வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

மத அரசியல்-35: ஆசீவக மதச் சின்னங்கள் 

By C.P.சரவணன்| DIN | Published: 03rd December 2018 06:20 PM

 

ஆசீவக மதச் சின்னங்கள் (Symbols of Aseevagam)

பன்னெடுங்கால முன்பே வடவர் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொன்மையாக ஒரு வாழ்வியல் நெறி இருந்தது. அதனைக் கண்காணிக்கவும் ஒழுகி ஓம்பவும் பல இடங்களில் கற்படுக்கைகளில் இருந்து மக்களுக்கு வழி காட்டியவர்கள்தாம் ஆசீவகத் துறவிகள். இந்தத் துறவிகளே பல்லுயிர்ப் பாதுகாப்பு, கொல்லாமை, களவாமை, போர்ப்பயிற்சிகள், மெய்யியல் கோட்பாடுகள் போன்றவற்றை மக்களுக்குக் கற்பித்தனர்..எந்த ஒரு மதமும் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில தந்திரங்களைத் தன்னுள் கற்பித்து வைக்கும். இறந்தவர்கள் பிழைப்பார்கள் என்றும், பறக்கும் குதிரையில் பறந்து சென்றார்கள் என்பது போலவும் பொய்களைக் கூறி அந்த மதங்கள் தங்கள் விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆசீவகமோ மதமாக மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடாமல் மக்களின் அன்றாட வாழ்வியலின் அடிப்படையாக அமைந்து இன்னமும் தனது இலச்சினையைத் தமிழகத்தில் பதித்து வைத்து உள்ளது எண்ணத் தக்கது. 

எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதச் சின்னங்களை அணிந்திருப்பதை இயல்பாகக் காணலாம். (கிறித்தவர்கள் சிலுவைச் சின்னம் அணிவதைப் போல) ஆசீவகர்கள், மலர்மேல் அமர்ந்த மங்கையின் இருபுறமும் நீரூற்றும் யானைகள் உள்ள இலச்சினையைக் கழுத்தில் அணிவது வழக்கம். (இந்த வழக்கம்தான் இன்று தமிழர்களின் தாலிக் கொடியில் கோர்க்கப்படும், மகாலட்சுமி பொட்டு என்னும் தங்க நாணயமும் கால் காசுகளின் பின்புறத்திலுள்ள நீரூற்றும் இரு யானைகளுக்கிடையில் மலர் மேல் அமர்ந்திருக்கும் பெண் வடிவமும் என்பது குறிப்பிடத் தக்கது.) அவ்வாறு, நமது தாலிக் கொடிகளில் இன்றும் புழங்கி வரும் ஆசீவக மரபு தனது ஆசீவகக் கற்படுக்கைகளையும், ஆசீவகத் துறவிகளையும் இழந்து நிற்கிறது.கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் தனது சிறப்புக் கூறுகளை இரவல் கொடுத்த ஆசீவக சமூகம் இன்று தனது சங்கிலித் தொடரின் அடுத்த வளையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. 

 

1. திருநிலை

ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.

இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும். இதனை இன்றைய மரவினைஞர்கள்  கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர். இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசீவக மரபிற்குச் சான்று பகரும் ஆவணமாக உள்ளது. தென்னகத்தின் மக்கள் வாழ்வில் மனையாட்சியின் மாண்பாகக் கருதப்படும் சின்னம் தாலிக்கொடியாகும். இந்த மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் கால்காசுகளின் ஒருபுறத்தில் இன்றும் இந்தச் சின்னம் பொறிக்கப்படுவதால் இந்தக் கால்காசு அணியும் நாமனைவரும் ஆசீவக மரபினைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது வெள்ளிடைமலை.

மேலும் கடவுளர் திருவுருவங்கள் திருவிழாக்களின்போது தேர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுத் தெருத்தெருவாக உலாக் கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும் சிலைகளின் பின்புறம் மரத்தாலான ஒரு வளைவு சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் ‘பிரபை’ என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பர். அவ்வளைவின் இரு புறமும் இரு யானைகள் துதிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கும். அந்தப் பின்புலத்தோடு கூடிய கடவுளர் வடிவம் ஆசீவகத்தோடு நமக்குரிய மரபியல் தொடர்பினைத் தெளிவுறுத்துகிறது.

