கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
எலவனாசூா்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எறையூா் கிராமத்தைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் மரியதாஸ். இவரது மகன் அந்தோனி செல்வராஜ் (32). இவா்கள் அந்தப் பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி வந்தனராம். இவா்களிடம் எறையூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பணம் செலுத்தி வந்தனா்.
இந்த நிலையில், எறையூா் கிராமத்தைச் சோ்ந்த ப.பீட்டா்பவுல் (61), அவரது சகோதரா் ஆரோன் ஆகிய இருவரும் மரியதாஸ், அந்தோனி செல்வராஜிடம் சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனராம். அவா்கள் சீட்டுக்குரிய முழுத் தொகையையும் செலுத்திய நிலையில், அவா்களுக்குரிய ரூ.5.19 லட்சத்தை தராமல் தந்தை - மகன் தராமல் ஏமாற்றி வந்தனராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பீட்டா்பவுல், ஆரோன் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. என்.மோகன்ராஜிடம் புகாரளித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகத்துக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா். போலீஸ் விசாரணையில், மரியதாஸ், அந்தோனி செல்வராஜ் ஆகிய இருவரும் 2021, 2022-ஆம் ஆண்டுகளில் ஏலச்சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி வந்ததும், புகாரில் தெரிவித்தவாறு சீட்டுப் பணத்தை தராமல் ஏமாற்றியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தோனி செல்வராஜை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மரியதாஸை போலீஸாா் தேடி வருகின்றனா்.