் செய்யும் தவம் பற்றி வெளிப்படையான குறிப்பு வருகிறது.

“தாழியிற் பிணங்களும் தலைப்பட வெறுத்தவப்
பாழியிற் பிணங்களுந் துளபெழப் படுத்தியே” (376)

இவ்வரிகளுக்கு அதன் பழைய உரையாசிரியர்,

“தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களில் புக்குத் தவம் செய்வாராதலின் அவரைச் சுட்டி நின்றது ”

என்று  பொருள் கூறுகிறார்.

இக்குறிப்பு, ஆசீவகர் தாழிக்குள்ளே இருந்து தவம் செய்து தம் உயிரையும் போக்கிக் கொள்வர் என்பதைக் காட்டுகிறது.

இங்கு வந்திருக்கும் ஆருகதர் என்ற சொல் பொதுவாகச் சமணரைக் குறிக்க இன்று வழங்கப்பட்டாலும் துறவு நெறியை வலியுறுத்தியோர் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இது இங்கு ஆளப்பட்டமை கவனிக்கத்தக்கது.

இதைப்போன்றே சிரமணர்கள் என்ற சொல்லும், ( சிரமம் அதாவது ) உடலை வருத்தி இதுபோன்ற தவமுயற்சிகளில் ஈடுபடுவோரை பொதுவாகக் குறிக்கும் சொல்லாகும்.

இதுவும் நாளடைவில் சமணரைக் குறிக்கும் பொதுச்சொல்லாக அமைந்தது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச்சினார்க்கினியர்,

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேழன்” ( தொல்.பொருள்-60 )

என்னும் சூத்திரத்தின் பொருள்விளக்குமிடத்து மேற்கோளாக,

“தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை – யாழிசூழ்
மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டன னின்மாட்டோ கல்”

என்னும் பாடலைக்காட்டுகிறார்.

இதில், தாழி கவிப்பத் தவஞ்செய்வார் என்னுந் தொடர் ஆசீவகரைக் குறிப்பதாகும்.

ஆசீவகம் சமணம் பௌத்தம் ஆகிய இச்சமயங்களிடையே உள்ள இன்னொரு ஒற்றுமை, அவை இத்தகு தவநெறிக்குக் கொடுத்த முக்கியத்துவமாகும். வைதிக சமயங்கள் பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற படிநிலைகளின் இறுதியாய்த் துறவினை அணுகினாலும், வீடுபேறடையத் துறவே வழி என்ற என்ற நிலைப்பாடுடையனவாய் இந்த மூன்று அவைதிக சமயங்களும் விளங்கின.

வேதங்கள் இந்தியாவில் கால்கொளும் முன்பே துறவு என்னும் சிந்தனை இங்கு வாழ்ந்த தொல்குடிகளிடையே நிலைபெற்றிருந்தது என்பதை நாம் மனதிருத்த வேண்டும். உலகில் ஒருவருக்குப் பற்று என்பது இந்த உடலின் மூலமாக ஏற்படுகிறது. இந்த உடலுக்கென எதனையும் வேண்டாததன் மூலம், அதனைப் பொருட்படுத்தாதன் மூலம், இன்னும் சற்று மேலே போய், இவ்வுடலைக் கடுமையாக வருத்திக்கொள்வதன் மூலம் சுயநலமற்ற, பற்று நீங்கிய சிந்தனையையும் அதன் விளைவாக வீடுபேற்றையச் செய்யும் ஞானத்தையும் பெறமுடியும் என இவர்கள் நம்பினர். அதிலும் சமண பௌத்தரை நோக்க, ஆசீவகர் மேற்கொண்ட தவமுயற்சிகள் மிகக்கடுமையானவை.

 

நெருப்பினுள் இருக்கலாம்!

சமண பௌத்த சமயங்களை ஒப்பிடும் போது, ஆசீவகரின் நெறி தவம் செய்வதைக் கடுமையாக வலியுறுத்துவதைப் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் தவமுயற்சியில்  நீரையும் அவரை விதைகளையும் மட்டுமே உண்டு உயிரினைத் தக்க வைத்துக் கொண்டனர்.  இதுபோன்ற தவமுயற்சிகளின் வழியாகப் பிறர்க்கு இல்லா ஆற்றலைத் தாம் அடைய முடியும், வீடுபேறடைய முடியும்  எனக் கருதினர்.

குறிப்பாக, உடலை வருத்துவதன் மூலம் தம் புலன்களை அடக்கிவிடலாம் என்பதும், அதனால் மனதை ஒருமுகப்படுத்தி, இறந்தகாலம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஒருவர் தம் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பது குறித்தும் அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறமுடியும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது.
லோமஹம்ஸ ஜாதகா என்னும் நூல் இவர்கள் செய்த நான்கு வகை தவமுயற்சிகள் குறித்துப் பேசுகிறது. அவை,

1.உக்கிடிக்கப் பதானம் – சம்மணமிட்ட நிலையில் உணவொழித்துத் தன்னை வருத்திச் செய்யும் தவம்.
2.வகுளி வதம் -  வவ்வாலைப் போன்று ஏதேனும் ஒன்றைப் பிடித்துத் தொங்கியபடி செய்யும் தவம்.
3.கண்டகப்பசயம் – முள் படுக்கை அமைத்து அதன்மேல் படுத்துக் கொண்டு செய்யும் தவம்.
4.பஞ்ச தபனம் – ஐந்து புறம் நெருப்பினை மூட்டி அதன் நடுவில் இருந்து செய்யும் தவம்.

இன்று நாம் இதனைப் படிக்கும்போது இம்முயற்சிகள் ஒரு கேலிப்பொருளாய்ப் பார்க்கப்படக்கூடும். ஆயினும் எத்தனை எத்தனை வழிகளில் இவர்கள் ஞானம் பெற விரும்பினார்கள் புலன்களை அடக்கப் பாடுபட்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள  இக்குறிப்புகள் உதவும்.

இந்தத் தவ முறைகளில் பஞ்சதபனம் என்பதில் ஐந்துபுறமும் நெருப்பு என்பது ஐம்புலன்களைப் பாதிக்கும் புறத்தாக்கங்களின் குறியீடாக இருக்கலாமோ என எனக்குத் தோன்றுகிறது. இவை மட்டுமன்றி, ஒற்றைக் காலில் தவமிருத்தல், மண்ணுள் உடலைக் கழுத்துவரை புதைத்துத் தவமியற்றல் போன்ற முறைகளையும் ஆசீவகர் பின்பற்றியிருப்பதைக் காண முடிகிறது.

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

More from the section

மத அரசியல்-58: சிவனியம்
மத அரசியல்-57: சிவன்
மத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை
மத அரசியல்-55: அய்யாவழி
மத அரசியல்-54: விசிஸ்டாத்வைதம்