கோயில்களின் பெண்கடவுளர் தனிக் கோயில் முகப்பிலும், திருமண மண்டப முகப்புகளிலும் இந்தத் திருநிலை அமைக்கப்பட்டிருக்கும் பாங்கும் இந்தத் திருநிலை எனும் ஆசீவகச் சின்னம் இல்லற வாழ்வில் இருப்போர் பயன்படுத்தும் ஒரு மங்கலச் சின்னமாக வழங்கி வந்தது, ஐயந் திரிபற நமக்குப் புலனாகின்றது. இல்லற முகப்புகளைக் கண்ணுறும் எவரும் இச்சின்னம் வனையப்பட்ட இல்லம் ஆசீவக இல்லற நெறியில் ஒழுகிவரும் இல்லம் என்பதனை உணர்த்துவதாக அமைந்தது என்பது தெளிவு.

மாதங்கமொடு பற்செல்வம் மனைதொறு னிறைந்திருக்க
மாதங்கம் மலரின்மேவி மகிழ்வொடும் கனிந்துநோக்க
மாதங்கம் புறத்திருந்து மாதவள்மிசை நீர்பெய்கும்
மாதங்கம் கொடுசெய்நாண்சேர் மங்கலம் நன்றேநன்றே!

(மாதங்கம்(1) மா+தங்கம் = மிகுந்த பொன்(2) மாது+அங்கம் = பெண்ணின் மேனி(3) மாதங்கம் = யானை(4) பொன்னணிகொடு – கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம்)ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல் இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும்.

 

2. சுழற்குறி (Swastika)

துறவு        நிலையில் கொல்லாமை. அழுக்காறின்மை, அவாவின்மை இன்னபிற நற்பண்புகளை மட்டும் பெற்றுத் துறவின் இறுதி நிலையினை அடையு முன்பாக உள்ள தேடல் நிலைத் துறவி களுக்கான ஆசீவகச் சின்னமே சுழற்குறியாகும். இதனை ‘ஸ்வஸ்திக்’ என்னும் பிற மொழிச் சொல்லால் குறிப்பர். இந்த நிலையில் உள்ள துறவிகளுக்கு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற அடைமொழி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த அடை மொழியினை இன்றும் சிலருக்கு நாம் வழங்கி வருவது கண்கூடு. எனவே இந்தச் சுழற்குறி மெய்யியலில் தேடல் நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னமாகவும் இறுதிப் பொருளை அடைந்து விடும் வாய்ப்பு திண்ணம் என்ற உறுதிப் பாட்டு நிலையில் உள்ளவர்களும் பயன்படுத்தி வந்த இந்தச் சின்னம் இப்பொழுதும் நிருவாணத் துறவிகளின் சின்னமாகவும், ஓக நெறியில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதி என்னும் துவக்கக் கடவுளின் இரு நாசிப் புழையும் இணையுமிடத்தின் அடையாளச் சின்னமாகவும் சித்தரிக்கப் படுகிறது ஆசீவக நெறியில் பின்பற்றப்படும் இச்சின்னம் இன்றும் சைனர்களும், காணாபத்தியர்களும் வணங்கும் சின்னமாக உள்ளது. ஆசீவக மரபில் உலகியல் பற்றுகளை ஒதுக்கி பேசா நிலையில் இருந்த துறவியர் சமணர் (சம+அணர் என்றால் இயக்கமற்ற அண்ணத்தினை உடையவர்; அதாவது பேசா நோன்பும் உண்ணா நோன்பும் ஆகிய நிலையில் உள்ளவர் என்று பொருள் படும்.) எனும் பிரிவினர் ஆவர். இந்த பற்றுகளைத் துறந்த தீர்த்தவிடங்கர் (தீர்த்தங்கரர்) வரிசையில் 24ஆவது துறவியான மகாவீரர் சமண நிலையினை சைனம் என்ற சமயமாக வடிவமைத்து ஒரு புதுச் சமயம் உருவாக்கினார். சமண நிலை தவிர்த்த ஏனைய ஆசீவக மரபினருக்கு ஒரு பற்றுக்கோடும் வரையறையும் தேவைப்பட்டது. அவ்வாறு வரையறை செய்யாது போனால் ஆசீவக மரபு அடையாளம் காட்டப்படாமல் போகும் என்ற நிலை உருவானது. அந்த காலக் கட்டத்தில்தான் மற்கலி என்ற ஆசீவகத் துறவி ஆசீவக மரபினை தனித்து அடையாளம் காட்டும் முகத்தான் ஒரு சமய வரைவுக்கு உட்படுத்தினார். இதனை ஆசீவக சமயத்தினை மற்கலிதான் உருவாக்கினார் என்று வரலாறு தவறாக சுட்டுகிறதே ஒழிய உண்மையில் மற்கலியார் ஆசீவகத்தை ஒரு சமயமாக வரைவு படுத்திக் காட்டுவதற்கு முன்னமே ஆசீவகம் ஒரு மரபியலாக இருந்தது என அறிய வேண்டும். ஆசீவகக் கற்படுக்கைகளைக் கைப்பற்றியவர்கள் தமது சின்னமாக எதனையும் அடையாளப் படுத்தா விட்டாலும், இந்தச் சின்னம் அவர்கள் மீதும் தனது இலச்சினையைக் குத்திவிட்டது என்பது உன்னுந்தொறும் வியப்பளிக்கவே செய்கிறது.ஆகச் சைனம், காணாபத்தியம் என்னும் பிற்காலச் சமய மரபுகள் தோன்ற ஆசீவகமே கால்கோளிட்டது.

 

3. கந்தழி (Infinity)

ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்பட்ட சுருள்வளைவே இந்தக் கந்தழி என்னும் ஆசீவகச் சின்னம் உலகியலைக் கடந்து மெய்ப்பொருளைத் தேடி அலையும் இயக்கநிலையினைக் குறிப்பது இந்தக் கந்தழியாகும். கணக்கியலில் உள்ள எண்ணிலி நிலை (infinity) யினைக் குறிப்பதாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சுருள் வளைவு எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்ட வெளியினுள் நிகழும் பல்வேறு தொடர் இயக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாக உள்ளது.

வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் இதனைக் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப் பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப்படுவதும் உண்டு.

இல்முயல்வோனும், மாணவனும், பொருள் முயல்வோனும் இந்தச் சின்னத்தினைப் பொருத்தி ஒழுகினர் என்பதே இச் சின்னத்தின் சிறப்பினை நமக்குத் தெளிவுறுத்துகிறது.

புதிர்நிலைகள் (Labyrinths / Mazes) எனப்படும் தொல்லியல் சின்னத்திற்கும் கந்தலிக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்யவேண்டியுள்ளது. புதிர்நிலையை “சம்சார பந்தத்திலிருந்தும் கர்ம வினைகளிலிருந்தும் விடுபட உதவும் அமைப்பாக” ஜெ.சி.கூப்பர் தன்னுடைய An Illustrated Encyclopedia of Traditional Symbols என்ற நூலில் சொல்லுகிறார்.

 

4. இருபுற முத்தலைக் கோல் (Double sided soolam)

ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் ஒரு முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் படத்தில் உள்ளது போல் வரையப்படும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு துவங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும். அவ்வழக்கமே இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடிக்கப் பட்ட சுவரில் இந்தக் குறியீட்டுச் சின்னத்தினை தமிழக மக்கள் வரை கின்றனர். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவெனில் பேரில்லங்களில் இந்த நிலை அருகி சிறு குடிசைகளிலும் ஊர்ப்புற வீடுகளிலும் மட்டுமே இதனை இன்றைய மக்கள் வரைகின்றனர்.

இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது.

இதுவே மாலவன் வழிபாட்டின் அடையாளமாக (நாமமாக)க் கருதப்படுகிறது. உயிர்களைக் காக்கும் மேல்நோக்கிய முனை சிவன் வழிபாட்டில் சிவசின்னமாகவும், பகைஞரைக் கொல்லும் கீழ் நோக்கிய முனை கொற்றவை வழிபாட்டில் கொற்றவையின் கீழ் நோக்கிய முத்தலைக் கோலாகவும் அறியப்படுகின்றது. வெண்கலத்தாலான கைச்சிலம்பிலும் இக்குறியைக் காணலாம். ஆசீவக மரபினரின் இல்லத்திற்கு வருகை தரும் பல்தரத்தோர்க்கும் இது ஒரு எச்சரிக்கைச் சின்னமாகவும், துறவிகளுக்கான ஓம்புதல் நிகழ்த்தப்படும் ஒழுக்கம் கொண்டவர்களின் வாழிடம் எனவும் அறிவிக்கும் அறிவிப்புச் சின்னமாகவும் இது பயன்பட்டது. கோவில் சுவர்களில் பல்லியின் வடிவம் போன்று உள்ள அமைப்பும் இச்சின்னமே.பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலத்திலும் யாண்டுங் காணப்பெறாத சிவன் வழிபாடு ஒரு ஓக நிலைத் தத்துவமே. இதில் ‘வளிமுதலா எண்ணிய மூன்று’ என மாதாநுபங்கியார் சுட்டிய மூலநாடி மூன்றையும் அவை கூடி நின்று மெய்ஞ்ஞானம் பெறும் நிலையினையும் குறிக்கும் ஒரு அடையாள வரைவே சிவ வழிபாடு. இதனை நச்சி ஓம்பியோர் ஆசீவக சின்னங்களைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் வெளிப்பாடே ஆசீவகத்தின், ‘துதிக்கையை உயர்த்திய யானை’யினைச் சிவன் தோலுரித்ததாகக் கதைக்கப்பட்டது. ஆனால் பண்டைத் தமிழகத்தின் முல்லை நில மக்களிடம் வழிபாட்டிலிருந்த மாலோன் வணக்கத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் யானையினைத் திருமால் தமது படைக்கலத்தால் (கந்தழியால்) காத்ததாகக் காப்பியம் கூறினர். இதுவே மரபுகள் மாறி மதம் தோன்றிப் பிணக்குகளை உருவாக்கியதற்குச் சான்று.

ஓக நெறியினை நாடிய பல துறவிகள் தமது கையில் ‘தண்டு’ எனும் கருவியை வைத்திருந்ததாக அறிகிறோம். இதுவும் நடுத்தலையில்லாத முத்தலைக்கோலின் எச்சமே என்பது காண்டற்றகும்.

இருபுற முத்தலைக்கோலின் மேற்புறம் சிவனுக்கும், கீழ்ப்புறம் கொற்றவை வழிபாட்டின் காலமுறை வளர்ச்சி பெற்றிட்ட காளி, சக்தி, என்று வழங்கப்பட்ட பெண் கடவுளர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே சக்தியும் சிவனும் இருபாதி ஒன்றாக இணைந்த வடிவினர் என வழங்கப்படுகிறது. ஓக நெறியில் கதிர், மதி எனும் இரு மூச்சுக்களும் வெவ்வேறாகப் பிரிந்து செயல்பட்டாலும் சுழுமுனை எனும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.ஆக ‘சாக்தம்’ ‘சைவம்’ எனும் இரு வழிபாடுகளும் ஆசீவகத்தின் சின்னத்தையே அடையாளமாகக் கொண்டு எழுந்தன. வைணவமும் முத்தலைக் கோலையும் கந்தழியையும் கொண்டே எழுந்ததாகப் புலனாகின்றது.

இருபுற முத்தரைக்கோள் ,ராக்காச்சி ,வஜ்ஜிரம்  என்று வழங்கி வரும் பண்டைய மனிதனின் முதல் குறியீடு இதுவாகும் . பொதுவாக  உயர்ந்த மனிதனைக் குறிக்கப் பட்ட"ஐ " குறியீட்டிலிருந்து பிற வரி வடிவங்கள் தோன்றி இருக்க வேண்டும் . இன்றும் நம் வீடுகளில் பொங்கல் பண்டிகையின் பொது வரையப்படும்  இந்தக் குறியீடு தமிழின் முதல் எழுத்து வடிவாக இருக்கலாம்.

 

5. ஐம்முக்கோணம் (Penta-traiangle)

ஆசீவகம் மாந்தர்கள் மட்டுமின்றிப் பல்லுயிர் வளன் பற்றியும் அக்கறை கொண்டிருந்தது. பண்டைய நாட்களின் செல்வவளம் ஒருவரது விளைநிலம், மனை சார்ந்த சொத்துக்களை விட அவர்களிடமிருந்த பசுக் கூட்டங்களைக் கொண்டே அளவிடப்பட்டது. செல்வத்தை மாடு எனும் சொல்லால் குறிப்பர். செல்வத்தை மதிப்பிடும் அளவுகோலாக வரையறைப் படுத்தப் பயன் பட்டதால் பசுக் கூட்டங்களும் மாடு என்ற சொல்லால் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாடை இருமாடை எனப் பொன்னிறையைக் கூட மாடு எனும் சொல்லின் வேர்ச்சொல்லையுடைய சொல்லால் குறித்தனர்.

அத்தகைய கால்நடைகளுக்குத் திடுமென ஏற்படும் பேரழிவு தரத்தக்க நோய்களுக்கு ஐந்திறமிக்க மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்வதுடன் அவ்வாறு செறிவூட்டப் பட்ட மருத்துவம் செய்யப்பட்ட கொட்டிலில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோய் அச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் சின்னமாக ஐந்து முக்கோணங்கள் ஒரு நேர் வரிசையில் வரையப்படும். ‘தற்போது கூட ஊர்ப்புறங்களில் மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீரருந்தும் தொட்டியிலும், கொட்டில்களிலும் இச்சின்னத்தினை வரைவதனைக் காணலாம். கால்நடை மருத்துவத்தில் ஐம்பூதக் கலப்பும் செறிவும் சரியான படிக் கண்காணிக்கப் படுவதனை இவ்வைந்து முக்கோணங்கள் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கோமாரி (கோமாற்றி) என்ற நோய் வரும்போதெல்லாம் ஊர்ப்புற மக்கள் இந்தச் சின்னத்தினை மாட்டுக்கொட்டிலில் இன்றும் வரைகின்றனர். இதனைக் கோமாறி எழுதுதல் என்று சேயாறு பகுதியில் வழங்குகின்றனர். இச்சின்னம்பற்றி விரிக்கிற் பெருகும். ஆதலால் இவ்வளவில் நிற்கிறோம். முக்கோணங்கள் நேர் வரிசையில் மட்டுமின்றி தலைகள் ஒன்றோடொன்று பொருந்தியவாறும் வரையும் வழக்கமும் இருந்தது.

 

6. முப்புள்ளி (Ellipsis) 

அஃஉ எனும் குறியீடு கொண்டது இச்சின்னம்.மொழி நூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக் குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவதாலும் (எடு. ‘க்’ எனும் எழுத்து ‘க்கு’ என உகரம் சேர்த்து ஒலிக்கப்படுவது.) அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு, இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னத்தின் குறியீடு சிறப்புடையதாகும்.

தமிழ் மொழியில் உள்ள இகரம் இம்முப்புள்ளியை ஒத்த ஒரு ஓகக் குறியீடே. இகரத்தில் ‘இ’என்று எழுதும் போது மூன்று வட்டப் புள்ளிகள் அமைவதைக் காணலாம். ஆனால் இகர நெடிலாகிய ‘ஈ’காரத்தில் தலைப்புப் புள்ளி தவிர்த்து ஏனைய இரு புள்ளிகளும் பயின்று வருகிறது. ஏனைய உயிர் எழுத்துக்கள் யாவும் ஒரு வட்டத்தினை ஆதியாகக் கொண்டே எழுதப் படுகின்றன.

அதாவது உயிர் எழுத்துக்களை எழுதத் துவங்கும் போதே ஒரு முழு வட்டம் போட்ட பிறகே எழுத இயலும். கவனிக்க: அ,இ,ஊ,ஏ,ஐ,ஓ போன்று. முதலில் வட்டம் வரைந்தால்தான் உயிர் எழுத்துக்களை எழுத இயலும். இது அண்ட (முட்டை) இயக்கத்தினைக் குறிக்கிறது. இயக்கம் தருபவை உயிர் எழுத்துக்களே. மெய்யெழுத்துக்களும் எண்ணுப் பெயர்களும் உகர ஒலியில் முடிகின்றன. சுழியம், ஆயிரம், இலக்கம், சங்கம், பதுமம், கோடி இன்னோரன்ன முழு வடிவங்கள் தவிர்த்து ஏனைய எண்ணுருக்கள் உகர ஒலியிலேயே முடிதல் காண்க. (எடு.) ஒன்று, இரண்டு,ஆக, உயிரும் மெய்யும் இரு புறமும் நிற்க, உயிர்ப்பும் ஞானமுமாகிய முப்புள்ளி இடையில் நிற்கும். இக்குறியீட்டின் சிறப்பு விவரித்தலரிது.

ஓக நெறியில் கதிர், மதி, சுடர் எனும் மூன்றையும், வளியில் இடை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நிலைகளையும் இம்முப்புள்ளி குறியா நின்றது.கௌமார சமயம் என அழைக்கபடும் குறிஞ்சி நிலத்துக் குமர மதத்தில் முருகனது கை வேலாக நிற்கும் படையும் இம்முப்புள்ளியின் பொது வரையறையாகும். குமர மதமும் ஆசீவத்திடம் இதனை இரவல் பெற்றே எழுந்தது.தமிழ் மொழியில் உள்ள ஆய்த எழுத்தினை ஒத்த இச்சின்னம் ஞானம் கூடும் நிலையினை அதாவது இயல்பான இரு கண்களுடன் மூன்றாவதாக அறிவுக் கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இந்த நிலை தனிநிலை (சிறப்பு நிலை) எனப்பட்டது. இந்த முப்புள்ளிக்கு முன்னதாக அகரத்தையும் பின்னதாக உகரத்தையும் சேர்த்து எழுதும் முறை பொது வடிவமாகும்.

ஆசீவக மரபில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் இருப்பிடம் இக்குறியீட்டாலேயே சுட்டப் பட்டது.எதனையும் எழுதத் துவங்கும் முன் ஓலைகளிலும் தாள்களிலும் இச்சின்னத்தைப் பதிவு செய்த பின்பே எழுதும் முறை உண்டு. சில காலத்திற்கு முன்பு வரை தொடர்ந்த இவ்வழக்கம், அம் முப்புள்ளிக்குப் பின்னால் வரும் உகரத்தை மட்டும் தலைப்பில் எழுதித் துவங்கும் முறையாகக் குறுகி விட்டது. இதனைத் தற்போது பிள்ளையார் சுழி என்று வழங்குகின்றனர்.

பிள்ளையார் சுழியுடன் எழுதத் துவங்கும் யாவரும் ஆசீவக மரபில் வந்தவர்களே என்பது தெளிவாகிறது.

 

7. புள்நகக் கீற்று

பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப் படுத்தப் பட்டன. நமது சேயாறு பகுதியில் உக்கல் என்ற ஊரின் ‘ஆனைக்கல்’ என வழங்கும் பாறையின் மீது இவ்வடிவம் உள்ளது. இக்கல்லின் பெயரே இவ்விடத்தின் ஆசீவகத் தொன்மையைத் தெளிவுறுத்துகிறது. திருக்கழுக்குன்றத்தின் மலையுச்சியில் கழுகு தன் அலகைத் தேய்த்த இடம் என்று சொல்லபடும் இடம் உண்மையில் புள்நகக் கீற்று அமைந்துள்ள இடம்தான்.

 

8. யானை

ஆசீவகத்தின் குறியீடாகக் கொள்ளப்பெறுவது ஆண் யானையாகும். யானை பிறக்கும்போது கருமையாகப் பிறக்கும். வளர வளர அது சாம்பல் நிறம் கொள்ளும். அதன்பிறகு சற்று நீல நிறம் கொள்ளும். ஒரு படிநிலையில் இருந்து மற்றொரு படிநிலைக்கு மாறும் இயற்கை நிகழ்வு இதுவாகும். இதன் காரணாக அசீவகத்தின் வண்ணக் கோட்பாட்டிற்கு ஒத்துவரும் அடையாளமாக யானை என்ற விலங்கு அமைந்துள்ளது.
பல ஐயனார் கோவில்களில் வெள்ளை யானை நிறுவப்பெற்றிருப்பது இவ்வடிப்படையில்தான். வெள்ளை நிறைநிலைக்கானது. யானை ஆசீவகத்தின் குறியீடு. ஆக வண்ணமயமான சமயமாக விளங்குவது ஆசீவகம் ஆகும்.

 

9. மாங்காய்க் கொத்து

பகவதி சூத்திரத்தில் சொல்லப்படும் மாங்கொட்டை-மாங்காய்த் தோல் ஐயனாருடன் தொடர்பு கொண்டவை. மற்கலி தன் இறுதி வேளையில் மாங்காயை வைத்திருந்ததாக ஃகோர்ன்லே குறிப்பது இதை உறுதிபடுத்துவதாக உள்ளது.

 

Reference:
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் by ஆதி. சங்கரன்

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

More from the section

மத அரசியல்-57: சிவன்
மத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை
மத அரசியல்-55: அய்யாவழி
மத அரசியல்-54: விசிஸ்டாத்வைதம்
மத அரசியல்-53: துவைதம்